அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் பற்றிய பதிவுகள் :

சொல்லின் செல்வர், வாயு புத்திரன், மாருதி, அஞ்சனை மைந்தன், சிரஞ்சீவி எனும் நாமங்களால் பேப்றப்படுபவர், ஆஞ்சநேயர்.

ராமபக்தனான அனுமன் யாராலும் சாதிக்க முடியாத காரியங்களையும் சாதிக்கும் வல்லமை பொருந்தியவர். அவரை மனதார துதித்து சரணடைந்தால், கிடைத்தற்கரிய பேறுகளை அளித்து கிரகதோஷ பாதிப்புகளில் இருந்தும் நம்மைக் காப்பார்.
அவர் எட்டு சிறப்பு அம்சங்களைக் கொண்ட அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயராக சேவை சாதிக்கும் தலம், கோவை பீளமேடு, முதலில் அந்த அஷ்ட அம்சங்கள் என்னென்ன என்பதைப் பார்த்துவிடுவோம்.

வரம் தரும் வலது கை: 

ஆஞ்சநேயரின் வலதுகை, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அஞ்சேல்' என அபயம் அளிக்கும் வகையில் பக்தர்களின் பயத்தைப் போக்கும் அபயகரமாக உள்ளது.

இடது கையில் கதாயுதம்: 

ஐந்து வகையான ஆயுதங்களில் கதை எனும் ஆயுதம் சிறந்ததென கருதப்படுகிறது. அதை தனது இடது கையில் கொண்டுள்ளார். பக்தர்களின் மனதில் இருக்கும் காமம், குரோதம், மதம், மாச்சரியம் போன்ற எதிரிகளை அழிக்கவல்லது இந்த கதாயுதம். எனவே ஆஞ்சநேயரை சேவிக்கும் பக்தர்களுக்கு உள் எதிரியும் வெளி எதிரியும் இல்லை. தன்னை பணியும் பக்தர்களுக்கு எந்தவிதமான தோல்விகளும் ஏற்படாதவதறு பார்த்துக் கொள்கிறார். சகல காரியங்களிலும் வெற்றியைக் கொடுக்கிறார்.

மேற்கு நோக்கிய திருமுகம்: 

ராவணனுடன் ஏற்பட்ட யுத்தத்தில் ராமர், லட்சுமணன் மற்றும் அவருடைய படைவீரர்கள் அனைவரும் மயங்கிக் கிடந்த நிலையில், அவர்களுடைய மயக்கத்தைப் போக்கவல்ல அருமருந்தான சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்து வந்து அருஞ்சாதனை படைத்தவரல்லவா ஆஞ்சநேயர்! அந்த சஞ்சீவி மலையின் ஒரு பாகமான மேற்குத் தொடர்ச்சி மலையை நோக்கிப் பார்க்கும் ஆஞ்சநேயரின் திருமுகம், பக்தர்களின் நோய்களைத் தீர்க்கும் வல்லமை பெற்றதாகும்.

தெற்கு நோக்கிய கால்கள்: 

மரணத்திலிருந்து யாரும் தப்ப முடியாது. இறப்பிற்குப் பொறுப்பு வகிப்பவர் எமதர்மன். அவருக்குரிய திசை தெற்கு தென் திசைக்கு அதிபதியான எமனை நோக்கி தன் கால்களை வைத்துள்ளார். இந்த ஆஞ்சநேயரை சேவிக்கும் பக்தர்களை எமபயத்திலிருந்தும், விபத்துக்கள் ஏற்படாதவாறும் காத்தருள்வார்.

வடக்கு நோக்கிய வால்: 

எண்சாண் உடம்பிற்கு தலையே பிரதானம். ஆனால் ஆஞ்சநேயருக்கு அவருடைய வால் பகுதியே தலைசிறந்தது. இத்தலத்தில் ஆஞ்சநேயரின் வால்பகுதியை ஆரம்பம் முதல் முடிவு வரை பக்தர்கள் முழுமையாக தரிசிக்கலாம். இதனால் நவகிரக தோஷங்கள் அடியோடு நீங்குகின்றன. செல்வத்திற்கு அதிபதியான குபேரனுக்கும் மகாலட்சுமிக்கும் உரியது வடக்குதிசை, ஆஞ்சநேயரின் வடக்கு நோக்கிய வால், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு குபேரனின் ஆசியால் அழியாத சொத்துகள் கிடைக்கவும் அருள்புரியும்.

ருத்ராம்சம்: 

பெருமாள் ராமாவதாரம் எடுத்தபோது சிவனே ஆஞ்சநேயராக தோன்றி சேவை செய்தார். ருத்ரவீரியம் எனப்படும் சிவபெருமானின் ஆற்றல்கள் அனைத்தும் ஆஞ்சநேயரிடம் உள்ளன. ஆஞ்சநேயரும் சிவபெருமானும் ஒன்றே என்பதற்கு சான்றாக சிவலிங்கத்திற்கு மத்தியில் இந்த ஆஞ்சநேயர் இடம் பெற்று அருள்பாலிக்கிறார். இந்த ஆஞ்சநேயரை வணங்கினால் சிவபெருமானை வணங்கிய பலன் கிட்டும்.

