அரச மரம் இருக்கும் இடத்தில் மும்மூர்த்திகள் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. அரச மரத்தின் அடிப்பக்கம் பிரம்மா, நடுமரம் விஷ்ணு, கிளைகள் கொண்ட மேற்பாகம் சிவன் என்பர். இம்மரம் மகாவிஷ்ணுவின் வலது கண்ணிலிருந்து தோன்றியது.
எனவே இந்த மரத்தை எக்காரணத்தைக் கொண்டும் வெட்டுவதும், அதன்மேல் ஏறுவதும், கிளைகளை ஒடிப்பதும் தகாத செயல்கள் ஆகும். அரச மரத்திற்கு “அஸ்வத்தா’ என்ற பெயரும் உண்டு. அஸ்வத்தா என்றால், ”வழிபடுபவர்களின் பாவத்தை மறு நாளே தீர்ப்பது’ என்று பொருள்.
இந்த அரச மரத்தை திங்கட்கிழமையில் வரும் அமாவாசையன்று விரதம் கடைப்பிடித்து வழிபட்டால் வாழ்வில் வசந்த ராகம் பாடும்; வளமான வாழ்வு கிட்டும். காலை வேளையில் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் நூற்றியெட்டு முறை வலம்வந்து வணங்கினால் குழந்தை பாக்கியம் கிட்டும். மழலைச்செல்வம் கேட்க அரசமர வழிபாடு போல் வேறு எதுவும் இல்லை.
அரசமர நிழல்படுகின்ற நீர்நிலைகளில் வியாழக்கிழமை அன்றும் அமாவாசை அன்றும் நீராடுவது திரிவேணி சங்கமத்தில் நீராடுவதற்குச் சமம்.
சோமவார அமாவாசை என்றாலே நம்முன் அரசமரம் தோன்றும். இந்த நன்நாளில் அரசமரத்தை 108 பிரதக்ஷணம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பிரதக்ஷண முடிவில் ஒரு பழமோ இனிப்போ சமர்ப்பிக்க வேண்டும். பிறகு பூஜை முடிந்தவுடன் தூப தீபம் காட்டி பூஜை செய்து வைத்தவருக்கும் நம்மால் முடிந்தவரை தக்ஷிணை கொடுக்க வேண்டும்.
இதுபோல் சோமவார அமாவாசை விரதம் மூன்றாண்டுகளாவது செய்ய கைமேல் பலன் கிடைக்கும். பித்ருக்களை வழிபட்டு அவர்கள் ஆசி பெற சோமவார அமாவாசை மிகச்சிறந்த ஒரு நாள். வடநாட்டில் அரசமரத்தை வெள்ளை நூலினல் 108 சுற்று சுற்றி வருவார்கள்
“ஆயுர்விருத்தி பகவத் தஸ்யவர்த்தந தேஸர்வ ஸம்பத்’ என்று பத்ம புராணம்சொல்கிறது. அரச மரத்தைப் பார்த்ததும் வணங்கியவருக்கு ஆயுள் வளரும்; செல்வ வளம் பெருகும். கோவில்களில் உள்ள அரச மரத்திற்கு இன்னும் அதிகமான சக்தி உண்டு. இந்த அரச மரத்தடியில் விநாயகப் பெருமான் எழுந்தருளியிருப்பார். அத்துடன் நாகர் சிலைகளும் அங்கு இருக்கும். இதனால் இது தோஷ நிவர்த்தி மரமாகவும் கருதப்படுகிறது.
அரச மரத்தை காலை வேளையில் ஏழு மணிக்கு முன் வலம் வருவது சிறப்பு. சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் மரத்தைத் தொட்டு வழிபட கூடாது. சனிக்கிழமையன்று அரச மரத்தடியில் ஸ்ரீலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம்.
அரச மரத்தைச் சுற்றும்போது கீழ்க்கண்ட சுலோகத்தைச் சொல்லிக்கொண்டே வலம் வந்தால் கூடுதல் பலன் கிட்டும்.
“மூலதோ ப்ரும்மரூபாய
மத்யதோ விஷ்ணு ரூபிணே
அக்ரத் சிவரூபாய
வ்ருக்ஷ ராஜாயதே நம!’
இம்மரத்திலிருந்து 30 மீட்டருக்குள் எந்த ஒரு கோவில் இருந்தாலும், அந்தக் கோவிலில் மனஅமைதி இருக்கும். மனஅமைதி கொடுப்பதிலும் ரத்த ஓட்டத்தைச் சீர்செய்வதிலும் அரசமரம் முதன்மையான இடத்தை வகிக்கிறது. புத்தருக்கு ஞானம்பிறந்த போதி மரம், அரசமரம்தான்.
விஞ்ஞான ஆய்வின்படி ஒரு அரசமரம் நாளொன்றுக்கு 1800 கிலோ கரியமில வாயுவை உட்கொண்டு, 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுகிறது. அரசமர சமித்துகளை மந்திரப்பூர்வமாக ஹோமத் தீயிலிட்டு, அந்த ஹோமப் புகை வீட்டில் பரவினால் கண்களுக்குத் தெரியாத பூச்சிகள், கிருமிகள் அழிந்துவிடும்.
