நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி பற்றிய பதிவுகள் :

12 மாதங்கள் கொண்ட தமிழ் ஆண்டு கணக்கின் படி சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு வரும் மாதமே சித்திரை மாதம் எனப்படுகிறது. இறை வழிபாட்டிற்கும், பூஜைகளுக்கும் ஏற்ற மாதமாக வரும் இந்த சித்திரை மாதத்தில் பல சிறப்பு தினங்கள் வருகின்றன. அதில் ஒன்று தான் சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி தினம் ஆகும். இந்த தேய்பிறை அஷ்டமி தினத்தன்று நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை இங்கு விரிவாக காணலாம்.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் அஷ்டமி தினங்கள் வருகின்றன. இதில் தேய்பிறை அஷ்டமி தினம் சிவபெருமானின் ஒரு வடிவமாக தோன்றியவரான ஸ்ரீ பைரவரின் வழிபாட்டுக்குரிய ஒரு சிறந்த தினமாக இருக்கிறது. பைரவருக்கு பல வடிவங்கள் இருந்தாலும் பக்தர்கள் அதிகம் வணங்கக்கூடிய பைரவர் வடிவங்களில் ஒருவர் ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர்.

வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து, செல்வச்செழிப்பை வழங்குபவர் ஸ்வர்ணாகர்ஷண பைரவர் ஆவார். நவகிரகங்களில் சூரிய பகவானின் தோஷங்கள் நீங்கவும், அவரின் அருளை பெறுவதற்கும் வழிபடக்கூடிய தெய்வமாகவும் இந்த ஸ்வர்ணாகர்ஷண பைரவர் இருக்கிறார். எனவே சித்திரை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வணங்குவது மிகுந்த நற்பலன்களை பெற்று தரும்.

சித்திரை தேய்பிறை அஷ்டமி அன்று மாலை வேளையில் பைரவர் சந்நிதிக்கு சென்று ரோஜா மலர் மாலை சாற்றி, கோதுமை கொண்டு செய்யப்பட்ட இனிப்பு உணவுகளை நைவேத்தியம் செய்து, அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, தீபமேற்றி வடக்கு திசை நோக்கி அமர்ந்து பைரவருக்குரிய மந்திரங்கள் துதித்து பைரவரை வணங்க வேண்டும். உங்களால் இயலும் பட்சத்தில் வழிபாடு முடிந்ததும் கோயில்களில் உள்ள பக்தர்களுக்கு இனிப்புகள், கேசரி போன்றவற்றை பிரசாதமாக வழங்கலாம்.

மேற்கண்ட முறையில் சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியன்று சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபடுபவர்களுக்கு பொருளாதார நெருக்கடி நிலை மாறி தனவரவு அதிகரிக்கும். நெடுநாட்களாக இருந்து வரும் கடன் பிரச்சனைகள் வெகு விரைவில் தீரும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை இருந்தவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப்பெற்று லாபங்கள் அதிகரிக்கும். தரித்திரம், வறுமை நிலை போன்றவற்றை அறவே நீக்கும். சூரிய பகவானின் தோஷங்கள் நீங்கப்பெற்று உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

பைரவர் வழிபாடு :

சிவனின் அம்சமான பைரவர்களில் 
கால பைரவருக்கு உகந்த நாள் இந்த அஷ்டமி. இந்த தினத்தில் சிவாலயங்களில் உள்ள 
பைரவரை அபிஷேக ஆராதனைகள் 
செய்து வழிபட்டால் எதிரிகள் விலகுவர். 

காலபைரவர் துதி : 

விரித்த பல்கதிர் கொள்சூலம் 
வெடிபடு தமருகம் கை, 
தரித்தது ஓர் கோல 
கால பயிரவன் ஆகிவேழம், 
உரித்து உமை அஞ்சக்கண்டு 
ஒண்திரு மணிவாய் விள்ளச், 
சிரித்து அருள் செய்தார் 
சேறைச் செந்நெறிச் செல்வனாரை.!

- திருநாவுக்கரசர் .

Post a Comment

Previous Post Next Post