பங்குனி வசந்த ஸ்ரீலலிதா மஹாநவராத்திரி - அம்பிகையின் வடிவங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பங்குனி வசந்த ஸ்ரீலலிதா மஹாநவராத்திரி சிறப்பு பதிவுகள் :

அம்பிகையின் வடிவங்கள் :

அம்பிகை நிர்குண வடிவினளாகவும், சகுண வடிவினளாகவும் இருக்கிறாள். இந்த இரண்டு வடிவங்களுக்கும் சான்று சூரியனுடைய நிறமற்ற வெளிச்சத்திலும் நிறம் படைத்த வெளிச்சத்திலும் காணலாம். 

சூரிய வெளிச்சம் தன் மூல நிலையில் நிறமில்லாமலும் வானத்திலுள்ள நீர்த்திவலையில் அது ஊடுருவி வரும்போது வானவில்லில் ஸ்வீதீரீஹ்ஷீக்ஷீ என்று அழைக்கப்படும் ஏழு நிறங்களாக மாறுகிறது. இதில் காணப்படும் சிவப்பு நிறம் அம்பிகையின் அழகான நிறமாக வர்ணிக்கப்படுகிறது. 

நம் நெற்றியில் அணியும் குங்குமமும் அம்பிகையின் சிவப்பு நிறமே. திவ்ய விக்ரஹா என்றொரு நாமம். திவ்யம் என்றால் தெய்வீகமானது என்று பொருள். தெய்வீக விக்ரகம். 

இந்த திரிபுரசுந்தரியை ஸ்ரீசக்ரத்திலும் மேருவிலும் விக்ரக வடிவிலும் வழிபடலாம். 

மகாதிரிபுர சுந்தரியின் பஞ்சதசாக்ஷரி மந்திரம் ‘க’ காரத்தில் தொடங்குவது, ‘ஹ’ காரத்தில் தொடங்குவது, ‘ஸ’ காரத்தில் தொடங்குவது என மூன்று வகைகளில் பிரசித்தமானது. அதில் முதல் வகைக்கு காதி வித்யை என்றும் இரண்டாவது வகைக்கு ஹாதிவித்யை என்றும் மூன்றாம் வகைக்கு ஸாதிவித்யை என்றும் பெயர்கள். 

மன்மதனாகிய காமன் இந்த அம்பிகையை காதி வித்யாவாகவும் லோபாமுத்திரா அம்மையார் ஹாதி வித்யாவாகவும் நந்தியம்பெருமான் ஸாதி வித்யாவாகவும் இவளை உபாசனை செய்து பேறு பெற்றனர்.

இந்த பஞ்சதசாக்ஷரியின் பதினைந்து நாமாக்களைக்கொண்டே லலிதாத்ரிசதி எனும் தேவியைப் பற்றிய உயர்ந்த துதி அருளப்பட்டதிலிருந்தே அந்த மந்திரத்தின் பெருமையை உணரலாம். 

இந்த லலிதா த்ரிசதி மந்திரம், சர்வபூர்த்திகரி என்றே உபாசகர்களால் அழைக்கப்படுகிறது. 

அகில உலகங்களுக்கும் அவற்றின் இயக்கங்களுக்கும் அவள்தான் காரணம் என்று வேதங்கள் குறிப்பிடுகின்றன. 

இந்த உண்மையை அபிராமி பட்டர், அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்து கொண்டு செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே -என்கிறார். 

தேவியின் பாதங்கள் எவ்வளவு மகிமை வாய்ந்தது தெரியுமா? மண்ணுலக மனிதரும் விண்ணுலக தேவரும் மரணத்தையே வென்ற முனிவர்களும் அவளுடைய திருவடிகளைத் தொழும் அடியார் கூட்டத்தில் உள்ளனர். 

மார்கண்டேயர் கூட தேவியை வழிபட்டே மரணத்தை வென்றார் என்று திருக்கடவூர் புராணம் கூறுகிறது. இதைத்தான் ‘மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி குனிதரும் சேவடிக் கோமளமே’ என்று பட்டர் பாடினார். 

அந்த பராசக்தியான லலிதா திரிபுரசுந்தரியின் பாதாரவிந்தங்களை சரணடைவோம். இந்த அம்பிகையை பஞ்சதசீ, ஷோடஸி போன்ற மந்திரங்களாலும் நவாவரண பூஜைகள் செய்தும் வழிபடும் உபாசகர்கள் ஏராளம். 

இது ஏதும் அறியாதவர்கள் லலிதா ஸஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்து வழிபட்டாலும் அருள்புரிபவள். அதுவும் தெரியாதவர்கள் ‘அம்மா’ என நினைத்து வணங்கினாலும் அருள்பவள். 

இந்த மகாதிரிபுர சுந்தரி அம்பிகை உதிக்கின்ற செங்கதிர் போல் ஆயிரம் மடங்கு ஒளியுடன் பிரகாசிப்பவள். மூன்று கண்கள், நான்கு திருக்கரங்கள் கொண்டவள். இவள் திருக்கரங்கள் தாங்கியுள்ள பாசத்திலிருந்து அஷ்வாரூடா தேவியும் அங்குசத்திலிருந்து ஸம்பத்கரி தேவியும் கரும்பு வில்லிலிருந்து ராஜமாதங்கியும் கமலம், கைரவம், சிவந்த கல்ஹாரம், இந்தீவரம், சஹகாரம் எனும் ஐந்து வகை மலர்களால் ஆன புஷ்பபாணங்களிலிருந்து வாராஹியும் தோன்றியதாக லலிதோபாக்யானம் கூறுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top