திக் என்றால் திசை. அஷ்டம் என்றால் எட்டு. அமாவாசையில் இருந்தும் பெளர்ணமியில் இருந்தும் வருகிற எட்டாம் நாள் அஷ்டமி திதி என்று அதனால் தான் சொல்கிறோம். அஷ்ட திக் என்றால், எட்டுத் திசை என்று அர்த்தம். அஷ்ட திக் பாலகர்கள் என்றால், எட்டுத்திசைக்குமான நாயகர்கள், தலைவர்கள், பாதுகாவலர்கள் என்று அர்த்தம்.
1. இந்திரன்,
2. அக்னி தேவன்,
3. எமதருமன்,
4. வருண பகவான்,
5. நிருதி பகவான்,
6. வாயு பகவான்,
7. குபேரன்,
8. ஈசானன்
ஆகிய எட்டுபேரும் அஷ்ட திக் பாலகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையின் நாயகர்கள். அந்தந்த திசைக்கு அதிபதிகள்.
கிழக்குத் திசை :
விடியலுக்கும் சூரியோதயத்திற்கும் பெயர் பெற்ற கிழக்குத் திசைக்கு அதிபதி, இந்திரன். தேவர்களின் தலைவன். இந்திரனின் மனைவி இந்திராணி. தேவர்களுக்கு மட்டுமின்றி, அஷ்டதிக்குகளுக்கும் அஷ்டதிக் பாலகர்களுக்கும் தலைவன் இவர். வழிபடும் போது இந்திரனை நினைத்து வேண்டிக்கொண்டால், சகல வளமும் நலமும் கிடைக்கப் பெறலாம். நோய் நொடியில்லாமல் ஆரோக்கியத்துடன் வாழலாம். தீராத நோயையும் தீர்த்துவைப்பார் இந்திரன்.
தென்கிழக்கு திசை :
தென்கிழக்கு திசைக்கு அதிபதி அக்னி தேவன். ஹோமங்களின் போது, அதில் இடப்படுகிற நைவேத்தியங்களை மற்ற தெய்வங்களுக்கு நம் சார்பாக எடுத்துச் சென்று கொடுக்கும் பணியைச் செவ்வனே செய்பவர் இவர். அக்னி தேவனின் மனைவி சுவாகா தேவி என்கிறது புராணம்.
அதனால்தான், அக்னியில் நெய் வார்க்கும் போது, ஒவ்வொரு முறையும் ‘சுவாகா’ என்று சொல்லுகிறோம் என விவரிக்கிறார்கள். எந்தவொரு சமயமாக இருந்தாலும் அக்னி தேவனை வணங்கி வழிபட்டால், சகல தெய்வங்களின் அருளையும் பெறலாம். தனம், தானியம் பெருகும். இல்லத்தில் சுபிட்சம் நிலவும்.
தென் திசை :
தெற்குத் திசையின் நாயகன் எமதருமன். எமதருமனை வணங்கினால், எம பயம் விலகும். தீராத நோயும் தீரும். நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்கப் பெறலாம்.
மேற்குத் திசை :
வருண பகவான், மேற்குத் திசையின் நாயகன். காவலன். மழைக்கடவுள் இவர். குளிர்ந்த மாலை வேளையில், வருண பகவானை நினைத்து பிரார்த்தனை செய்தால், பூமியை மழை பொழியச் செய்து குளிரப் பண்ணுவார். விவசாயம் தழைக்க அருளுவார்.
தென்மேற்கு திசை :
நிருதி பகவான் தென்மேற்கு திசையின் அதிபதி. இவரை வழிபட்டு வந்தால், மனோபலம் பெருகும். மனதில் தைரியம் பிறக்கும். எதிரிகள் பற்றிய பயமும் நீங்கும்.
வடமேற்கு திசை :
வடமேற்கு திசைக்குக் காவலன் வாயு பகவான். இவரை வழிபட்டுப் பிரார்த்தனை செய்தால், உடல் நலக் கோளாறுகள் நீங்கும். வயிறு சம்பந்தமான பிரச்சினையும் குறைபாடுகளும் தீரும்.
வடக்குத் திசை :
குபேரன். சொல்லும் போதே வேண்டிக்கொள்ள நினைக்கும் அஷ்டதிக் பாலகர்களில் இவரும் ஒருவர். வடக்குத் திசையின் நாயகன். இவரை வழிபட்டால், குபேர யோகம் கிடைக்கும். சகல ஐஸ்வரியங்களையும் தந்தருள்வார் குபேரன்.
வடகிழக்கு திசை :
வடகிழக்கு திசையின் அதிபதி, நாயகன், ஈசானன். மங்கல காரியங்கள் அனைத்தையும் நடத்திக் கொடுப்பவர். சிவனாரின் ஐந்து முகங்களில், ஈசானமும் ஒன்று. அந்த ஈசான உருவம் கொண்டவர்தான் வடகிழக்கு திசையின் நாயகன். இவரை வழிபட்டு வந்தால், ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறலாம்.