மதுரை மீனாட்சி கல்யாண வைபோகம் - வரலாறு

1
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மதுரை மீனாட்சி கல்யாண வைபோகம் பற்றிய சிறப்பு பதிவுகள் :

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அருள்மிகு மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணவைபோகம் இன்று (வியாழக்கிழமை, ஏப்ரல் 14, 2022) காலை 10.45 மணி முதல் 10.59 மணிக்குள் வெகு கோலாகலமாக நடந்து முடிந்தது.

விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் இரவில் நடந்தது. அப்போது மதுரையின் அரசியாக மீனாட்சிக்கு பட்டம் சூட்டப்பட்டது. அதை தொடர்ந்து மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக போரில் தேவர்களை வென்று, இறுதியில் சுந்தரேசுவரரிடம் போர் புரியும் திக்கு விஜயம் நிகழ்ச்சி நேற்று இரவில் நடந்தது.

வரலாறு:

மதுரையை ஆண்டு வந்த மலையத்துவஜ மன்னனின் மகளான மீனாட்சி ஆணுக்கு நிகரான அனைத்து வகைபோர்க்கலைகளையும் கற்றுத் தேர்ந்தவள். மதுரையின் அரசியாக, மங்கையர்க்கரசி மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.

மூன்று தனங்களுடன் பிறந்த மீனாட்சி, எந்த மன்னனைப் பார்க்கும் போது ஒரு தனம் மறைகிறதோ, அவரையே திருமணம் செய்து கொள்வார் என்று மலையத்துவஜ மன்னன் கூறுகிறான்.

பட்டாபிஷேகதிற்குப் பிறகு மதுரையிலிருந்து படையுடன் கிளம்பி, ஒவ்வொரு திக்கிற்கும் சென்று போர்தொடுக்கிறார் மீனாட்சி. பூமியில் உள்ள ஒவ்வொரு மன்னனையும் வெற்றி கொள்கிறார்.

அவ்வாறு கிழக்கு திசையில் அவர் சென்றபோது, அமராவதி நாட்டின் மன்னனான இந்திரன் மீனாட்சியுடன் போர் செய்கிறான். ஆனால் மீனாட்சியின் வீர பராக்கிரமத்திற்கு ஈடு கொடுக்காமல் பணிகிறான். இப்படி ஒவ்வொருதிசையிலும் போர் தொடுத்து அனைவரையும் தன் காலில் விழச் செய்கிறார் மீனாட்சி.

இதேபோல, கயிலாயத்தின் மீது படையெடுத்து செல்கிறார் மீனாட்சி. அங்கு குடியிருக்கும் சிவபெருமான் மீனாட்சியை யார் என்று அறிந்தவர் ஆதலால், உற்சாகத்துடன் அன்னையை எதிர்கொள்ளச் செல்கிறார். படையுடன்வீரம் கொப்பளிக்க நின்று கொண்டிருக்கிறார் மீனாட்சி.

எதிர்ப்புறத்தில் சிவபெருமான் வந்து கொண்டிருக்கிறார். சிவபெருமான் நெருங்கி வர வர அன்னையின் உள்ளத்தில் வெற்றி வேட்கை குறைந்து வெட்கம் முடி சூடுகிறது. சிவபெருமான் அருகில் வர வர தனது கையில் இருந்த வாளை கீழே போட்டு விட்டு தலை குனிகிறார்.

அப்போது மீனாட்சியின் மூன்றாவது தனம் மறைகிறது. தனது மனாளனைக் கண்ட பூரிப்பில் ஆழ்ந்து நிற்கிறார் அன்னை.

அப்போது சிவபெருமான், "அங்கயற்கண்ணியே நீ என்று மதுரையம்பதியை விட்டு படையுடன் கிளம்பினாயோ அன்றே நானும் உன்னைப் பின்தொடர ஆரம்பத்து விட்டேன். இன்றுதான் உன்னை நேரில் காண்கிறேன். இனிமேல்நீயே என் துணைவி" என்று கூறவே அன்னையின் முகம் வெட்கத்தால் சூரியனைப் போல சிவந்தது. அன்றே அன்னையின் கரம் பிடித்தார் எம்பெருமான்.

இதுதான் மீனாட்சி திருக்கல்யாணத்தின் பின்னணி. வட திசையில் பார்வதி - சிவபெருமான் திருக்கல்யாணம் நடந்தபோது, அதை தென் திசையில் இருந்தவர்களால் பார்க்க முடியவில்லை.

இதையடுத்து மதுரையில் மீனாட்சியாக அவதாரம் பூண்ட பார்வதியும், சொக்கராக அவதரித்த சிவபெருமானும் மதுரையில் திருமணம் செய்து கொண்டதே, மீனாட்சி திருக்கல்யாணம் என்றும் கூறுவார்கள்.

திருமணத்தைக் கண்டு களித்த மக்கள்:

இப்படிப்பட்ட விசேஷமான மீனாட்சி திருக்கல்யாணம் இன்று காலை விமரிசையாக நடந்தேறியது. அன்னையின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக திருப்பரங்குன்றத்திலிருந்து சுப்பிரமணியசுவாமி, தேவயானிசகிதம், பவளவாய் கனி பெருமாள் ஆகியோர் எழுந்தருளியிருந்தனர்.

இந்திரன், குபேரன் உள்ளிட்ட தேவர்கள் புடை சூழ, பவளவாய் கனி பெருமாள், தனது தங்கை மீனாட்சியை தாரைவார்த்துக் கொடுத்து திருமணம் செய்து வைத்தார்.

சரியாக காலை 10.52 மணிக்கு மீனாட்சி அம்மனின் கழுத்தில் வைரத்தாலி அணிவிக்கப்பட்டது. திருக்கல்யாணம் முடிந்தபின் அம்மனும், சுவாமியும் திருக்கல்யாண கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். 

இரவு 7.30 மணிக்கு சுந்தரேசுவரர் யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளை வலம் வருவார்கள்.

அதன் பிறகு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 16 காலை 5:50 மணிக்கு மேல் 6:20 மணிக்குள் நடக்கிறது. 

Post a Comment

1 Comments
  1. மிகவும் ‌அருமை.இதை படித்தவுடன் திருமண வைபவத்தை நேரில் பார்த்து மனமகிழ்ச்சி அடைந்தேன்.

    ReplyDelete
Post a Comment
To Top