நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தை அமாவாசை அன்று தர்ப்பணம் செய்ய ஏற்ற புண்ணிய தலங்கள் பற்றிய பதிவுகள் :
அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏற்ற திருத்தலங்கள் தமிழகத்தில் உள்ளன.
காசி, கயா போன்ற திருத்தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள் மாதம்தோறும் வரும் அமாவாசையன்று நமது ஊருக்கு அருகில் உள்ள புண்ணிய தலங்களுக்கு சென்று தர்ப்பணம் கொடுக்கலாம்.
அமாவாசை நாள்களில் புண்ணிய தலங்களுக்குச் சென்று தர்ப்பணம் கொடுப்பது மிகவும் புண்ணியத்தைத் தரும் பித்ரு தோஷத்தை நீங்கும். புனித தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து பித்ருக்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். இவ்வாறு செய்தால், அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைவதுடன், அவர்களுடைய ஆசிகளும் நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி.
காசி, கயாவிற்கு நிகராக தமிழ்நாட்டில் தை அமாவாசை அன்று சென்று வழிபட வேண்டிய திருத்தலங்கள் உள்ளன. முன்னோர் தர்ப்பணத்திற்காக மட்டுமின்றி அமாவாசையன்று விசேஷமாக தரிசிக்க வேண்டிய தலங்களும் உள்ளன. தை அமாவாசை வர உள்ள இந்த நேரத்தில் இந்த ஊர்களுக்கு அருகில் உள்ளவர்கள் இந்த ஆலயங்களுக்கு சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம்.
திருபுவனம்
'காசிக்கு நிகரான பலன் தரும்' என்று இறைவனே குறிப்பிட்ட அந்தத் தலம் திருபுவனம். வைகை நதியில் கரைக்கப்பட்ட அஸ்தி சாம்பலைப் பூவாக மாற்றியதால், இங்குள்ள இறைவனுக்கு ஸ்ரீபூவனநாதர், ஸ்ரீபுஷ்பவனநாதர் எனத் திருநாமங்கள் அமைந்ததாகச் சொல்வர். அம்பாளின் திருப்பெயர்- ஸ்ரீசௌந்தரநாயகி. இந்தத் தலத்துக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அதாவது, வடகிழக்காக அமைந்திருக்கும் ஆலயம் இது. எனவே, அமாவாசை என்றில்லாமல் எல்லா நாளுமே இங்கே பித்ரு காரியம் செய்வதற்கு ஏற்ற நாளாகக் கருதுகின்றனர் பக்தர்கள்!
தந்தையின் ஈமக் கடன்களைச் செய்து முடிப்பதற்காகக் காசிக்குச் செல்ல விரும்பினார் மைந்தன். ஆனால் பாவம் வழிச் செலவுக்குக்கூட அவரிடம் காசில்லை. ஆனாலும், காசிக்குச் செல்வதில் உறுதியாக இருந்தார் அவர். அன்றிரவு அவரின் கனவில் தோன்றிய ஈசன், காசிக்குச் செல்ல முடியவில்லையே என்று வருந்தாதே! இங்கேயுள்ள ஆலயத்துக்கு வந்து, அருகில் ஓடும் நதியில் உன் தந்தையின் அஸ்தியைக் கரைத்து, பித்ரு காரியத்தை நிறைவேற்று. காசிக்குச் சென்று காரியம் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ, அதே பலன் இங்கேயே கிடைக்கும் என அருளி மறைந்தார்.
கனவால் மெய்சிலிர்த்துக் கண் விழித்தவர், தென்னாடுடைய ஈசனின் பெருங்கருணையை எண்ணி மகிழ்ந்தார். விடிந்ததும், அருகில் உள்ள நதிக்கரைக்குச் சென்று, பித்ரு காரியங்களை நிறைவேற்றினார். இறுதியாக, அஸ்தியைக் கரைக்க நீரில் இறங்கினார். அப்போது, அஸ்தியானது நறுமணம் கமழும் பூக்களாக மாறியது. இறைவனும் அருளை அள்ளி வழங்க, முன்னோரின் ஆசீர்வாதமும் அந்த மைந்தருக்குக் கிடைத்தது என்கிறது ஸ்தல புராணம்.
திலதர்ப்பணபுரி
திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பூந்தோட்டம். இங்கு தான் சரஸ்வதி கோயில் அமைந்துள்ளது. இங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திலதர்ப்பணபுரி. தற்போது திலதைப்பதி என்றும், செதலப்பதி என்றும் அழைக்கப்பெறுகிறது. இந்தத் தலத்தில் விநாயகர் மனித முகத்துடன் ஆதி விநாயகராகக் காட்சி தருகிறார். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த தலங்களில் ஒன்று.
