கிருத்திகை விரதம்

1
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கிருத்திகை விரதம் பற்றிய பதிவுகள் :

கிருத்திகை விரத நாளில், கவலைகள் நீங்க முருகனை மனதார வழிபடுங்கள்.

முருகப்பெருமானை வழிபடுவதற்குரிய மிக சிறந்த மாதமாக வைகாசி மாதம் இருக்கிறது. இந்த மாதத்தில் வரும் கிருத்திகை தினத்தன்று முருகப்பெருமானுக்கு பல கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

கிருத்திகை நட்சத்திரம் சூரிய பகவானுக்கு உரிய நட்சத்திரம் ஆகும். அதிலும் இன்று சூரிய பகவானுக்குரிய ஞாயிற்றுக்கிழமையில் (மே 29ஆம் தேதி) கிருத்திகை தினம் வருவது மிகவும் சிறப்பானதாகும்.

கிருத்திகை நட்சத்திர விரதம் :

கிருத்திகை நட்சத்திரத்தன்று அனுஷ்டிக்கப்படுவது கிருத்திகை விரதம் ஆகும்.

சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளில் இருந்து முருகப்பெருமான் தோன்றினார். இந்த முருகப்பெருமானை கார்த்திகை பெண்கள் 6 பேர் கந்தனைப் பாலூட்டி வளர்த்தனர்.

முருகப்பெருமானை சரவணப் பொய்கையில் இருந்து எடுத்து வளர்த்த கார்த்திகை பெண்களுக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக, சிவபெருமான் அவர்களுக்கு ஒரு வரம் அளித்தார்.

சிவபெருமான், கார்த்திகை பெண்களே நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான் என்றும், உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோருக்கு இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்றும் வரம் அளித்தார்.

விரதம் இருக்கும் முறை :

ஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் மேற்கொண்டால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

முருகனின் அருளாற்றல் கிடைக்கும் இத்தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து முடித்து விட்டு, பூஜையறையில் முருகப்பெருமான் படத்திற்கு பூக்களை சாற்றி, தீபம் ஏற்றி காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, மாலையில் முருகன் படத்திற்கு நைவேத்தியம் படைத்து தீபம் ஏற்றி வழிபடவும்.

கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்றவற்றை பாராயணம் செய்து முருகனுக்கு சர்க்கரை பொங்கல், கேசரி போன்றவற்றை நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும்.

மேற்கண்ட முறையில் முருகனை வைகாசி மாத கிருத்திகை தினத்தில் வழிபட்டு முடித்ததும், அருகிலுள்ள முருகன் கோயிலுக்கும் சென்று வழிபடுவது சிறப்பு.

மேலும் கோயிலுக்கு வெளியே இருக்கும் ஏழை மக்களுக்கு தயிர் சாதம், எலுமிச்சை சாதம் போன்றவற்றை இந்த தினத்தில் அன்னதானம் செய்தால் மேன்மை ஏற்படும். பின்னர் வீட்டிற்கு சென்று பால், பழம் சாப்பிட்டு கிருத்திகை விரதத்தை முடிக்க வேண்டும்.

முருகப்பெருமானின் பரிபூரண அருள் கிடைக்க கிருத்திகை விரதத்தை பின்பற்றுங்கள்.

Post a Comment

1 Comments
  1. VERY GOOD MSG THANKS FOR YOUR GOOD MESSAGE

    ReplyDelete
Post a Comment
To Top