கிரிவலம் என்றால், மலையைப் பிரதட்சிணம் செய்து வருவது. அதாவது, கிரி என்றால் மலை, வலம் என்றால் மெதுவாக மலையை சுற்றுதல் என்று பொருள். அதனால் மலையை சுற்றி வருவது கிரிவலம் என்று அழைக்கப்படுகிறது. மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படுவது புனித மலையாக கருதும் மலையையோ அல்லது கோயில் அமைந்த மலையையோ வலம் வருவதாகும்.
தமிழகத்தில் இவ்வாறு பல இடங்களில் பெரும்பாலும் பௌர்ணமி நாளன்று மலைவலம் வரும் நிகழ்வு நடந்தாலும், குறிப்பாக எல்லோருக்கும் நினைவுக்கு வருவது திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சல மலையை பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வாகும். அங்கு பல சித்தர்களின் ஜீவ சமாதிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அம்மலையில் சக்தி அதிர்வலைகள் அதிகமாகி மலையைச் சுற்றி வருவதால் இறை அருளும், மகான்களின் ஆசியும் பக்தர்களுக்கு கிடைக்கின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பௌர்ணமியன்று ஏன் கிரிவலம் செல்ல வேண்டும்?
பௌர்ணமியன்று வலம் வருவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மனதை ஆள்பவர் சந்திர பகவானாவார். அதனால் தான் அவர் மனோகாரகன் என அழைக்கப்படுகிறார். சந்திரன் என்றாலே வசீகரம் என்று தான் அர்த்தம்.
உலகில் 84 லட்சம் உயிரினங்கள் இருக்கின்றதாக வேதங்கள் கூறுகிறது. இவைகளுக்கு உயிர்ப்பு ஆற்றல் கிடைக்கக்கூடிய நாள் தான் ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி. அந்த குறிப்பிட்ட நாளில் கிரிவலம் வந்தால் உடலின் அகர்ஷன சக்தி அதிகரிக்கும். ஆத்ம பலம் பெறும்.
அந்நாளில் மலையில் இருக்கக்கூடிய தாவரங்கள், மூலிகைகள், உயிர் ஆற்றல் உள்ள ஜீவ சமாதிகள், சித்தர்களின் அகர்ஷன சக்திகள் மூலமாக நம்முள் நல்ல மாற்றத்தை கொடுக்கும்.
எப்படி கிரிவலம் செல்ல வேண்டும்?
பிரம்ம முகூர்த்தத்தில் கிரிவலம் வந்தால் நாம் விரும்பும் சித்திகள் நம்மை வந்தடையும்.
நள்ளிரவில் கிரிவலம் வந்தால் அஷ்டமா சித்திகள் அனைத்தும் கிடைக்கும்.
கிரிவலம் செல்லும்போது வேகமாக செல்லாமல், கையில் விளக்கு வைத்து பொறுமையாக எப்படி நடந்து வருவார்களோ, அப்படி தான் வர வேண்டும்.
இறை நினைவுடன், உங்கள் மந்திரத்தை ஜெபித்தவாறு வலம் வாருங்கள். பொழுது போக்காகவோ, நட்பு உறவுகளுடன் அரட்டை அடித்தவாறோ, சுற்றுலா செல்வது போன்ற மனப்பான்மையுடன் செல்லாதீர்கள்.
அகத்தில் ஜோதிவடிவாய் ஒளிரும் அந்த சிவனே ஸ்தூலத்தில் மலையாய் அங்கே நிற்கிறது என்கிற உணர்வுடன் வலம் வாருங்கள்.
ஆண்களாக இருந்தால், மேலாடை இல்லாமல் கிரிவலம் செல்வது நல்லது. மேலும், பட்டு அல்லது கதர் ஆடையை அணிந்து கிரிவலம் வந்தால், நல்ல ஆற்றலை நீங்கள் பெற முடியும்.
கிரிவலம் செல்வதால் ஏற்படும் நன்மைகள்:
செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும்.
உடலின் ஆரோக்கியம் மேம்படும்.
சித்தர்களின் அருளானது கிடைக்கும்.
பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.