நாம் தர்ப்பணம் கொடுக்கும் முன்னோர்களுக்கு இறைவன் முக்தியைத் தருவதால், முக்தீஸ்வரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது. இந்தத் தலத்தில் சூரியனும் சந்திரனும் அருகருகில் இருப்பதால், நித்திய அமாவாசை திருத்தலம் என்ற சிறப்பும் இந்தத் தலத்துக்கு உண்டு. காசியில் கங்கை நதி வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாய்வதுபோல் இங்கே காவிரியின் துணை நதியான அரசலாறு, வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாய்வதால், இத்தலம் காசிக்கு நிகராகப் போற்றப்படுகிறது.
திருவெண்காடு
சீர்காழி - பூம்புகார் சாலையில், சீர்காழியில் இருந்து சுமார் 13 கி.மீ.தொலைவில் திருவெண்காடு அமைந்திருக்கிறது. நவகிரகங்களில் புதனுக்கு உரிய தலம் திருவெண்காடு. காவிரிக்கரையில் காசிக்கு நிகராக அமைந்திருக்கும் 6 சிவ க்ஷேத்திரங்களில் திருவெண்காடும் ஒன்று. இந்தக் கோயிலில் அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என்று மூன்று தீர்த்தங்கள் இருக்கின்றன. சந்திர தீர்த்தத்தின் அருகில் உள்ள ஆலமரத்தின் அடியில் ருத்ர பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது. தை அமாவாசை நாளில் இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, ருத்ர பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் ஆலமரத்தின் அடியில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், நம் முன்னோர்களின் ஆசிகள் நமக்குக் கிடைக்கும்.
திருவிளமர்
திருவாரூரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் இந்தத் தலம் தற்போது விளமல் என்று அழைக்கப்படுகிறது. பதஞ்சலி முனிவர் வழிபட்ட தலம். சிவபெருமானின் ஆடலை தினமும் கண்டு அவரது திருவடியிலேயே இருப்பவர் பதஞ்சலி முனிவர். அவர் தினமும் நடராஜப் பெருமானின் நடனத்தைக் கண்டபின்தான் உணவு உட்கொள்வார். இவரும் வியாக்ரபாத முனிவரும் இறைவனின் அஜபா நடனத்தையும், ருத்ர தாண்டவத்தையும் என்றென்றும் காண வேண்டி வழிபட்டனர். மேலும் திருவடி தரிசனத்தை காண்பித்து அருள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இவர்கள் இருவருக்கும் இத்தலத்தில் சிவபெருமான் தனது திருப்பாதம் காட்டி நடனம் ஆடியருளினார். இந்தத் தரிசனத்தை விஷ்ணு, பிரம்மா, முசுகுந்த சக்கரவர்த்தி மற்றும் தேவாதி தேவர்கள் கண்டு களித்தனர். சிவபெருமான் காட்டிய ருத்ரபாதத்துக்கு இன்றளவும் தினமும் பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எனவே இத்தலம் திருவடி க்ஷேத்திரம் என்றும், சிவபாத ஸ்தலம் என்றும் போற்றப்படுகிறது. அமாவாசை நாளில் திருவாரூர் கமலாலயத் தீர்த்தத்தில் நீராடி, பின்னர் விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலுக்கு வந்து, முன்னோருக்கு தர்ப்பணம் செய்து, விளமல் பதஞ்சலி மனோகரரை வழிபடுவது மிக சிறப்பாக கருதப்படுகின்றது.
திருக்கண்ணபுரம்
திருவாரூரில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கண்ணபுரம். பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்றான இந்தத் தலத்தில் பெருமாள் ஸ்ரீநீலமேகப் பெருமாள் என்ற திருப்பெயருடன் காட்சி தருகிறார். உற்சவர் ஸ்ரீசௌரிராஜப் பெருமாள். ஒன்பது படித்துறைகளுடன் திகழும் இந்தத் தலத்தின் நித்ய புஷ்கரணியும் விசேஷமானது. இதன் படித்துறைகள் ஒன்பதும் நவகிரகங்களைக் குறிப்பதாக ஐதீகம். இந்த புஷ்கரணியில் நீராடிவிட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால், முன்னோரின் ஆசிகள் கிட்டும் என்பது ஐதீகம். அப்படிச் செய்ய இயலாதவர்கள், நித்ய புஷ்கரணியில் எள்ளைத் தெளித்துப் பிரார்த்தித்தாலே போதும்; முன்னோரின் ஆசியும், பெருமாளின் அனுக்கிரகமும் கிடைக்கும்.
