தெய்வீக மணம் கமழும் ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். அந்தளவுக்கு வீடுகளிலும், கோயில்களிலும் விழாக்களும், விரத வழிபாடுகளும் களை கட்டி விடும்.
அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி ஸ்தலங்களில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் என்று பக்தி மணம் கமழும். ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மிக விசேஷமானவை.
திருக்கொயில்களில் முக்கியமாக அம்பிகை வீற்றிருக்கும் ஆலயங்களில் சிறப்பு மிக்க பூஜைகள், ஹோமங்கள், பால்குட உற்சவங்கள், பூச்சோரிதல், சந்தனக்காப்பு என விமர்சையாக நடைபெறுகின்றன.
ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அம்பாளை வழிபட பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை. ஆடி வெள்ளி வழிபாடு செய்வதால் திருமண பாக்யம் கைகூடும் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஆடி வெள்ளி அன்று அம்பாள் குளிர்ந்த மனத்துடன் வேண்டும் வரங்களை நல்குவாள் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை. ஆடி ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைகளையும் நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் நாளாக கருதப்படுகிறது.
ஜோதிட சாஸ்திரத்தில் ஆடி மாதத்தை ‘கர்கடக மாதம்’ என்பார்கள். சூரியன் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத துவக்கம்.
தமிழ் மாத பிறப்புகளுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது. அந்தந்த கால, பருவ சூழ்நிலைக்கு ஏற்ப திருவிழாக்களையும், உற்சவங்களையும், விரத வழிபாடுகளையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர். தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆடி, தட்சிணாயன புண்ய காலமாகும். இது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன.
ஆடி மாத சிறப்புகளாக அம்மனுக்கு பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபடுதல் என்று இந்த மாதம் முழுவதும் வழிபாடு மாதமாகிறது.
ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு, ஆடி பவுர்ணமி, ஆடிப்பெருக்கு, வரலட்சுமி விரதம் என்று பலப்பல விசேஷ நாட்கள் இந்த மாதத்தில் வருகின்றன.
இத்தனை சிறப்புகள் மிக்க ஆடி மாதத்தில் நல்ல காரியங்களை ஆரம்பிக்க கூடாது, செய்யக் கூடாது என்ற கருத்து நிலவுவதற்கும் காரணம் உண்டு. இந்த மாதத்தில் விரதங்கள், வழிபாடுகள், கோயில் திருவிழாக்கள் மாறிமாறி வந்துகொண்டே இருக்கும். ஆன்மீகத்திலும் இறை வழிபாட்டிலும் மனப்பூர்வமாக ஈடுபட வேண்டியிருப்பதால் மற்ற காரியங்களில், விசேஷங்களில் கவனம் செலுத்துவது சிரமம்.
இறைவனை துதிப்பதற்கும், அவன் சிந்தனையாகவே ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்வதற்கும் இடையூறாக மற்ற விழாக்கள், நிகழ்ச்சிகள் இருந்துவிட கூடாது என்பதற்காகவே மற்ற சுப விசேஷங்கள் இந்த மாதத்தில் தவிர்க்கப்படுகிறது.