தை அமாவாசையின் அற்புதங்கள் - அபிராமி பட்டர்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தை அமாவாசையின் அற்புதங்கள் பற்றிய பதிவுகள் :

திருக்கடவூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் அபிராமி பட்டர். இவர் அன்னை அபிராமி மீது மிகுந்தபக்தி கொண்டு எந்நேரமும் அன்னையைத் தியானித்துவந்தார். ஆனால், ஊராரில் பலர் இவர் ஒரு பித்தர் என்று நினைத்து ஏளனம் செய்வர். ஆனால் அதைப்பற்றி எவ்வித கோபமும் கொள்ளாமல் தம்முடைய கடமை அபிராமியை போற்றி வணக்குவதுதான் என்று கொள்கையை கொண்டிருந்தார்.  

அவர் அன்னை அபிராமி மீதும் அமிர்தகடேஸ்வரர் மீதும் பாடல்களை இயற்றி சன்னதியில் பாடி வரலானார்.  
ஒரு தை அமாவாசை தினத்தன்று தஞ்சையை ஆண்ட சரபோஜி மகராஜா பூம்புகார் சங்கமுகத்தில் நீராடிவிட்டு, திருக் கடையூர் ஆலயம் வந்தார். கோயிலில் இருந்த அனைவரும் சரபோஜி மன்னனுக்கு மரியாதை செலுத்தினர். அபிராமி சன்னிதியில் அமர்ந்து அன்னையின் வடிவழகில் ஆழ்ந்திருந்தார், அபிராமி பட்டர். 

மன்னர் அவரின் நிலையை அறிய அவரிடம், இன்று என்ன திதி?’ என கேட்டார். உலக சிந்தனை சிறிதும் இல்லாத அபிராமி பட்டர் தன் மனதில் அபிராமியின் முழுமதி திருமுகம் தெரிய ‘பவுர்ணமி’ என்று பதிலளித்தார். ஆனால், அன்றோ அமாவாசை! கோபமுற்ற மன்னன், இன்று பவுர்ணமி நிலவை காட்ட முடியுமா என்று கேட்க, அதற்கு அபிராமிபட்டர் முடியும் என்றார்.

இதனால் மேலும் கோபம் கொண்ட மன்னன், ‘இன்று இரவு நிலவு வானில் உதிக்காவிட்டால் உமக்கு சிரச்சேதம்தான்’ என்று கூறி சென்றுவிட்டார்.

சூரியன் மறைந்தது. அமாவாசை ஆதலால் வானில் நிலவும் இல்லை. உடனே அபிராமி பட்டர் கோவிலுக்குள் ஒரு குழி வெட்டி, அதில் தீ மூட்டினார். அதன்மேல் ஒரு விட்டத்தில் இருந்து 100 ஆரம் கொண்ட ஓர் உறியை கட்டி தொங்கவிட்டு அதன்மேல் ஏறி நின்று அபிராமி அன்னையை வேண்டி துதித்தார். 

‘இன்று நிலவு வானில் வராவிடில் உயிர் துறப்பேன்’ என்று சபதம் செய்தார். பின்பு, ‘‘உதிக்கின்ற செங்கதிர்’’ எனத்தொடங்கும் ‘‘அபிராமி அந்தாதி’’ பாடத்தொடங்கினார். ஒவ்வொரு பாடலும் முடியும்போதும் உறியின் ஒவ்வொரு கயிற்றை அறுத்து கொண்டே வந்தார். அப்போது 79–வது பாடலாக ‘‘விழிக்கே அருளுண்டு’’ எனத்தொடங்கும் பாடலை பாடி முடித்தார்.

உடனே அபிராமி பட்டருக்கு காட்சி கொடுத்த அன்னை அபிராமி, தனது தாடங்கம் (தோடு) ஒன்றை கழற்றி வானில் வீச, அது பல கோடி நிலவின் ஒளியை வெளிச்சமிட்டது. அமாவாசை அன்று வானில் நிலவு வந்தது.

‘‘தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடுக’’ என அபிராமி அன்னை பட்டரிடம் கூற, பட்டரும் ‘‘ ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை’’ என தொடர்ந்து 100 பாடல்கள் வரை பாடி அபிராமி அந்தாதியை நிறைவு செய்தார். 

மன்னரும், மக்களும் பட்டரை பணிந்தனர். பட்டருக்கு மன்னன் நிலபுலன்கள் பல அளித்தான். அதற்கான உரிமை செப்பு பட்டயம் பட்டர் சந்ததியினரிடம் இன்றும் இருக்கிறது. 

ஒவ்வொரு தை அமாவாசை அன்றும் திருக்கடையூரில் அபிராமி பட்டர் விழா நடக்கும்.. அன்றைய தினம் அபிராமி, தன் தோட்டினை ஆகாயத்தில் வீசி பவுர்ணமி உண்டாக்கிய நிகழ்ச்சியை பெருவிழாவாக நடத்துகிறார்கள். அபிராமி அந்தாதி 100 பாடல்களுக்கும் ஒவ்வொரு பலன் சொல்லப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top