அன்பர்களுக்கு வழிகாட்டிய அய்யா வைகுண்டர்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அய்யா வைகுண்டர் பற்றிய பதிவுகள் :
    
கொல்லம் ஆண்டு 1008, மாசி 20-ம் நாள், திருச்செந்தூர் கடலில் இருந்து திருஅவதாரம் எடுத்து வந்தவர் அய்யா வைகுண்டர்.

உயர்பிரிவாக தங்களை எண்ணிக்கொண்ட சிலர், மற்ற மக்களை இழிவாக நடத்தினர். அவர்களை இடுப்பில் துண்டு கட்டிய அடிமைகளாக்க முயற்சித்ததை முறியடித்து, இடுப்பில் இருந்த துண்டை தலைக்கு கிரீடமாக மாற்றியவர், வைகுண்டர். அவர் மக்களை மன்னர்களாக்கியவர்.

இந்தியர்கள் சொந்தமாக அச்சகம் நடத்தக் கூடாது என்ற சட்டம் 1835-ல் அமலில் இருந்தது. அதனால் பனை ஓலைகளிலேயே, அய்யா வைகுண்டரின் அருளுரைகளை, அகிலத்திரட்டாக எழுதினார் அவரது சீடரான அரிகோபாலன்.

மகாவிஷ்ணுவின் சக்கராயுதத்தை பணமாக மாற்றிக் கொண்டு, ஆசையில் இருந்து பேராசை நோக்கி, அதாவது அழிவு நோக்கி பயணித்த கலி நீசன், திருவாங்கூர் மன்னனாக மேற்கு பகுதியை ஆண்டபோது, கலியுகம் கரு கொண்டது.

திருவாங்கூர் கலிநீசனின் கொடுங்கோல் ஆட்சியில், 18 சாதியினரும் மார்பக வரி, மீசைக்கு வரி செலுத்த வேண்டியிருந்தது. மேலும் இடுப்பில் குடமிருக்ககூடாது, குழந்தை இருக்கலாம். குளத்தில் மிருகங்களும் - மேட்டுக்குடியினரும் குளிக்கலாம். ஆனால் பிற சாதியினரின் தாகத்திற்கு, அவர்களின் வியர்வைகளே நீர் ஆதாரம். உயர் சாதியின் அருகாமையில், தாழ்ந்தவர்களில் நிழல் நகர்ந்தாலும் அவர்களின் தலைகள் கொய்யப்படும் என்பதுபோன்ற துயரமான சட்டதிட்டங்கள் போடப்பட்டிருந்தது. ஆயுளை நீட்டிக்கும் பனைப்பொருட்களை மன்னரின் காலடியில் வைத்த சான்றோர்களுக்கு, கசையடிகளே காசுகளாகக் கிடைத்தன.

தென்னந்தோப்பு தீவுக்குள், அழுகைகளோடு தனித்தே இருந்த சான்றோர்களை, ஒற்றுமைப்படுத்தி ஒரு முகப்படுத்தினார் வைகுண்டர். மேலும் அவர் காலனி வீடுகளைக் கட்டி, முத்திரி கிணறு மூலம் வியர்வை கலந்த நீரால் மனிதர்களை இணைந்து மனிதம் எழுப்பினார்.

இமைகளில் ரத்தம் வழிய, மன்னர்களின் அரச பயங்கரத்தில், சாமானியர்கள் தெறித்து ஓடும் அவலமே வைகுண்டரிடம் ‘அகிலத்திரட்டு’ அருள் நூல் என்று அம்மானைகளாக, கவிதைகளை சுமந்து நிறைந்தது.

கலியன் - ஆறு யுகங்களில் முதல் யுகமான நீடிய யுகத்தில் குரோணியா பிறந்தான். அப்போது பூத குரு முனிவர் அவனுக்கு புத்தி சொல்ல, அதை அவன் காதுகொடுத்து கேட்கவில்லை. சதுர்யுகத்தில் குண்டோமசாலியாக கலியன் பிறந்தான். அப்போது கோபரிஷி கூறிய புத்திமதியையும் அவன் ஏற்கவில்லை. நெடிய யுகத்தில் தில்லை மல்லாதனாக பிறந்த கலியனுக்கு ரோமரிஷி புத்தி கூறினார். அதற்கும் அவன் செவிசாய்க்கவில்லை. கிருதா யுகத்தில் சூரபத்மனாக பிறந்த கலியன், வீரபாகு சொன்ன அறிவுரையை கொஞ்சமும் மதிக்கவில்லை. திரேதா யுகத்தில் இரணியனாக பிறந்த கலியன், பிரகலாதன் சொன்ன புத்திமதியையும் உள்வாங்கிக்கொள்ளவில்லை. துவாபர யுகத்தில் கலியகன் துரியோதனாக பிறந்தான். அப்போது பீஷ்மர் கூறிய அறிவுரையையும் அவன் புறம்தள்ளினான். இறுதியாக இந்த கலியுகத்தில் பிறந்த கலிநீசனுக்கு, மகாவிஷ்ணுவே வைகுண்டராக அவதரித்து வந்து புத்தி சொன்னபோதும் அவன் கேட்கவில்லை.