ராமேஸ்வரம்
இந்தியாவில் உள்ள பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் பித்ரு வழிபாட்டுக்கு உகந்த தலங்களில் முக்கியமான ஒன்று. ராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க வேண்டி, ராமபிரான் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட திருத்தலம். இந்தத் தலத்தில் உள்ள தீர்த்தங்களில் அக்னி தீர்த்தம், பித்ரு தோஷத்தைப் போக்கும் ஆற்றல் கொண்டது. இந்த அக்னி தீர்த்தத்துக்குப் பெயர் வந்தது பற்றி ஒரு புராண வரலாறு சொல்லப்படுகிறது. ராமபிரானின் உத்தரவின்படி சீதா தேவியார் அக்னி பிரவேசம் செய்தபோது, சீதா தேவியை தீண்டிய தோஷம் நீங்க அக்னி பகவான் இங்குள்ள கடலில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றதால், இந்தத் தீர்த்தத்துக்கு அக்னி தீர்த்தம் என்ற பெயர் ஏற்பட்டது. ராமேஸ்வரம் தீவின் தென் பகுதியில் உள்ள தனுஷ்கோடியின் கிழக்குக் கடற்கரைப் பகுதியே அக்னி தீர்த்தமாக புராணங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது. பிற்காலத்தில் தனுஷ்கோடி கடல் சீற்றத்துக்கு ஆளாகப்போவதை தமது தீர்க்க தரிசனத்தால் உணர்ந்த ஸ்ரீஆதிசங்கரர், அந்த அக்னி தீர்த்தத்தை எடுத்து இப்போது ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம் உள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்ததாகச் சொல்லப்படுகிறது. இங்கே ஆடி, புரட்டாசி, தை அமாவாசை மட்டுமல்லாமல், ஒவ்வொரு அமாவாசையன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர் வழிபாடு செய்து, பித்ரு தோஷம் நீங்கப் பெறுகின்றனர்.
திருப்புல்லாணி
ராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள தலம். இந்தத் தலத்தில் உள்ள ஆதிஜகந்நாத பெருமாள், தசரதருக்கு புத்திர பாக்கியம் அருளியதால், பெரிய பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். இலங்கைக்கு பாலம் அமைக்க அருகில் இருந்த சேதுக்கரையில் முகாம் இட்டிருந்த ராமபிரான், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து சயனக்கோலத்தில் திருக்காட்சி அருள்கிறார். இந்தத் தலத்தில் சேதுக்கரையில் உள்ள தீர்த்தம் ரத்னாகர தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தீர்த்தத்தில் நீராடி பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷம்!. சீதை லட்சுமணர் யாருமில்லாமல் காட்சி தருகிறார் ராமர். ராமபிரான் இங்கு தங்கியிருந்த காலத்தில், சீதாதேவி ராவணனால் இலங்கையில் சிறைவைக்கப்பட்டிருந்தார். லட்சுமணனோ, ராமர் சயனம் கொள்ள ஆதிசேஷனாகவும் மாறிவிட்டபடியால், சீதை மற்றும் லட்சுமணரை இந்தக் கோயிலில் நாம் தரிசிக்க முடியாது.
தீர்த்தாண்டதானம்
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தீர்த்தாண்டதானம். இங்கே ஈசனின் திருநாமம் ஸ்ரீசர்வதீர்த்தேஸ்வரர். முன்னோர் ஆராதனை என்பது மிகவும் முக்கியமான வழிபாடு. முன்னோர் ஆராதனை செய்யச் செய்ய, வாழ்க்கையில் அனைத்து நன்மைகளும் உண்டாகும் என்று ராமபிரானுக்கு அகத்தியர் அருளினார். அதன்படி, ஓர் அமாவாசை நாளில் பித்ருக்களுக்கான கடனைச் செய்து, சிவபெருமானின் பேரருளைப் பெற்றார் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி. ஆடி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசை நாளில், இந்தத் தலங்களில் தர்ப்பணம் கொடுப்பது கூடுதல் பலனைக் கொடுக்கும்.
