ஸ்ரீராஜமாதங்கி நவராத்திரி

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஸ்ரீராஜமாதங்கி நவராத்திரி பற்றிய பதிவுகள் :

தை அமாவாசை முதல் (சியாமளா) இராஜமாதங்கி நவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது. அனைத்து சக்தி ஸ்தலங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது. முக்கியமாக ச்யாமளாவின் அம்சமாகத் திகழும் மதுரை மீனாக்ஷிக்கு சியாமளா நவராத்திரி விஷேசம் என்பது குறிப்பிடத்தக்கது.  

கலைத் தெய்வம் என்றே சொல்கிற சரஸ்வதி கையில் வீணை இருக்கிறது. வீணைதான் நம் ஸங்கீதத்துக்கே ஜீவநாடி என்பார்கள். அதனால் ஒவ்வொரு தெய்வத்துக்கும் உள்ள வீணைக்கென்று ஒரு பெயர் உண்டு.‘கச்சபி’ என்பது சரஸ்வதியின் வீணை. ‘விபஞ்ச்யா காயந்தீ’ என்ற ‘ஸெளந்தர்ய லஹரி’ஸ்லோகத்தில், சரஸ்வதியானவள் அம்பிகையின் ஸந்நிதியிலே சிவலீலைகளை வாயால் பாடிக்கொண்டே ‘விபஞ்சி’வாசிக்கிறாள் என்று ஆசார்யாள் வர்ணித்திருக்கிறார். ‘விபஞ்சி’ என்பது வீணைக்கு ஒரு பொதுப் பெயர்.

சங்கீத தேவதையாகச் சொல்லும்போது ராஜ மாதங்கி, ராஜ ச்யாமளா என்று பெயர் கூறுவார்கள். இவளும் ஸரஸ்வதியைப் போலவே கையில் வீணை வைத்துக் கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறது. “வீணா ஸங்க்ராந்த காந்த ஹஸ்தாம்”. நிறத்தில் மட்டும் அவளுக்கும் இவளுக்கும் நேர் வித்யாஸம். சரஸ்வதி நல்ல வெளுப்பு. இவளே சாம்பல் கருப்பு. அதனால்தான் ‘ச்யாமளா’ என்று பெயர்.

கடல்போல் விரிந்த ஞானத்திற்கும், உள்முகமான அறிவாற்றலுக்கும் மாதங்கி தேவியே அதிதேவதை. மனதில் தோன்றுவதை சாமர்த்தியமாக வெளிப்படுத்தும் நல்லாற்றலும், எதையும் கிரகிக்கும் திறனும், கிரகிப்பதைப் பிறர் விரும்பும் வண்ணம் வெளிப்படுத்தும் திறனும், ஸ்ரீமாதங்கியின் அருளாலேயே சித்திக்கும். மேலும், ஒருவர் பேசும் வாக்கியத்தின் மத்திமப் பகுதியே அவர் மனதில் நினைத்திருப்பதை வெளிப்படுத்துவதாக அமையும். இந்த மத்திமப் பாகத்துக்கும் மாதங்கி தேவியே அதிதேவதை. நுண்ணறிவுக்கும் அதை வெளிப்படுத்தும் திறனுக்கும் மனதை அறிவின் மூலம் கட்டுப்படுத்தி அம்பிகையிடம் லயிக்கச் செய்யும் ஆற்றலுக்கும் அம்பிகையின் அருள் அவசியம்.

தசமஹா வித்யைகளுள் ஒருவராகக் கருதப்பட்டாலும், இந்த தேவி, ஆற்றல் நிறைந்த மிகப் புனிதமான திருவுருவாகவே போற்றித் துதிக்கப்படுகிறாள். அனைத்து கேடுகளையும் தான் ஸ்வீகரித்துக் கொண்டு நன்மையை பிறருக்கு அருள்பவளே ஸ்ரீ மாதங்கி.

ச்யாமளா நவராத்திரி  நாட்களில் ச்யாமளா தேவியை வணங்கி கல்வி கடவுளான சரஸ்வதியின் அருளோடு சரஸ்வதி யோகத்தையும் பெற்று மகிழ்வோமாக!

ஸ்ரீசக்ரராஜசபை தர்பாரின் மந்திரிணீ ஸ்ரீராஜமாதங்கி தேவிக்கு  நவராத்திரி விழா தை அமாவாசை திதி 31.01.2022 முதல் தசமி திதி 11.02.2022 வரை நடைபெறுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top