தென் காளஹஸ்தி ஆலயம் வரலாறு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தென் காளஹஸ்தி பற்றிய பதிவுகள் :

332 ஆண்டுகள் பழைமையான இக்கோயில் தென் காளஹஸ்தி என்று அழைக்கப்படுவது இதன் தனிச்சிறப்பு. இங்கு ராகு - கிம்ஹிசை, கேது - சித்ரகால தேவி தம்பதியராக அருள் பாலிக்கின்றனர்.

கோயில் உருவான வரலாறு:

திருக்காளஹஸ்தியில் எழுந்தருளியிருக்கும் காளஹஸ்தீசுவரரின் தீவிர பக்தராக இருந்தவர் பிச்சை. ஒவ்வொரு ஆண்டும் மாசி மகா சிவராத்திரி தினத்தன்று திருக்காளஹஸ்தி சென்று திருக்காளதீசுவரரை வழிபடுவது இவரது வழக்கம். 

சில ஆண்டுகள் கழித்து முதுமைப் பருவமெய்திய பிச்சைக் கணக்கரால் திருக்காளஹஸ்தி சென்று இறைவனை வழிபட இயலவில்லை. இதனால் மனம் உடைந்த பிச்சை கணக்கர் பல நாள்கள் உண்ணாவிரதம் இருந்து தனக்கு அருள் பாவிக்குமாறு இறைவனை வேண்டினார். 

பிச்சை கணக்கரின் வேண்டுதலை ஏற்றுக்கொண்ட இறைவன் அவரின் கனவில் தோன்றி அந்தக்குழந்தை வடிவில் வந்து, காட்டூரில் அமைந்துள்ள வில்வ வனத்தின் வெள்ளை அரளி பூ பூத்திருக்கும் மரத்தடியில் நீ என்னைத் தரிசிக்கலாம் என்றும் நீ விரும்பும் இடத்தில் கோயில் அமைத்து என்னை வழங்கலாம் என்றும் கூறி மறைந்தார்.

திருக்காளஹஸ்தி

மறுநாள் காலை தான் கண்ட கனவினை பிச்சை கணக்கர் காட்டூர் மக்களிடம் கூறிய பொழுது அளவற்ற ஆனந்தம் அடைந்தார்கள். வில்வ வனம் சென்று ஊர் மக்கள் அனைவரும் இறைவனை லிங்க வடிவில் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். 

வில்வ வனத்தில் இருந்து இறைவனை ஊருக்குக் கொண்டு வரும் வழியில் வண்டியின் அச்சு முறிந்தது. ஊர் மக்கள் எவ்வளவோ முயன்றும் வண்டியை அவ்விடத்தில் இருந்து நகர்த்த முடியவில்லை. அப்பொழுது முருகப் பெருமாள் ஆறுமுகர் உருவில் எழுந்தருளி மக்களுக்கு அருள் வழங்கினார்.

முருகப்பெருமான் அருள் பாலித்ததால் அவ்விடத்திலேயே திருக்காளதீசுவருக்கு கோயில் அமைத்தனர். சிவபெருமான் அருகே அம்மனுக்கும் கோயில் கட்ட வேண்டும் என ஊர் மக்கள் நினைத்து பிச்சைக் கணக்கரிடம் வேண்டுகோள் வைத்தனர். அவரும் மனமுருகி இறைவனை வேண்டினாா். 

ஒருநாள் பிச்சையின் கனவில் தோன்றிய இறைவன் முல்லைப் பெரியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வரும்பொழுது அம்மன் சிலை கிடைக்கும் என்று கூறி மறைந்தார். கடவுளின் அனுக்கிரகத்தால் அம்மன் சிலையும் முல்லையாற்றில் கிடைத்தது. திருகாளதீஷ்வரர் சன்னதி அருகே ஞானாம்பிகை அம்மனுக்குக் கோயில் கட்டி வழிபட்டு வருகின்றனர்.

இக்கோவிலில் உள்ள சிற்பக்கலையைப் பார்க்கும் பொழுது நாயக்கர் கால கட்டடக் கலையை உணர்த்துகின்றன. இங்கு பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்ட எழுத்துக்கள் உள்ள கல் தூண் காணப்படுகிறது. ஒவ்வொரு தூண்களிலும் ஹனுமான், காளியம்மன், மீனாட்சி அம்மன், சூரியன், அம்மனின் அவதாரங்கள் போன்றவை சிற்பக் கலையின் நுணுக்கத்தை உணர்த்துகின்றன. 

அக்காலத்திலேயே மக்கள் சிந்திக்கும் படி சிற்பத்தில் புதிரையும் வைத்துள்ளனர். (சிற்பத்தில் மீன் வாயில் முதலை என்று உணர்த்துகிறது). மேலும் இங்கு அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கும் வடக்கு நோக்கி கோயிலில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் முருகப்பெருமான் காளத்தீஷ்வரர் சந்நிதிக்கும், ஞானாம்பிகை சந்நிதிக்கும் இடையில் இருப்பதால் ஈசன் சோமஸ்கந்தராகக் காட்சி அளிக்கிறார்.

பாசுபதாஸ்திரம்:

மகாபாரதத்தில் அர்ஜுனன் பீஷ்மரைக் கொள்வதற்காகச் சிவனை நோக்கி பாசுபதாஸ்திரம் வில்லை பெறுவதற்காகப் பன்றி உருவத்தில் தவம் புரிந்தார். அவர் தவம் புரிந்த காட்சியைச் சிற்பமாக வடித்துள்ளனர். 

பெரும்பாலும் முருகன் சன்னதியில் இடது பக்கம் மயிலின் தோகையும், வலது பக்கம் தலையும் அமைந்திருக்கும். இக்கோயிலில் தனிச் சிறப்பாக இடக்கைப் பக்கம் மயிலின் தலையும் வலப்பக்கம் தோகையுமாகக் காட்சி அளிப்பது மயூர வாகனம் என்று அழைக்கப்படுகிறது.

கால சக்கரம் :

நந்திக்கு மேல் காலச் சக்கரம் தமிழ்நாட்டிலேயே இரண்டு தலங்களில் மட்டுமே அமைந்துள்ளன. ஆவுடையார் கோயிலிலும், ஞானாம்பிகை கோயிலிலும் அமைந்துள்ள அந்த ராசி நட்சத்திர மண்டல வாஸ்து சக்கரம் இங்கேயும் அமைந்துள்ளது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். 

இங்கு ஞானாம்பிகை அம்மன் மற்றும் ராகுவும் கேதுவும் தம்பதியராக இருப்பதால் திருமணமாகப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். இங்குள்ள சுரதேவருக்கு ரசம் சாதம் படைத்து வழிபட்டால், நாள்பட்ட காய்ச்சல் மற்றும் உடல் உஷ்ண நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் இங்கு ஸ்வாமிக்கும் கண்ணப்ப நாயனாருக்கும் வஸ்திரம் சமர்ப்பித்து வழிபட்டால் கண் நோய் நீங்கும் என்பதும் நம்பிக்கை.

தேனியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள உத்தமபாளையம் பேருந்து நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ளது கோயில்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top