திருவக்கரை என்ற இடத்தில் வடிவாம்பிகை சமேத சந்திரசேகரர் ஆலயம் உள்ளது. வக்ரன் என்ற அசுரன் வழிபட்டதால் இந்த தலம் ‘வக்கரை’ என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.
இங்கு மூலவர் மூன்று முக லிங்கமாக இருப்பது சிறப்பு. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மரங்கள், இங்கே கல்லாக மாறி இருப்பதை காண முடியும். இந்த சிவன் கோவிலில் இருக்கும் முருகப்பெருமான் பிரசித்தி பெற்றவராக திகழ்கிறார்.
இவர் பன்னிரு கரங்களுடன் ஆறுமுகப்பெருமானாக, மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார். அவருக்கு இருபுறமும் வள்ளி-தெய்வானை உள்ளனர்.
அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்ற தலம் இதுவாகும். அந்த திருப்புகழைப் பாடி, இத்தல முருகனை வணங்கினால், நினைத்தது நிறைவேறும். திண்டிவனத்தில் இருந்து மயிலம் வழியாக, புதுச்சேரி செல்லும் சாலையில் இருக்கிறது திருவக்கரை திருத்தலம்.
திருவிடைக்கழி குமரன் :
தன் பக்தனான மார்க்கண்டேயனை ‘என்றும் 16’ வயதுடன் இருக்க ஈசன் அருளிய தலம் திருக்கடவூர். இந்த ஆலயத்தில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது திருவிடைக்கழி என்ற திருத்தலம்.
இங்குள்ள குரா மரத்தின் அடியில்தான் ராகு பகவான், முருகப்பெருமானை வழிபட்டு பேறுபெற்றார் என்கிறது தல புராணம். இந்த ஆலயத்தில் உள்ள சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், நடராஜர், பிரதோஷ நாயகர், சண்டேஸ்வரர் என அனைத்து வடிவங்களும் முருகப்பெருமானாகவே காட்சியளிப்பது ஆலயத்தின் தனிச் சிறப்பாகும்.
தெய்வானைக்கு, இந்த ஆலயத்தில் தனிச் சன்னிதி இருக்கிறது. தாயாருக்கு அருகில் முருகப்பெருமானின் ‘குஞ்சரி ரஞ்சித குமரன்’ என்ற இறை வடிவத்தை வைத்துள்ளனர். இத்தல முருகப்பெருமானை வழிபட்டால் கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்கலாம். தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடையும்.