நோய் தீர்க்கும் அற்புதமான தீர்த்தமலையானது, தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. மனித பிறவி எடுத்தவர்கள் அனைவருமே, நோய் நொடி இல்லாமல் மகிழ்ச்சியாக வாழவே ஆசைப்படுகிறார்கள். ஆனால் அது நடக்கிறதா? என்றால், ‘இல்லை’ என்பதுதான் கசப்பான உண்மை.
உலகில் நோய் வாய்ப்படாத மனிதர்களே இல்லை எனலாம். இறைவனிடம் நாம் செய்யும் முக்கிய பிரார்த்தனையே, ‘இறைவா! ஆரோக்கியமான வாழ்க்கையை கொடு’ என்பதுதான்.
அவரவர் கர்ம வினைப்படியே, நோய்கள் மனிதர்களை தாக்குவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. என்றாலும் இறைவனிடம் நாம் செய்யும் பிரார்த்தனையின் பலனாக, நோய்கள் தீரக்கூடிய ஒரு சிறப்பான வாய்ப்பையும் ஆலயங்கள் மூலமாக இறைவன் நமக்கு வழங்கி இருக்கிறான் என்றால் அது மிகையில்லை.
அப்படி ஒரு நோய் தீர்க்கும் அற்புதமான திருத்தலம் தான் தீர்த்தமலை. இங்குள்ள பற்பல தீர்த்தங்களில் நீராடுவதன் மூலம், மனிதர்களுக்கு ஏற்படும் பல வகையான நோய்கள் நீங்குகின்றன என்பது வியப்புக்குரிய செய்தி அல்லவா?
அது மட்டுமல்ல... தலைமை சித்தரும், உலகின் முதன் தலை அறுவை சிகிச்சை செய்த சிறந்த மருத்துவருமான அகத்தியருக்கு ஒரு முறை தீராத வயிற்றுவலி ஏற்பட்டது. அப்போது அகத்தியரின் வயிற்றுவலியைப் போக்கிய தலம் என்ற பெருமையையும் தீர்த்தமலை திருத்தலம் பெற்றுள்ளது.
*தல வரலாறு*
வனவாசத்தின் போது ராமனோடு வனத்தில் இருந்த சீதையை, மாய வேலைகள் செய்து கடத்திச் சென்றான் ராவணன்.
சீதையை மீட்பதற்காக ராவணனுடன் யுத்தம் செய்தார் ராமபிரான். அந்த யுத்தத்தில் ராவணன் வதம் செய்யப்பட்டான். இதையடுத்து ராமர் அயோத்தி திரும்பினார். வழியில்
இந்த தலத்திற்கு வந்தபோது, சிவபூஜை செய்ய விரும்பினார். பூஜைக்குத் தேவையான தீர்த்தத்தை காசியில் இருந்து கொண்டுவரும்படி அனுமனிடம் ராமபிரான் கூறினார்.
ஆனால் அனுமன் வந்து சேருவதற்கு கால தாமதம் ஆனது. எனவே ராமர், தனது பாணத்தை எடுத்து அங்கிருந்த மலை மீது விட்டார்.
ராமர் விட்ட பாணம், பாறையில் பட்ட இடத்தில் இருந்து தீர்த்தம் உண்டாகியது. அந்த தீர்த்தத்தைக் கொண்டு ராமர், சிவபூஜையை நடத்தி முடித்தார். ராமரின் பாணத்தால் உருவானது என்பதால் இதற்கு ‘ராம தீர்த்தம்’ என்று பெயர். இதற்கிடையில் காசியில் இருந்து அனுமனும் தீர்த்தம் கொண்டு வந்து சேர்ந்து விட்டார்.
தான் வருவதற்குள் ராமபிரான், தீர்த்தம் உண்டாக்கி பூஜையை நிறைவு செய்து விட்டதால், கோபம் கொண்ட அனுமன் தான் கொண்டு வந்த தீர்த்தத்தை வீசி எறிந்தார். அது இத்தலத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையில் விழுந்தது.
