திருக்கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து திருக்கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் பற்றிய பதிவுகள் :

அகோபிலம் என்றால் பானகம்!

இங்கு லட்டு, அதிரசம், முறுக்கு, சீடை, தட்டை போன்றவை இருந்தாலும் மிளகு தோசைக்கே வரவேற்பு அதிகம். இந்த தோசைகள் பித்தளைப் பானைகளில் வைக்கப்பட்டிருக்கும். அதில் எண்ணெய் பொடி சேர்த்து கொடுக்கின்றனர். இதை குழந்தைகள் விரும்பி உண்பதால் தோசைப் பெருமாள் கோவில் என்று செல்லமாக குறிப்பிடுகின்றனர்.

மண் உருண்டை பிரசாதம்!

திருநீறு, குங்குமம், பஞ்சாமிர்தம், அப்பம், அரவணை, நெய், லட்டு ஆகியவற்றை பிரசாதமாக தரும் கோயில்கள் உண்டு. ஆனால், கடன்தொல்லை தீர வேண்டும் என்பதற்காக மண்சாந்து உருண்டையை ராமநாதபுரம் அருகே திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் தருகின்றனர். இங்குள்ள வில்வ மரத்தின் கீழ் உள்ள மண்சாந்தை உருண்டையாக உருட்டி தருகின்றனர். இதை சிறிதளவு வாயில் போட்டுக் கொண்டால் கடன் தொல்லை தீரும் என்பது நம்பிக்கை.

புற்று மண் பிரசாதம்

தூக்கணாங்குருவிக்கூடு, சிலந்தி வலை, புற்று இவைகளை மனிதன் அவ்வளவு எளிதாக உருவாக்கி விட முடியாது. புற்று என்பது வழிபடத்தக்க ஒரு உருவம். கும்பாபிஷேக நாளில் மிருத்ஸங்க்ரணம் என்ற கிரியைக்கு புற்று மண் தேவைப்படுகிறது. 

புற்றுமண், துளசி செடி மண், வில்வமரத்தடி மண் இவைகள் புனிதமானவை. மேல் மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில்,  திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், திருவொற்றியூர், திருவேற்காடு போன்றதலங்களில் 
புற்று மண் பிரசாதம் தரப்படுகிறது.

வரட்டி சாம்பலே பிரசாதம்!

மயிலை முண்டகக் கண்ணி அம்மன் கோயிலில், ஆடிமாதம் பொங்கல் (ஏதாவது ஒரு வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில்) வைப்பது மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. 
அன்று பொங்கல் வைக்க உபயோகப்படுத்தப்படும் வரட்டியின்_சாம்பல்_விபூதிப் பிரசாதமாகத் தரப்படுகிறது.

எலுமிச்சை சாறு பிரசாதம்!

பொதுவாக அம்மன் கோயில்களில் எலுமிச்சம் பழங்களைத்தான் பிரசாதமாகத் தருவர். சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளி கோயிலில் அம்பாளுக்கு அணிவிக்கப்படும் எலுமிச்சை அனைத்தும் பிரசாதமாகத் தரப்படுகிறது. 

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் ஏகவுரி அம்மன் கோயிலில் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு எலுமிச்சை சாறை பிரசாதமாக கொடுக்கிறார்கள். இதைப் பருகினால், கர்ப்பமாவார்கள் என்பது ஐதீகம்.

பச்சிலை பிரசாதம்!

பொள்ளாச்சியிலிருந்து சுமார் 14 கி.மீ. தூரத்தில் உள்ளது ஆனைமலை மாசாணியம்மன் ஆலயம். நெற்றியில் சக்கரத்துடன் சயன நிலையில் அம்மன் அருளும் இந்த ஆலயத்தில், பச்சிலை பிரசாதம் விசேஷம். 

இது, பெண்களுக்கான உடற்பிணிகள், வயிறு தொடர்பான நோய்களை நீக்கும் வல்லமையானது என்பர். தை அமாவாசையில் வழிபட வேண்டிய தலம் இது!

ஐஸ்கிரீம் பிரசாதம்!

டேராடூன்-முசௌரி சாலையில் அமைந்துள்ளது சிவபுரி. இங்குள்ள ஸ்ரீபிரகாஷ் ஈஸ்வர் மகாதேவ் மந்திரில் காலை நேரங்களில் காராசேவும் பூந் தியும் பிரசாதமாகத் தரப்படுகிறது. மதிய வேளைகளில் சாதமும், பருப்பும் கூடவே ஐஸ்கிரீமும் பிரசாதமாகத் தருகிறார்கள்.

புளிய இலை பிரசாதம்!

