சித்தர்கள் என்றால் சித்தி பெற்றவர் என்று பொருள். அதாவது சிந்தை தெளிந்து இருப்பவன் சித்தன் என்று கூறுவார்கள். கடவுளைக் காண முயல்பவன் பக்தன் என்பது போல கடவுளைக் கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் என்று கூறலாம். கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் என முக்காலமும் உணர்ந்த அறிஞர்களே சித்தர்கள் ஆவார்.
உடலைக் கோவிலாகவும் உள்ளத்தை இறைவன் உறையும் ஆலயமாகவும் கருதி உலகப் பற்றற்று வாழ்பவர்கள் சித்தர்கள். இவர்கள் தங்களை உணர்ந்தவர்கள். இயற்கையை உணர்ந்தவர்கள். மனதை அடக்கி ஆளத் தெரிந்தவர்கள். தன்னுன் உறையும் இறைவனை கண்டு அதனுடன் ஒன்றி தன் சக்தியையும் ஆற்றலையும் உலக மக்களின் நன்மைக்கு பயன்படுத்தும் வல்லமை படைத்தவர்கள்.
சித்தர்கள் அழியாப் புகழுடன் வாழும் சிரஞ்சீவிகள். பிரபஞ்ச ரகசியத்தை அறிந்த பிரம்ம ஞானிகள். எதிலும் எந்த வித பேதமும் காணாதவர்கள். ஆசை, பாசம், மோகம், பந்தம் போன்ற உலகப் பற்றை அறுத்தவர்கள். பல சித்திகளை, குறிப்பாக அஷ்டமா சித்திகளை பெற்றவர்கள்.
தமிழ் பாரம்பரியத்தில் எத்தனையோ சித்தர்கள் இருந்தாலும் கூட 18 சித்தர்களை குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். அவர்கள்,
1. அகத்தியர்,
2. போகர்,
3. திருமூலர்,
4. வான்மீகர்,
5. தன்வந்த்ரி,
6. இடைக்காடர்,
7. கமலமுனி,
8. கருவூரார்,
9. கொங்கணர்,
10. கோரக்கர்,
11. குதம்பை சித்தர்,
12. மச்சமுனி,
13. பாம்பாட்டி சித்தர்,
14. பதஞ்சலி,
15. இராமத்தேவர்,
16. சட்டைமுனி,
17. சிவவாக்கியர்,
18. சுந்தரானந்தர் ஆகியோர்கள்.