பவானி கூடுதுறை
பவானி கூடுதுறை ஈரோடு மாவட்டத்தில் உள்ளது. இந்த கூடுதுறையில் கோயில் கொண்டிருப்பவர், ஸ்ரீசங்கமேஸ்வரர். இங்கு ஒருமுறை குளித்துச் சென்று, ஸ்ரீசங்கமேஸ்வரரை வணங்கினால் முக்தி நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அம்மன், நதி, தலம் மூன்றுக்கும் ஒரே பெயர். பார்வதியின் திருநாமங்கள் பலவற்றுள் பவானியும் ஒன்று. இந்தப் பெயரே நதியின் பெயராகவும், தலத்தின் பெயராகவும் அமைந்துள்ளது சிறப்பு.
கருங்குளம்
திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது கருங்குளம். மார்த்தாண்டேஸ்வரன் என்ற மன்னர், தாமிரபரணிக் கரையில் இருந்த கருங்குளம் என்ற பகுதியை ஆட்சி செய்து வந்தார். தினமும் சிவபூஜை செய்ய விரும்பிய மன்னரின் கனவில் தோன்றிய சிவபெருமான்,தாமிரபரணிக் கரையில் ஆலயம் அமைத்து வழிபடுவாயாக என்று கூறினார். மன்னரும் அப்படியே ஆலயம் அமைத்து வழிபட்டார். இந்த நிலையில், பக்கத்து நாட்டை ஆட்சி செய்து வந்த மன்னர் சிங்கநாதன், தீராத வயிற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். எந்த வைத்தியராலும் குணப்படுத்த முடியவில்லை. ஒருநாள் மன்னரைச் சந்தித்த முனிவர் ஒருவர், முன் ஜன்மத்தில் நீ யாரோ ஒரு மகரிஷியின் சாபத்துக்கு ஆளாகி, இன்றுவரை அதற்கான பலனை அனுபவித்து வருகிறாய். கருங்குளத்து ஈசனை தரிசித்துப் பிரார்த்தனை செய்தால், சாபம் நீங்கப் பெறுவாய் என்றார். அதன்படி இங்கு வந்த மன்னர், சிவபெருமானை தரிசித்துப் பிரார்த்தித்தார். சாபம் நீங்கப் பெற்று, வயிற்றுவலியில் இருந்து மீண்டார் என்கிறது தல வரலாறு. மலையடிவாரத்தில் அழகுற கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீமார்த்தாண்டேஸ்வரர். அம்பாளின் திருநாமம் - ஸ்ரீகுலசேகரநாயகி. முன் ஜன்ம சாபம் நீக்கிய தலம் என்பதால், தை அமாவாசை நாளில் பித்ருக்கள் கடன் செய்வதற்கு உகந்த தலம் இது. தை அமாவாசை நாளில் இங்கு வந்து, தாமிரபரணியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால், பித்ரு தோஷங்களும் தீராத நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
திருச்செந்தூர்
தமிழ்கடவுள் முருகன் சூரனை சம்ஹாரம் செய்து வாகனமாகவும் கொடியாகவும் கொண்ட திருத்தலம் திருச்செந்தூர். முருகப்பெருமானின் படைவீடுகளில் கடற்கரையில் அமைந்திருக்கும் ஒரே தலம் திருச்செந்தூர். காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துகளும் இந்தத் தலத்தில் தீர்த்தங்களாகித் திகழ்வதாகக் கூறப்படுகிறது. இவற்றில் பலவும் மணல் மூடி தூர்ந்துவிட்டனவாம். தற்போது, சமுத்திரத்திலும் கந்த புஷ்கரணி எனப்படும் நாழிக் கிணற்றிலும் மட்டுமே பக்தர்கள் நீராடி வருகிறார்கள். திருச்செந்தூரில் இருந்த 24 தீர்த்தங்களில் தென்புலத்தார் தீர்த்தமும் ஒன்று என்றும், அந்தத் தீர்த்தத்தில் மூழ்கி, பித்ருக்களுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுப்பதால், பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவதுடன், அவர்களுடைய ஆசீர்வாதமும் நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே ஆடி, தை மற்றும் மஹாளய அமாவாசை புண்ணிய தினங்களில், இங்கு வந்து பித்ரு ஆராதனை செய்வது சிறப்பு என்பது ஐதீகம்.
கன்னியாகுமரி
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ள புண்ணிய தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டு தோறும் தை அமாவாசை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். தை அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் சாபங்கள் நீங்கும் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். எனவே தை அமாவாசை திங்கட்க்கிழமை கடைபிடிக்கப்பட உள்ள நிலையில் அருகில் உள்ள புண்ணிய தலங்களுக்கு சென்று புனித நீராடி தர்ப்பணம் அளித்து வழிபடலாம்.