இப்படி ஆயிரக்கணக்கான பலன்களை அள்ளித்தரும் அரச மரத்தை உரிய முறையில் தொடர்ந்து வழிபட்டு வந்தால், குழந்தைச் செல்வம் உள்ளிட்ட பல பாக்கியங்களையும் பெற்று நீடுழி வாழ்வர்.
அஸ்வத்தம் எனில் அரச மரம் என்று பொருள். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்னும் மும்மூர்த்திகளின் வடிவமே அரச மரம். மரங்களின் அரசனான அரசுக்கு பிப்பலம் என்னும் பெயரும் உண்டு. அரசங்குச்சிகளைக் கொண்டு ஹோமம் செய்யும்பொழுது அதனிடமிருந்து வெளிவரும் புகை பல நோய்களை நீக்கவல்லது.
இது ஹோமம் செய்யும் இடத்தை சுத்தம் செய்வதுடன், அங்குள்ளவர்களின் உடல்நலத்தையும் சீர்படுத்துகிறது. இந்த மரத்தை அஸ்வத்தம் என்றும் கூறுவர். அஸ்வத்தம் என்ற சொல்லிற்கு “இப்புனித மரத்தை வணங்கியவர்களின் பாவங்கள் மறுநாள் இருப்பதில்லை’ என்று பொருளாகும்.
கபம், பித்தம் போன்ற நோய்களையும் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் சரும நோய்களையும் போக்கக்கூடிய குளிர்ச்சி தரும் மரம் அரச மரமாகும்.
அரச மரத்தை நெருங்கிச் சுற்றக் கூடாது; தொடக்கூடாது. ஆனால், சனிக்கிழமை மட்டும் அரச மரத்தைத் தொட்டு வழிபடலாம். அரச மரத்தை அதிகாலை வேளையில் வலம் வரும்போது, அந்த மரத்திலிருந்து வெளியாகும் பிராண வாயுவில் சக்திவாய்ந்த ஓசோனின் தாக்கம் அதிகமிருக்கும்.
எனவே குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் காலை வேளையில் நீராடிவிட்டு ஈர ஆடையுடன் அரச மரத்தை வலம் வந்தால், கர்ப்பக் கோளாறுகள் நீங்கி குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல ஆண்களும் வலம் வந்தால், அவர்களுக்கு சுக்கில விருத்தி அதிகமாகி குழந்தைப் பேறுக்கு வழிவகுக்கும்.
அரச மரத்தை ஞாயிறன்று வலம் வந்தால் நோய் அகலும்; திங்களன்று வலம் வந்தால் மங்களம் உண்டாகும்; செவ்வாய் தோஷங்கள் விலகும்; புதன் வியாபாரம் பெருகும்; வியாழன் கல்வி வளரும். வெள்ளி சகல சௌபாக்கியங்களும் கிட்டும்; சனி சர்வ கஷ்டங்களும் விலகி மகா லட்சுமியின் அருள் கிடைக்கும்.
மூன்று முறை வலம் வந்தால் இஷ்ட சித்திகளும்; ஐந்து முறை வலம் வந்தால் வெற்றியும்; ஒன்பது முறை வலம் வந்தால் புத்திர பாக்கியமும்; பதினொரு முறை வலம் வந்தால் சகல பாக்கியங்களும்; நூற்றியெட்டு முறை வலம் வந்தால் அஸ்வமேத யாகம் நடத்திய பலனும் கிடைக்குமென்று நூல்கள் சொல்கின்றன.
சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசையும், அவனுக்குரிய திங்கட்கிழமையும் சேர்ந்த நாளில் அதிகாலையில் அரச மரத்தை வழிபட்டு, அதை ஸ்ரீமன் நாராயணனாக பாவித்து பின்வரும் ஸ்லோகத்தைச் சொல்லி 108 முறை வலம் வரவேண்டும்.
“மூலதோ பிரம்ஹரூபாய
மத்யதோ விஷ்ணு ரூபிணே
அக்கிரத: சிவ ரூபாய
விருக்ஷ ராஜயதே நம: "
இந்த ஸ்லோகத்தை மனதிற்குள் சொல்லிக்கொண்டு வலம் வரும்போது, தங்கள் சக்திக்கு ஏற்ப பழமோ அல்லது வேறு பொருளோ மரத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டும். நூற்றியெட்டு சுற்றுகள் முடிந்ததும் அப்பொருட்களை ஏழைகளுக்கு தானமாக அளிக்கவேண்டும்.
இந்த வழிபாட்டை அமாசோமவார விரதமென்று கூறுவர். அன்று ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம்; ஆடைகள் வாங்கி வழங்கலாம். அமாவாசையும் திங்கட்கிழமையும் இணைந்து வரும் இந்த அற்புத நாளில் அரச மரத்தை வணங்கி நலம்பெறுவோம்.