நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மாசி பௌர்ணமி பற்றிய பதிவுகள் :

நவகிரகங்களில் நிழற்கிரகங்களில் ஒன்றான கேது பகவான் ஆவார். இவர் ஞானத்தையும், மோட்சத்தையும்  அதிகம் அருள்பவர். கேது பகவான், ஞானத்தை அளிப்பதுடன் மிகப் பெரும் செல்வத்தை அள்ளித் தரும் வல்லமை உள்ளவர். பல புண்ணிய அம்சங்களை கொண்ட மாசி மாதத்தில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் சந்திரன் வரும் தினம் தான் மாசி பௌர்ணமி. 

பௌர்ணமி திதி:

சூரிய மற்றும் சந்திர சக்திகள் நேர் எதிரே இரண்டு ஒளிரும் கிரகம் ஒன்றையொன்று பார்த்துக்கொள்வது பௌர்ணமியாக பிரகாசமடைகிறது. 

வானியல் ரீதியாக சில நட்சத்திரங்கள் சந்திரனோடு சேர்ந்து சில கதிர் வீச்சுகளை பூமியை நோக்கி வீசுகின்றன. பௌர்ணமி தினத்தன்று அந்த கதிர் வீச்சுகள் அதிகமாக இருக்கும். 

பௌர்ணமியில் கிட்டத்தட்ட108 வகைகள் இருப்பதாகவும், அவற்றின் தன்மைகளுக்கேற்ப பல்வேறு விரத வழிபாட்டு முறைகள் உண்டு என்றும் சித்தர்கள் விளக்கம் அளித்துள்ளனர். 

பௌர்ணமி ஒரு முக்கியமான நாள். காரணம், அந்நாளில் நிலவு சுண்டியிழுக்கும் தன்மை நிறைந்ததாய் இருக்கும். உங்கள் குணம் எதுவோ, அதனை அந்நாள் மேம்படுத்தும். ஆகவே ஆன்மீகப் பாதையில் இருப்பவர்களுக்கு, குறிப்பாக தியானம் செய்பவர்களுக்கு, பௌர்ணமி இரவு மிக உகந்ததாய் இருக்கும். 

ஏனென்றால் பௌர்ணமி இரவில் தியானம் செய்யும் பொழுது, இயற்கையாய் இருப்பதை விட அதிகமாகவே உங்கள் சக்திநிலை உயரும். அப்படி சக்திநிலை உயரும் போது, விழிப்புணர்வு ஆழமாகிறது. சக்திநிலை மேம்படாமல், விழிப்புணர்வைப் பற்றி நாம் பேசவே இயலாது. 

பௌர்ணமி திதிக்கு பராசக்தி அதிதேவதை ஆவாள். உங்கள் நலம் மற்றும் உலக நலத்திற்கான ஹோமங்கள் செய்யலாம். கோயில் சிற்ப வேலைப்பாடுகள், மங்கள காரியங்களில் ஈடுபடலாம். தெய்வங்களுக்கு விரதம் மேற்கொள்ளலாம். பௌர்ணமி அன்று அக்னிக்கு ஆஹுதி கொடுத்தல் நலம் தரும்.

பெளர்ணமி தினத்தன்று அன்னை தேவி பராசக்தி வழிபடுவதும், சத்ய நாராயணன் பூஜை செய்வதும் மிகவும் சிறப்பானதாகும். 

இந்த பெளர்ணமி ஒளிமயமான தினத்தில் அம்பிகைக்கு பூஜைகள் செய்து வழிபாட்டால் தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

பெளர்ணமி நாளில் வீட்டிலும், கோயிலிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வதன் மூலம் மிகச் சிறந்த பலன்களை பெற முடியும்.

பௌர்ணமி அன்று பிறந்தவர்கள் பௌர்ணமி திதி நித்யா தேவதையை முறையாக வணங்கினால் தொட்டதெல்லாம் துலங்கும். 

பௌர்ணமி திதி நித்யா தேவதை படத்தை வைத்து அதற்குரிய மந்திரங்களை உச்சரித்து வந்தால் உங்களின் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக, நிம்மதியாக வாழ முடியும். 

பௌர்ணமி திதியில் வழிபட வேண்டிய திதி நித்யா தேவதையின் பெயர் சித்ரா நித்யா.

திதி நித்யா தேவிகளில் பதினைந்தாம் நித்யா தேவியான சித்ரா, பளபளவென மின்னும் கிரணங்களை வீசிடும் திருமேனியவள்.

பல்வேறு ரத்னங்கள் பதித்த மகுடத்தில் பிறைமதி சூடியவள். வெண்பட்டாடை உடுத்தி, பல்வகையான ஆபரணங்களை மேனி முழுதும் அணிந்து அழகே வடிவாய்த் திகழ்கின்றாள். 

பாசம், அங்குசம், அபயம், வரதம் தரித்த நான்கு திருக்கரங்கள் கொண்ட இவள், பக்தர்களின் பயத்தை நாசம் செய்பவள். சர்வானந்தமயி என்றும் நிலையானவள். 

கனவிலும், நினைவிலும் அடியவர்கள் இதயத்தில் வீற்றிருப்பவள். உதிக்கின்ற சூரியனைப்போல் ஞான ஒளி வீசி அறியாமை இருளை விரட்டுபவள். அண்டங்கள் அனைத்திலும் மகிமை வெளிப்படத் திகழ்பவள். தனிப்பெரும் பரம்பொருள்.

Post a Comment

Previous Post Next Post