தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். இந்த உலகத்தில் எத்தனை விலை உயர்ந்த பொருளை தானமாகக் கொடுத்தாலும், அதைப் பெறுபவனின் மனம் இன்னமும் இதனை சிறப்பாகக் கொடுத்திருக்கலாம் என்றும், இன்னமும் வேண்டும் என்றே ஆசை கொள்ளும்.
அன்னதானம் என்பது உணவற்ற ஏழைகளுக்கும், வரியோருக்கும் பசிக்கு உணவளிப்பதே அன்னதானம் ஆகும். பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். நோய்களில் கடுமையானது பசி ஆகும். பசி வந்தால் ஒருவன் தன்னிலை இழப்பான்.
மனித மனமே எதிலும் முழுமையாக திருப்தியடையாது. மனமானது ஒன்றை பெற்றுவிட்டால் அடுத்ததிற்கு ஏங்கும். பசித்த ஒருவன் சாப்பிடும்பொழுது மட்டும்தான் வயிறு நிறைந்தவுடன் மனமும் நிறைகிறது.
உலகத்தில் சிறந்த பரிகாரங்களுள் ஒன்று மனித மனத்தை குளிர்விப்பது ஆகும். ஒருவருக்கு பொன்னாலும், பணத்தினாலும் திருப்தி படுத்த முடியாவிட்டாலும் நாம் உணவு அளிக்கும்போது அவர் மனதை திருப்திபடுத்திவிடலாம். அதனால் அன்னதானம் செய்வது மிகப்பெரிய தர்மம் ஆகும்.
அன்னதானம் பற்றிய கதை :
பாரதப் போருக்கு பிறகு சொர்க்கம் சென்ற கர்ணனுக்கு, அவன் செய்த பொன், நவரத்தின தானத்துக்கு பலனாக தங்கமாளிகை கட்டித் தரப்பட்டிருந்தது. சகலவசதிகளுடன் இருந்தும் அவனுக்கு ஏனோ பசி அடங்கவில்லை. அவனும் சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்துப் போனான். பிறகு சொர்க்கத்தின் தலைவனிடம் சென்று கேட்டான். நான் எவ்வளவு தான தருமங்கள் செய்திருக்கிறேன் எனக்கு ஏன் இக்கொடிய தண்டனை? எனக்கு ஏன் இப்படிப் பசிக்கிறது? எனக் கேட்டான். அவனிடம், கர்ணா... நீ பூமியில் இருந்த போது பொன்னும், மணியுமே தானம் செய்தாய், அன்னதானம் செய்யவில்லை எனக் கூறினார்.
ஏகப்பட்ட தர்மங்கள் செய்த கர்ணனே அன்னதானம் செய்யாமல் போனதால் சொர்க்கத்தில் கஷ்டபட்டதாக சாஸ்திரம் கூறுகிறது. நாம் செய்யாமல் இருக்கலாமா! நாமும் அன்னதானத்தின் மகிமையை புரிந்து ஏழை எளியோருக்கு அன்னதானம் செய்து மனம் மகிழ்வோம்!
பசியால் வாடும் ஏழை மக்களுக்கு அன்னதானம் செய்ய உதவினால் ஓம் நமசிவாய அறக்கட்டளையை தொடர்பு கொள்ளவும்.