இருப்பினும் வைகுண்டர் ஆறு ஆண்டுகள் சாமித்தோப்பில் வடக்கு பார்த்த இயற்றிய தவம், கலியின் வலிமையை தன்பால் ஈர்த்து கொள்ள உதவியது.

“கீழ் நோக்கிப் பிடித்தாலும், மேல் நோக்கியே எரியும் தீபத்தைப்போல, விளக்கின் ஒளியாய், வீரத் தனமாக இருங்கள்”, “தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்” என்பது போன்ற வைகுண்டரது வாழ்வியல் தத்துவங்களை வரிசைப்படுத்துவதும், விண்மீன்களை கணக்கெடுப்பதும் ஒன்றுதான்.

சுசீந்திரம் ‘டானாபுரை’ சிறையிலும், திருவனந்த புரம் ‘சிங்காரத்தோப்பு’ திறந்தவெளிச் சிறைச்சாலையிலும் திருவிதாங்கூர் மன்னன், வைகுண்டரை கைது செய்து வைத்தாலும், அவரது கருத்துக்கள் பாமரர் களிடம் சுதந்திரத்திற்கான தாக்கத்தை தீவிரப்படுத்தியது.

“ஒக்கத் தொழுகிற்றிராயின் கலியுகம் ஒன்றுமில்லை” என்ற நம்மாழ்வாரின் வார்த்தைகளைப் போல, கூட்டு வழிபாட்டு முறைகளும், தனி மனித ஒழுக்கமும் கலியுகத்தை முடிவுக்கு கொண்டுவரும் வல்லமை கொண்டது.

வைகுண்டரை புலிக்கு இரையாக்க நினைத்தான் திருவாங்கூர் மன்னன். அப்போது அய்யா வழி அன்பர்கள் அனைவரும் கண்ணீரோடு கலங்கி நின்றனர். அவர்களுக்கு வைகுண்டர் கூறிய ஆறுதல் மொழி கூட வேத வாக்காக மாறிப்போனது.

“ஏகமும் படைத்தவன்.. எங்கும் நிறைந்தவன் நான். சிவன், விஷ்ணு, பிரம்மா மூன்றும் ஒன்றாகி நிற்கும் வைகுண்டமும் நான். ஜீவன்களுக்கும் ஜீவனாக இயங்குகிறேன். மமதை கலிநீசன் என்னை அறியாவிட்டாலும், நான் படைத்த மிருகங்களுமா என்னைஅறியாது? என்னுடைய பிள்ளைகளே நீங்கள் நிலை குலையாதிருங்கள்” என்றார், வைகுண்டர்.

புலியின் நாக்கு, கடவுளின் காலடியை பூனைக்குட்டியாய் நக்கி நன்றி செலுத்தியது.

“நான் கொடுத்த போதனைகளை இந்துக்கள் செவியுற்றுக் கேளாத போதிலும், வேதாமங்களில் அமிழ்ந்து கிடக்கும் அந்தரங்க கருத்துக்களை பத்திரமாய் வைத்திருக்கும் மகாத்மாக்கள், அந்நிய நாட்டாருக்கு வெளிப் படுத்துவார்கள். அந்நிய நாட்டார் அவைகளை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்வார்கள்”எனக்கூறிய வள்ளலாரை போல, “அன்புக்கொடி மக்களே! நீங்களெல்லாம் ஒன்றுபோல், எல்லோரும் ஒரு புத்தியாய் இருங்கள். உங்கள் உடலில் உள்ள உறுப்புகளில் ஏதேனும் ஒன்றில் காயம்பட்டால், எல்லா உறுப்புக்களும் வருந்துவதைப்போல, இன்பத்திலும், துன்பத்திலும் எல்லோரும் இணைந்திருங்கள்” என வைகுண்டரும் தமது சீடர்களுக்கும், தன் வழியை பின்பற்றும் அன்பர்களுக்கும் அறிவுரையை அருளிவிட்டு, ஜோதியாக உடல் மறைந்து, ஜீவனாக எங்கும் நிறைந்து, காற்றில் கலந்து நிலைத்து நிற்கிறார்.

நன்றி - நாஞ்சில் பி.சி. அன்பழகன்

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top