குவாலியரில் இசைமேதை தான்சேன் சமாதி அருகில் ஒரு புளியமரம் உள்ளது. இது அவரே நட்டு வளர்த்த மரம் என்று கூறுகிறார்கள். இதன் இலை, பூவைத்தான் தான்சேனின் பிரசாதமாக இசை அன்பர்கள் பக்தியுடன் பெற்றுச் சுவைக்கிறார்கள்.

அம்மன் சன்னிதியில் விபூதி பிரசாதம்!

ஸ்ரீமுஷ்ணம் திருக்கூடலையாற்றூர் ஸ்ரீநர்த்தனவல்லபேஸ்வரர் கோயிலில் இரண்டு அம்மன் சன்னதிகள் உள்ளது சிறப்பு. ஸ்ரீஞானசக்தி அம்மன் சன்னதியில் குங்குமமும், ஸ்ரீபராசக்தி அம்மன் சன்னிதியில் விபூதியும் பிரசாதமாகத் தரப்படுகின்றன.

வெற்றிலை பிரசாதம்!

செகந்திராபாத் ஸ்கந்தகிரியிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலிலும், எல்.பி.நகர் அருகிலுள்ள கர்மன்காட் தியான ஆஞ்சநேயர் கோயிலிலும் வெற்றிலையினால் சகஸ்ரநாம, அஷ்டோத்தர அர்ச்சனை செய்து பக்தர்களுக்கு அதை பிரசாதமாக க்கொடுக்கிறார்கள். அதனால் பக்தர்களும் அர்ச்சனைக்காக அனுமனுக்கு நிறைய வெற்றிலை வாங்கிக் கொடுக்கிறார்கள்.

உப்பு மண் விபூதி பிரசாதம்!

மோகனூரிலிருந்து காட்டுப்புத்தூர் செல்லும் சாலையில் ஒருவந்தூரில் உள்ளது பிடாரி அம்மன் கோயில். அம்பாள் சுயம்பு மூர்த்தமாக அருள்பாலிக்கும் இத்தலத்தில் உப்பு மண் விபூதி பிரசாதமாகத் தரப்படுகிறது.

இந்தப் பிரசாதத்தைப் பூசினால் வினைகள் யாவும் தீரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. சிவன் பார்வதி இணைந்த சொரூபமே பிடாரி அம்மன் என்றும், குழந்தை பாக்கியம் பெற, திருமணத்தடை விலக, கல்வியில் சிறந்து விளங்க இந்த அம்மனை வழிபட, வேண்டுதல் கைகூடும் என்றும் சொல்லப்படுகிறது.

மிளகாய் வற்றல் பிரசாதம்!

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை கிரிவலப்பாதையில் மிளகாய் சித்தர் சமாதி உள்ளது. இங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக மிளகாய் வற்றல் தரப்படுகிறது. இதை வீட்டிற்குக் கொண்டுபோய் சமையலில் பயன்படுத்தி சாப்பிட்டால் நோய் நொடிகள் அகலும் என்பது நம்பிக்கை!

பிரியாணி பிரசாதம்!

மதுரை திருமங்கலத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது. வடக்கம்பட்டி எனும் கிராமம். இங்குள்ள முனியாண்டி கோயிலில் வருடா வருடம் தை மாதம் 2வது வெள்ளிக்கிழமை தமிழகத்தில் உள்ள முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமையாளர்கள் இணைந்து கடவுளைக் கும்பிடுகிறார்கள். அன்றைய தினம் கடவுளுக்கு பிரியாணி படைக்கப்பட்டு, அதுவே பிரசாதமாக வழங்கப்படுகிறது.

தேங்காய் பிரசாதம்!

நவராத்திரி விழாவின் போது நெமிலி பாலா திரிபுரசுந்தரி கோயிலில் கலசத்தில் வைக்கப்படும் தேங்காய் அடுத்த வருடம் வரை கெடாமல் இருக்கும் அதிசயத்தைக் காணலாம்.

அந்தக் தேங்காயை மறு வருடம் நவராத்திரி விழாவின் போது முதல் நாள் பூஜித்து உடைத்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவது வழக்கம்.

மண்டையப்பம் பிரசாதம்!

நாகர்கோவில் அருகில் உள்ள மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் அம்மனுக்கு பச்சரிசி மாவு, சர்க்கரை, வெல்லம் சேர்த்து மண்டையப்பம் எனும் பிரசாதம் செய்து படைக்க தீராத தலைவலியும் நீங்கிவிடும்.

திருமண் பிரசாதம்!

கரூரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது மாரியம்மன் திருக்கோயில். இங்கு அம்பாள் நான்கு கரங்களுடன், கிழக்கு முகமாக சற்றே ஈசான்யப் பார்வையுடன், அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.

