லோகமாதாவாகிய கௌரி தேவிக்கு உரிய விரதங்கள் ஒவ்வொரு மாதத்திலும் உண்டு. அதில் பிரசித்திப் பெற்றது கேதார கௌரி விரதம்.
ஆனால் அதைத் தவிர வெவ்வேறு பெயர்களில், அந்தந்த மாதங்களை பொறுத்து, கௌரி விரதங்கள் உண்டு.
அதில் இன்றைய தினம் வருகின்ற கௌரி விரதம் புன்னாக கௌரி விரதம் என்று வழங்கப்படுகிறது. பெரும்பாலும் பெண்கள் இந்த விரதத்தில் இருப்பார்கள்.
இதன் பலனாக நிம்மதியான மணவாழ்க்கையும், குடும்ப அமைதியும், குடும்பத்தில் பொருளாதார முன்னேற்றமும், கணவருக்கு ஆயுள் பலமும், குழந்தை களுக்கு நல்ல எதிர்காலமும் கிடைக்கும்.
இந்த புன்னாக கௌரி விரதத்தின் சிறப்புப் பலன், வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியம் ஏற்படும். நோயுற்றவர்கள் சீக்கிரம் நலம் பெறுவார்கள்.
வீட்டில் முறையாக கலசம் வைத்து, பூஜை செய்யலாம். அல்லது அன்றைக்கு விரதமிருந்து, மாலையில் அம்மன்கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வணங்கி வரலாம்.
இந்த விரதத்தைப் பொறுத்தவரை புன்னை மரத்தடியில் மேடை அமைத்து, பூக்களால் அலங்கரித்து அம்பிகையின் படத்தை வைத்து பூஜிக்க வேண்டும்.
அம்பிகைக்கு எல்லா வகையான உபசாரங்கள் செய்ய வேண்டும். பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். இதில் எது முடியுமோ, அதனைச் செய்யலாம்.
நமது பாரதபூமி புண்ணிய பூமி. பல்வேறு புனித நதிகள் பாய்ந்து வளம் பெருக்கும் பூமி. நம் நாட்டின் மிகப்பெரிய சிறப்புக்களில் ஒன்று கங்கைநதி. கங்கை நதி என்று சொன்னாலே பாவங்கள் தீர்ந்துவிடும்.
புனித கங்கை நதி இந்த பூமிக்கு வந்த நாளைக் கொண்டாடும் விதமாக வைகாசி மாத அமாவாசைக்கு பிறகான பத்து நாட்களும் கங்கா தசராவாக கொண்டாடுகிறது.
இந்த நாளில் கங்கையை வணங்குகின்றனர். இதனால் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும். இன்று முதல் தசமி வரை பாபஹர தசமியாகவும் கங்கா தசராவாகவும் கொண்டாடப் படுகிறது.
இந்த நாளில் கங்கையில் நீராடினால் நாம் செய்த பத்து வித பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். கங்கை பாயும் பகுதிகளில் இந்த கங்கா தசரா விழா கொண்டாடப்படுவது போல ராமேஸ்வரத்திலும் பாபஹர தசமி விழா கொண்டாடப்படுகிறது.
அக்னி தீர்த்தத்தில் அன்று நீராடுவது சிறப்பு, அல்லது வீட்டிலேயே நீராடுகின்றவர்கள் நீராடும் நீரை கங்கையாக பாவித்து, வணக்கம் செலுத்தி, நீராடினாலும் பாவங்கள் போய்விடும்.