கற்சிலை வழிபாடு

1
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கற்சிலை வழிபாடு பற்றிய பதிவுகள் :
   
மனதில் அமைதியை உருவாக்கும் இடங்களாக கோவில்கள் உள்ளன. அங்கே உள்ள சிலைகள் கும்பாபிஷேக சடங்கு மூலம் சக்தி அளிக்கப்பட்டு, அனைவராலும் வழிபடப்படுவதை அனைவரும் அறிவோம். 

அந்த சிலைகள் ஒரு காலத்தில் கற்களாக இருந்தவைதான். சாதாரண கல் ஒன்று எவ்வாறு வழிபடப்படும் தெய்வீக வடிவத்திற்கு மாற்றப்படுகிறது என்பது பல படிநிலைகள் கொண்ட நீண்ட செயல் திட்டமாகும். 

அவற்றின் பின்னணியில் பலரது உழைப்பும், தொழில் நுட்பமும், ஆன்மிகம் மற்றும் அறிவியல் காரணங்களும் அடங்கி இருக்கின்றன. கருங்கல் சிலை ஒன்று எவ்வாறு தெய்வீக அருள் தரும் சிலையாக மாறுகிறது என்ற தகவல்களை இங்கே பார்க்கலாம்.

பெரும்பாலான, கோவில்களில் உள்ள வழிபாட்டுக்கு உரிய சிலைகள் கருங்கற்களால் உருவாக்கப்பட்டிருக்கும். சில இடங்களில் சுதை என்ற சுண்ணாம்பு கலவை அல்லது மார்பிள் கற்கள் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும். அவ்வாறு அமைந்த சிலைகளின் அடிப்படை வெறும் கல்தான் என்று நினைத்து விட இயலாது. 

ஒரு சிலையை வடிப்பதற்கு முன்னர் அதன் தெய்வ அம்சம், உயரம், வடிவம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிகம் சம்பந்தமான அடிப்படை கட்டமைப்பு அம்சங்களை தேர்ந்த நிபுணர்கள் முடிவு செய்வார்கள்.

அதன் பின்னர் தேர்வு செய்த விஷயங்களுக்கு ஏற்ப கருங்கல் அல்லது மார்பிள் வகை கற்கள் உள்ள பகுதிக்கு சென்று தேவையான அளவு கொண்ட கல் தக்க தர நிலையில் உள்ளதா என்று கவனமாக தேர்வு செய்து, சிலையின் உயரம் மற்றும் அகலம் ஆகியவற்றை விடவும் நான்கில் ஒரு பங்கு அளவு அதிகம் கொண்ட கல் தேர்வு செய்யப்பட்டு கோவில் அமைய உள்ள பகுதிக்கு எடுத்து வரப்படும்.

அதன் பின்னர் சிற்ப சாஸ்திர விதிகளின்படி சிலை முழுமையாக உருவாவது வரை நிறைய ஐதீக நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. சிலையை உருவாக்கும் நிலையிலேயே நிறைய விதிமுறைகள் இருப்பது மட்டுமல்லாமல், மூலவராக உருவாக்கப்பட்ட சிலையை அப்படியே கோவிலுக்குள் எடுத்து சென்று பிரதிஷ்டை செய்து விட இயலாது. 

அதற்கான பிரதிஷ்டா நியமன வழிமுறைகள் அனைத்தும் அறிவியலும், ஆன்மிகமும் இணைந்த நிலையில் செயல் வடிவம் கொண்டவை. அவற்றின் மூலம் சிலைக்குள் இறை அம்சம் வரவழைக்கப்படுகிறது.

ஆகம விதிமுறைகளின்படி உருவாகும் கடவுள் சிலைகள் முதல் கட்டமாக சுத்தம் செய்யப்பட்டு, நல்ல நாளில் ஜலவாசத்தில் வைக்கப்படும். அதாவது, மூன்று புண்ணிய நதிகள், முக்கியமான தீர்த்தங்கள் ஆகியவற்றிலிருந்து எடுத்து வரப்பட்ட நீரை சிலை அமைய உள்ள பகுதியின் நீரோடு கலக்கப்படும். 

அந்த நீரை ஒரு பெரிய தொட்டியில் நிரப்பி புதிய சிலை அதற்குள் நன்றாக மூழ்கும்படி, படுக்கை வசத்தில் ஒரு மண்டலம் என்ற 48 நாட்கள் வைக்கப்படும்.

ஜலவாசத்தில் இருக்கும் சிலை படிப்படியாக குளிர்ச்சி அடைந்து நாளடைவில் மேலும் உறுதியாக மாறிவிடும். அவ்வாறு 48 நாட்கள் ஜலவாசத்தில் இருக்கும் சிலையில் ஏதாவது துளைகள் அல்லது நுட்பமான பிளவுகள் இருந்தால் நீர் அதற்குள் நுழைவதன் காரணமாக, நீர் குமிழிகள் உருவாகி மேலே வரும். 

அதன் அடிப்படையில், அது பின்னமான சிலை என்றும், வழிபாட்டுக்கு ஏற்றது அல்ல என்றும் கண்டறியப்படும். அதன் மூலம் குறையுள்ள சிலை கோவிலில் பிரதிஷ்டை செய்யாமல் தவிர்க்கப்படுகிறது. குறை உள்ள சிலையை பிரதிஷ்டை செய்வதன் மூலம் சம்பந்தப்பட்ட ஊருக்கும், அதில் வசிக்கும் மக்களுக்கும் பாதிப்புகளை உருவாக்கும் என்பது சாஸ்திர விதியாகும். அந்த நிலையை ஆரம்பத்தியிலேயே தடுக்கும் வழிமுறையாக ஜலவாசம் என்ற நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது.

அதன் பின்னர் 48 நாட்கள் கழித்து, நீரில் ஊறிய சிலை எடுக்கப்பட்டு, அடுத்த கட்ட நடைமுறையான தானிய வாசத்தில் வைக்கப்படும். அதன்படி, சிலையை பாதுகாப்பான ஒரு இடத்தில் கிடை மட்டமாக வைத்து, முற்றிலும் மூழ்கும் அளவுக்கு நவ தானியங்கள் கொட்டப்படும். 

நவ தானியங்களோடு நவ ரத்தினங்கள், பொன், வெள்ளி மற்றும் செப்பு காசுகள் ஆகியவற்றையும் சேர்த்தே இந்த தானிய வாசம் வைக்கப்படுவது வழக்கம். சிலையில் தானிய வாசமும் 48 நாட்கள் கொண்டதாகும்.

Post a Comment

1 Comments
Post a Comment
To Top