இக்கோயிலில் நடக்கும் வைகாசி பெருவிழாவில், கம்பம் நடும் விழா விசேஷமானது. வேப்ப மரத்தின் மூன்று கிளைகளைக் கொண்ட ஒருபகுதியை அதன் பட்டைகளை உரித்து, அதில் மஞ்சள் செருகி, ஆற்றில் பூஜித்து, கோயிலின் பலி பீடத்தின் அருகில் நடப்படுகிறது. இதையே பக்தர்கள் அம்பாளாகக் கருதி வழிபடுகிறார்கள். இக்கோயிலில் அம்மன் பிரசாதமாக திருமண் வழங்கப்படுகிறது.

லேகிய பிரசாதம்!

பொதுவாக பெருமாள் கோயிலில் துளசியைப் பிரசாதமாகக் கொடுப்பார்கள். ஆனால் திண்டுக்கல் தாடிக்கொம்பு சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் உள்ள தன்வந்திரி சன்னதியில் லேகியம் மற்றும் தைலத்தைப் பிரசாதமாகத் தருகிறார்கள். உடல்நல பாதிப்புக்கு உள்ளானோருக்கு இது மாமருந்து என்கின்றனர்!

ருத்ராட்ச பிரசாதம்!

குடந்தை நாகேஸ்வரம் கோயிலிலிருந்து 4 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தேப்பெருமாநல்லூர் திருத்தலம் இங்கு அருள்பாலிக்கும் வேதாந்தநாயகி சமேத விஸ்வநாதர் சுவாமிக்கு ருத்ராட்சத்தினால் அர்ச்சனை செய்யப்படுகிறது. அர்ச்சனை செய்த ருத்ராட்சங்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவது வழக்கம்.

வில்வக்காய் பிரசாதம்!

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியிலுள்ள மறவர் கரிசல் குளம் கிராமத்திலிருக்கிறது. ராஜராஜேஸ்வரி சமேத விஸ்வநாதர் கோயில். 
நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தல இறைவனை வணங்கி, வில்வ இலையையும் காயையும் பிரசாதமாக எடுத்துக்கொண்டால் நோய் தீரும் என்பது நம்பிக்கை! இங்குள்ள கோயில் கிணற்றில் ஆண்களே தண்ணீர் இறைக்கிறார்கள். பெண்களுக்கு அனுமதி இல்லை.

துளசி விபூதி பிரசாதம்!

சங்கரன்கோவில் சங்கரநாராயண ஸ்வாமி திருக்கோயிலில் சிவன் மற்றும் அம்பாள் சன்னிதிகளுக்கு நடுவில் அமைந்துள்ளது, அருள்மிகு சங்கரநாராயணர் சன்னிதி, இங்கே, காலை பூஜையில் மட்டும் துளசி தீர்த்தமும், மற்ற நேரங்களில் விபூதியும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

அழகர் கோயில் தோசை பிரசாதம்!

மதுரையிலிருந்து 20 கி.மீ., தூரத்தில் அழகர் கோயில் உள்ளது. இங்குள்ள அழகுமலையானை வணங்கினால், விவசாய செழிப்பு, வியாபார விருத்தி, புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஆகியவை சாத்தியமாகும்.

மேலும் குழந்தைவரம், குடும்பநலம், கல்யாண வரம் வேண்டுவோர் இங்கு பிரார்த்தித்து நேர்த்திக்கடனாக பக்தர்கள் காணிக்கையாகக் கிடைக்கும் தானியங்களை அரைத்து மாவாக்கி அதில் கோயில் சார்பாக தோசை சுட்டு பிரசாதமாக தரப்படுகிறது. இது பழநி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு, போன்று மிகவும் புகழும், சிறப்பும் உடையது.

மருந்து பிரசாதம்

கேரள மாநிலம் கோட்டயம் அருகே, கூத்தாட்டுக்குளம் நெல்லிக்காட்டு பகவதி கோயிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் நோய் தீர்க்கும் மருந்து, பிரசாதமாக வழங்கப்படுகிறது. அருள்மிகு நெல்லிக்காட்டு பகவதி திருக்கோயில்

கஷாயம் பிரசாதம்

கர்நாடகா மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலில் இரவு நேர பூஜைக்கு பின் கஷாயம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. 
ஒரு முறை ஆதிசங்கரர், மூகாம்பிகை நினைத்து இங்கு தவம் புரிந்து, எழ முயன்றபோது அவரால் முடியவில்லை.

அவருக்காக அம்பாளே கஷாயம் தயாரித்து சங்கரருக்கு கொடுத்ததாகவும், அன்றிலிருந்து இரவு நேர பூஜைக்கு பின் கஷாயம் பிரசாதமாக வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்திருப்பதி அருகிலுள்ள காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் கோயிலுள்ள கிணற்று நீரை பிரசாதமாக தருகின்றனர். இதை அருந்தினால் வேண்டியது நிறைவேறும் என்பது நம்பிக்கை கஷாயத்தை சாப்பிட்டால் சகல நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top