அது ‘அனுமந்த தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. அனுமந்த தீர்த்தத்தில் குளித்து விட்டு, இங்குள்ள ராம தீர்த்தத்தில் குளித்தால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
ராமபிரான், இரண்டு இடங்களில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்திருக்கிறார். ஒன்று பெரும் சிறப்புக்குரிய ராமேஸ்வரம். மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்து காணப்படும் இந்த தீர்த்தமலை.
இங்குள்ள இறைவனின் பெயர் ‘தீர்த்தகிரீஸ்வரர்’ என்பதாகும். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக இருந்து அருள்பாலிக்கிறார்.
ராம தீர்த்தத்தில் நீராடி தீர்த்தகிரீஸ்வரரை வழிபாடு செய்தால் மன நிம்மதி கிடைக்கும். மேலும் உடல்ரீதியான எந்த வித வியாதியாக இருப்பினும் அவை தீரும் என்கிறார்கள்.
இது தவிர குழந்தை வரம் மற்றும் குடும்ப ஒற்றுமை, சகல ஐஸ்வரியம் கிடைக்கவும், கடன் தொல்லை தீர்வதற்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பலரும் வந்து பிரார்த்தனை செய்து செல்கிறார்கள்.
மொத்தத்தில் இத்தல இறைவனை வழிபாடு செய்தால் எல்லா நலன்களும் கிடைக்கும் என்பது உண்மையே. இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்பாளின் திரு நாமம் ‘வடிவாம்பிகை’ என்பதாகும். இத்தல விநாயகர் ‘சித்தி விநாயகர்’ என்ற பெயருடன் அருள்பாலித்து வருகிறார்.
இங்குள்ள தல விருட்சம் பவளமல்லி மரம். இந்த தல விருட்சத்தில் திருமணம் நடைபெற வேண்டும் என்ற பிரார்த்தனையை முன் வைப்பவர்கள், மஞ்சள் கயிறு கட்டி வேண்டிக்கொள்கின்றனர்.
குழந்தை வரம் வேண்டுவோர், இங்குள்ள பெரிய புற்றை வழி படுவதோ, தொட்டில் கட்டி வேண்டுதல் வைக்கின்றனர். மேலும் நாகப்புற்றை வணங்கினால் நாகதோஷம் நீங்குவதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறியதும் பக்தர்கள் இத்தல ஆலயத்திற்கு வந்து, முடி எடுத்தல், காது குத்துதல் ஆகிய நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
தவிர சுவாமிக்கு தேன், நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீறு, அரிசி மாவு, பழ வகைகள் போன்றவற்றால் அபிஷேகமும் செய்கிறார்கள்.
ஒரு சிலர் தங்களின் வசதிக்கேற்ப சொர்ணாபிஷேகம் செய்வதும் உண்டு. இறைவனுக்கு வஸ்திரமும், அம்பாளுக்கு புடவையும் சாத்தி வழிபடும் பக்தர்களும் இருக்கிறார்கள். ஒரு சில பக்தர்கள், தங்களது நேர்த்திக்கடனை அன்னதானமாக வழங்குகிறார்கள்.
மலைக்கு மேற்கே வாயு தீர்த்தம், வருண தீர்த்தம் உள்ளது. கிழக்கில் இந்திர தீர்த்தம் இருக்கிறது. வடக்கே அனுமந்த தீர்த்தமும், தெற்கே எம தீர்த்தமும் உள்ளது. மலையின் உச்சியில் வசிஷ்டர் தீர்த்தம் காணப்படுகிறது. இப்படி தீர்த்தங்களால் சூழப்பட்ட அற்புதமான மலையாக தீர்த்தமலை நோய் தீர்க்கும் தலமாக விளங்குகிறது.
இந்த மலை மீது ஏறி வந்து வழிபடும் பக்தர்கள், மூலிகை காற்றை சுவாசிப்பதால் பக்தர்கள், நோய் நொடிகள் நீங்குவதாக சொல்கிறார்கள். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே அமைந்துள்ளது தீர்த்தமலை. தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் இத்தலம் இருக்கிறது.
Very useful information for all the devotees.
ReplyDelete