லட்சுமி கடாட்சமான அனுக்ரஹம்: 

திருமலையில் ஏழுமலையானின் இதயத்தில் மகாலட்சுமி வீற்றிருந்து பக்தர்களுக்கு அனுக்ரஹம் செய்கிறார். இங்கே ஆஞ்சநேயரின் வலது உள்ளங்கையில் மகாலட்சுமி அமர்ந்து இருக்கிறார். இவரை சரணடைந்த பக்தர்களுக்கு அனைத்து ஐஸ்வரியங்களும் கிடைக்கின்றன.

நேத்ர தீட்சண்யம்: 

இந்த ஆஞ்சநேயரின் கண்களில் காலை நேரத்தில் சூரிய பிரகாசம் பளிச்சிடுகிறது. மாலைநேரங்களில் சந்திரன் குளுமையை உணரமுடிகிறது. இத்தலத்தில் எந்த இடத்தில் நின்று தரிசனம் செய்தாலும் உயிரோட்டமுள்ள ஆஞ்சநேயரின் அருள் பார்வையை உணரமுடிகிறது.

இங்குள்ள உற்சவ விக்ரகங்கள், இந்த ஆலயம் உருவாவதற்கு முன்பிருந்தே பூஜிக்கப்பட்டு வந்த சிறப்புக்குரியவை. ஞானானந்தகிரி சுவாமிகளின் பிரதான சீடர்களுளள் ஒருவரான ஹரிதாஸ்கிரி சுவாமிகள் தாம் நீணட காலமாக பூஜையில் வைத்திருந்த ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் விக்ரகங்களையும், சாளகிராமத்தையும் வைகானச பரம்பரையைச் சேர்ந்த ஒரு பக்தரிடம் கொடுத்து, இவற்றை வழிபட்டு வா! ஒரு காலகட்டத்தில் இப்பகுதியில் ஓர் ஆஞ்சநேயர் ஆலயம் அமையும். அதில் இந்த விக்ரகங்களை பிரதிஷ்டை செய் எனக் கூறினார்.

சுவாமிகள் அனுகிரகத்தின்படி கோவை பீளமேடு அவினாசி ரோட்டின் அருகே அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் ஆலயம் கட்டப்பட்டது. அவரது ஆணைப்படி அந்த விக்ரகங்களையும் சாளகிராமத்தையும் ஆஞ்சநேயர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்து 2004ம் ஆண்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டது.

அச்சமயம் நான்கு வருடமாக மழை இல்லாமல், வறட்சியின் பிடியில் கோவை சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. அதனால் 48 நாட்கள் நடைபெற்ற மண்டல பூஜையின்போது, மழைக்காக சிறப்பு வழிபாடுகளும் செய்யப்பட, மக்களை குளிர்விக்கும் வண்ணம் பெருமழையை பெய்வித்து, நீர்நிலைகள் நிரம்பிவழியும்படி அனுகிரகம் செய்தார் இந்த ஆஞ்சநேயர்.

இடுப்பில் கத்தியுடன் போர்க்கோலத்தில் கருவறையில் காட்சி தருகிறார். அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர். இதுபோன்ற தோற்றத்தில் ஆஞ்சநேயரின் தரிசனம் கிடைப்பது அபூர்வம் என்கின்றனர்! மகாவிஷ்ணுவின் அம்சமான நெல்லிமரம் தலவிருட்சமாக விளங்குகிறது. தினசரி ஆறு கால பூஜைகள் வைகானச ஆகமப்படி நடந்து வருகின்றன.

சனிக்கிழமைகளிலும், மூல நட்சத்திர நாளிலும் சிறப்பு அலங்காரமும், பூஜைகளும் செய்யப்படகின்றன. சித்திரை முதல் நாள், புரட்டாசி சனிக்கிழமைகள், மார்கழி முப்பது நாட்கள், தை முதல்நாள் ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்பட்டாலும் மார்கழி அமாவாசையன்று கொண்டாடப்படும் ஆஞ்சநேய ஜெயந்தியே பெருந்திருவிழாவாகும். அன்று புஷ்பாங்கி சேவை நடைபெறும்.

இத்தலத்தில் சேவை சாதிக்கும் அனுமன் அலங்காரப் பிரியன். தமிழ் வருடப்பிறப்பன்று 10008 கனிகளால் அலங்கரிக்கப்பட்ட பழக்காப்பு அலங்காரம். புரட்டாசி முதல் சனிக்கிழமையன்று 10008 வடைகாப்பு அலங்காரம், இரண்டாவது சனியன்று செந்தூரக்காப்பு அலங்காரம், மூன்றாம் சனியன்று ரோமங்களுடன் கூடிய வானர உருவம், 4வது சனிக்கிழமை முத்தங்கி சேவை, தை முதல் நாள் கரும்பு வன அலங்காரம் என அருள்பாலிக்கும் அழகைக் காண கொடுத்து வைத்திருக்க வேண்டும். இதுதவிர வெண்ணெய்க் காப்பு, ராஜ அலங்காரமும் இவருக்குச் செய்யப்படுகிறது.

கடன் தொல்லை, தொழில் மந்தம், உடல்நல பாதிப்பு, குழந்தையின்மை போன்ற குறைபாடுகள் நீங்க இந்த அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயரிடம் வேண்டிக்கொண்டு பலன் பெற்றோர் ஏராளம். குழந்தைப்பேறுக்காக வேண்டிக்கொண்டவர்கள், குழந்தை பெற்ற பின், அக்குழந்தையை ஆஞ்சநேயர் முன் கிடத்தி தீர்த்த பிரசாதம் பெற்று கதாயுதத்தால் ஆசிபெறும் காட்சியை இங்கு அடிக்கடி காணலாம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top