மதுரை அருள்மிகு கூடலழகர் கோயில்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மதுரை அருள்மிகு கூடலழகர் கோயில் பற்றிய பதிவுகள் :

வெற்றி தரும் பெருமாள் :

இங்குள்ள உற்சவர் வியூக சுந்தர்ராஜன் என்று அழைக்கப்படுகிறார். எந்த ஒரு செயலையும் செய்யும்முன்பு, சரியாக திட்டமிட்டு வியூகம் அமைத்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். இவ்வாறு எதிலும் வெற்றி தரும் அழகராக இவர் திகழ்வதால், இப்பெயரில் அழைக்கப்படுகிறார். இப்பகுதியை ஆண்ட மன்னர்கள் போர் புரியச் செல்லும் முன்பு, இவரை வேண்டி வெற்றிக்காக வியூகம் அமைத்துக் கொண்டனர். இதனாலும் இப்பெயர் ஏற்பட்டதாகவும் சொல்வர்.

முக்கோல முகுந்தன் :

அஷ்டாங்க விமானத்தின் கீழ் தளத்தில் கூடலழகர் ஸ்ரீதேவி பூதேவியருடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இரண்டாவது நிலையில், சூரிய நாராயணர் தேவியருடன் நின்ற கோலத்தில் அருளுகிறார். இதில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தெய்வங்களும், அஷ்டதிக் பாலகர்களும், ஓவிய வடிவில் அருளுகின்றனர். இதனால் இந்த சன்னதியை, ஓவிய மண்டபம் என்று அழைக்கிறார்கள். மூன்றாவது நிலையில் பாற்கடல் நாதர், பள்ளி கொண்ட கோலத்தில் தாயார்களுடன் அருளுகிறார். இவ்வாறு, பெருமாள் இத்தலத்தில் நின்ற, அமர்ந்த, கிடந்த என மூன்று கோலங்களிலும் காட்சி தருகிறார். மேலும் பூவராகர், லட்சுமி நரசிம்மர், நாராயணன், லட்சுமி நாராயணன், ஆழ்வார்கள், வைணவ ஆச்சாரியர்கள் ஆகியோரையும் விமானத்தில் தரிசிக்கலாம். மலைக்கோயில்களில் பௌர்ணமியன்று கிரிவலம் போல், இங்கே பக்தர்கள் விமானத்தை வலம் வருகிறார்கள்.

புலவர் கூடலழகர் :

ஒருமுறை மதுரையில் தொடர்ந்து மழை பெய்தது. மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாயினர். தங்களை மழையிலிருந்து காத்தருளும்படி பெருமாளை வேண்டினர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சுவாமி, நான்கு மேகங்களை ஏவினார். அவை, மதுரையைச் சுற்றி நான்கு மாடங்களாக ஒன்று கூடி, மழையிலிருந்து மக்களை காத்தது. இவ்வாறு, நான்கு மேகங்கள் ஒன்று கூடியதால் இத்தலம், நான்மாடக்கூடல் என்றும், |கூடல் மாநகர் என்றும் பெயர் பெற்றது. சுவாமியும், கூடலழகர் என்று பெயர் பெற்றார். இந்த பெருமாள் துவரைக் கோமான் என்ற பெயரில் மதுரை தமிழ்ச் சங்கத்தில் புலவராக அமர்ந்திருந்ததாக பரிபாடல் கூறுகிறது. எனவே இவரை, புலவர் கூடலழகர் என்றும் சிறப்பித்துக் கூறுகிறார்கள்.

மீன் சின்னம் :

பாண்டிய மன்னர்களின் சின்னம் மீன். இந்த சின்னம் உருவானதற்கு இத்தலத்து பெருமாளே காரணமாவார். முற்காலத்தில் இக்கோயிலைச் சுற்றி இருபுறத்திலும் மாலையிட்டதுபோல, வைகை நதி, கிருதுமால் நதி ஆகியவை ஓடின. இதில் கிருதுமால் நதிசுருங்கி ஓடையாகி விட்டது. பாண்டிய மன்னனான சத்தியவிரதன், இத்தல பெருமாள் மீது அதீத பக்தி செலுத்தினான். ஒரு முறை அவன் கிருதுமால் நதியில் நீராடிய போது, பெருமாள் மீன் வடிவில் தோன்றி உபதேசம் செய்தார். தனக்கு அருளிய சுவாமியின் நினைவாக மீன் சின்னத்தை வைத்துக்கொண்டான்.

சிறப்பம்சங்கள் :

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று.

உலகிலுள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் அதிகாலையில் பாடப்படும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்ற திருப்பல்லாண்டு பாடல் இயற்றப்பட்ட தலம் மதுரை.

இவ்வூரில் கூடலழகர் என்ற பெயரில் பெருமாள் அருளுகிறார். மார்கழி மாதத்தில் இத்தலத்தை தரிசிப்பது சிறப்பு.

பெருமாள் கோயில்களில் 96 வகையான விமானங்கள் அமைக்கப்படும். இதில் அஷ்டாங்க விமானம் மிகவும் புண்ணியம் தருவதாகக் கருதப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் இங்கும், திருக்கோஷ்டியூரிலும் மட்டுமே சுவாமி, அஷ்டாங்க விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். இந்த விமானம் 125 அடி உயரம் கொண்டது. இதிலுள்ள கலசம் 10 அடி உயரமுடையது. இதன் நிழல் தரையில் விழுவதில்லை. மூன்று நிலைகளுடன், எட்டு பகுதிகளாக உயர்ந்து நிற்கும் இந்த விமானம் ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top