சடாரி

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சடாரி பற்றிய பதிவுகள் :

சடம் + அரி = சடாரி

பெருமாள் கோயில்களில் நம் தலையில் வைக்கப்படும் சடாரி என்பது பெருமாளின் திருவடி நிலையான பாதுகையைக் குறிக்கிறது.

சடாரி என்றால் என்ன பொருள்?

குழந்தை தாயின் கருவில் இருக்கும் போது, ஓர் உறுதி எடுத்துக் கொள்கிறது. அதாவது, தான் எடுக்கப் போகும் பிறவியில் நேர்வழியில் நடக்க வேண்டும் என்றும், பாபச் செயல்கள் செய்யக் கூடாது என்றும், இறைவனின் திருவடிகளில் அடைக்கலம் புகுந்து முக்தி அடைய முயல வேண்டும் என்றும் கருவில் உள்ள குழந்தை உறுதி கொள்கிறது. ஆனால், அக்குழந்தை தாயின் கருவில் இருந்து வெளியே வந்து பிறக்கும் போது, சடம் என்ற காற்று அக்குழந்தையைப் பிடித்துக் கொள்கிறது. அதன் விளைவாக, தான் மேற்கொண்ட உறுதியைக் குழந்தை மறந்துவிடுகிறது. இறைவனை அடைய வேண்டும் என்பதையும், அறவழியில் நடக்க வேண்டும் என்பதையும் மறந்து மனம்போன படி வாழத் தொடங்குகிறது. இதற்கெல்லாம் காரணம் பிறக்கும் குழந்தையைப் பிடித்துக் கொள்ளும் சடம் என்னும் வாயுவே ஆகும்.

ஆனால், நம்மாழ்வார் தன் தாயின் கருவில் இருந்து வெளியே வந்த போது, தன்னைப் பிடிக்க வந்த சடம் எனும் வாயுவை எட்டி உதைத்து விட்டார். அவ்வாறு சடத்தை வென்றதால்தான் அவரால் மிகச்சிறந்த ஞானியாகவும், பக்தராகவும் வாழ முடிந்தது. அரி என்றால் வென்றவர். சடத்தை வென்றவர் என்பதால் சடாரி என்று நம்மாழ்வார் பெயர் பெற்றார். அந்த நம்மாழ்வாரையே தனது பாதுகையாக எண்ணி அங்கீகரித்தார் திருமால். அதனால் நம்மாழ்வாரின் திருப்பெயரான சடாரி என்பதையே திருமாலின் பாதுகைக்குப் பெரியோர் சூட்டினார்கள். எனவே இன்றளவும் கோயில்களில் உள்ள இறைவனின் திருவடி நிலையை சடாரி என்றே நம்மாழ்வாரின் திருப்பெயரை இட்டு அழைக்கும் வழக்கம் உள்ளது.

சடாரியை ஏன் தலையில் வைக்கிறார்கள்?

முன்பொரு சமயம் திருமால் வாமனனாக வந்து, திரிவிக்கிரமனாக வளர்ந்து, ஓங்கி உலகளந்த வேளையில், தனது வலது திருவடியால் மண்ணுலகையும், இடது திருவடியால் விண்ணுலகத்தையும் அளந்தார் என்பதை நாம் அறிவோம். அப்போது மண்ணுலகை அளந்த வலது திருவடியை உலகில் உள்ள அனைத்து உயிர்களின் தலையிலும் பதித்தார் திருமால். அந்த நேரத்தில் நாம் புல்லாகவோ, செடியாகவோ, எறும்பாகவோ இருந்திருப்போம். நம் தலைகளிலும் அவர் திருவடியைப் பதித்ததன் விளைவாகவே, மெல்ல மெல்ல அறிவு முதிர்ச்சி பெற்று இன்று மனிதர்களாகப் பிறந்து தினகரன் ஆன்மிகம் புத்தகத்தில் அந்தப் பெருமாளின் பெருமையைப் படித்துக் கொண்டிருக்கிறோம். அவ்வாறு இறைவன் நம் தலைகளில் திருவடியைப் பதித்ததன் நினைவாகவே, இன்றும் கோயில்களில் இறைவனின் திருவடிகளுக்கும் திருவடி நிலைக்கும் பிரதிநிதியான சடாரியை நம் தலைகளில் வைக்கிறார்கள்.

சடாரி வைப்பதால் என்ன பலன்?

முன்பு திரிவிக்கரமனாக உலகளந்த பெருமாள், நம் அனைவரின் தலைகளிலும் திருவடி பதித்து, நமக்கு ஞானத்தை ஊட்டினார் என்று பார்த்தோம் அல்லவா? அது போலவே மெய்ஞ்ஞானத்தையும் அறிவு முதிர்ச்சியையும் நமக்கு அவ்வப்போது வழங்க விரும்பும் இறைவன், தன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் தலைகளில் சடாரியை வைக்கும்படிச் செய்கிறார். சடம் என்ற வாயுவினால் இறைவனை அடைய வேண்டும் என்ற உறுதியை இழந்து நிற்கும் நமக்கு, சடாரியை நம் தலையில் வைத்தவுடன், மீண்டும் உறுதி பிறக்கிறது. அறவழியில் நடக்க வேண்டும், இறைவனிடம் பக்தி கொள்ள வேண்டும் போன்ற நல்லெண்ணங்கள் தோன்றுகின்றன.

சடாரியைப் பற்றி மகான்கள் பாடியுள்ளார்களா?

ஆம். பெரியாழ்வார் திருமொழியில், “பருப்பதத்துக் கயல்பொறித்த பாண்டியர் குலபதிபோல் திருப்பொலிந்த சேவடி என் சென்னியின்மேல் பொறித்தாய்” என்ற பாடலில், திருமால் தனது திருவடிகளைப் பெரியாழ்வாரின் தலைமேல் பதித்ததாகப் பாடியுள்ளார். ராமாநுஜரின் பரமகுருவான ஆளவந்தார், தமது ஸ்தோத்திர ரத்தினம் எனும் நூலில், “த்ரிவிக்ரம த்வத் சரண அம்புஜ த்வயம் மதீய மூர்த்தானம் அலங்கரிஷ்யஸி”என்ற சுலோகத்தில், “திரிவிக்கிரமப் பெருமானே, உனது திருவடிகளை என் தலைமேல் எப்போது மீண்டும் பதிக்கப் போகிறாய்?” என்று திருமாலைப் பார்த்துக் கேட்கிறார். எல்லா பக்தர்களின் தலைகளிலும் சடாரியை வைத்து விட்டு, அதை அலம்பாமலேயே இறைவனிடம் மீண்டும் கொண்டு செல்கிறார்களே, அது சரியா? சடாரியை அலம்ப வேண்டாமா? சடாரியை அலம்பக் கூடாது என்கிறது பாஞ்சராத்திர ஆகமம். 

திருமாலின் திருவடி எப்போதுமே தூய்மையானது. எந்த தோஷமும் அதில் ஒட்டாது. அந்தத் திருவடி அல்லது திருவடி நிலையின் வடிவமாகச் சடாரி இருப்பதால், நம் எத்தனைபேர் தலையில் அதை வைத்தாலும், அது தூய்மையானதாகவே இருக்கும். எனவே அதை அலம்புவதில்லை.

தொகுப்பு: திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top