தோஷங்கள் நீக்கும் பிரம்மதேசம் கங்காள நாதர்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தோஷங்கள் நீக்கும் பிரம்மதேசம் கங்காள நாதர் பற்றிய பதிவுகள் :

அம்பாசமுத்திரத்திற்கு அருகில் இருக்கும் பிரம்மதேசம் (அயனீஸ்வரம்) கோவிலுக்கு செல்பவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய அற்புத கலையம்சம் கொண்ட மூர்த்தி கங்காளநாதர்.

இங்கு சுமார் ஏழடி உயரத்தில் நின்ற கோலத்தில் கம்பீரமாக காட்சித் தருகிறார் இத்தலத்தின் சிறப்பு வாய்ந்த மூர்த்தியான கங்காளநாதர். 

இவருடன் பூத கணங்கள், அப்சரஸ் கன்னிகள், இந்திரன், சந்திரன், சூரியன் ஆகிய பரிவார மூர்த்திகளும் ஒரே சன்னதியில் காட்சித் தருகிறார்கள். 

இந்த சன்னதி அற்புத கலையம்சம் கொண்டது ஆகும்.

கங்காளநாதர் மூர்த்தியின் அமைப்பு:

குறைந்தபட்சம் 7 அடி உயரம் நீண்ட கைகளும் கால்களும். பீடம் ஏதுமின்றி தேர்ந்த வேடுவனைப் போல் நிற்கிறார். 

இடது கையில் கங்காளம் எனப்படும் உடுக்கை போன்றதொரு வாத்தியம், வலது கையில் எலும்பைப் போன்றதொரு தண்டம். 

இடதுகால் பூமியில் அழுந்தப் பதிந்திருக்க வலக்கால் சற்றே வளைந்து நடந்து செல்வதைப் போன்ற தோற்றம். 

மலரும் பிறையும், சர்ப்பமும் சூடிய ஜடா மகுடம். பெருக்கிய காதுகளில் ஒரு காதில் மிகப்பெரிய குண்டலம். இடையில் புலிக்கச்சையாக இருக்கலாம் வஸ்திரம் தரித்திருந்ததால் தெரியவில்லை. 

புன்னகையும், கருணையும், அருளும் ததும்பும் கண்களை உடைய திருமுகம். நான்கு கரங்களில் பின்னிரு கரங்களில் ஒரு கையில் பாணமும் மறுகையில் முத்திரையும்.

இவரைச் சுற்றி இசைக்கருவிகளோடு அவரது முழங்கால் உயரத்திற்கு 5 பூத கணங்களின் நின்ற திருக்கோலம். 

உச்சிக்கு மேலே சுவற்றில் புடைப்புச் சிற்பமாக இந்திராதி தேவர்கள், விஷ்ணு, ரிஷி புங்கவர்கள், கின்னரர், கிம்புருடர், குதிரை, யானை, அப்சரஸ்கள் .

இதில் சில அப்ஸ்ரச்களின் உருவங்கள் சுதை சிற்பமாக செய்யப்பட்டு வஸ்திரமும் வர்ண கலாபமும் கொண்டு அழகு செய்யபட்டவை மிகவும் பழமையானவை.

பிரம்மாண்டாமாகத் தெரிகின்ற இவரது திருமேனி வடிவத்தினை ஒரு சிலர் இவர் பிட்சாடனர் வடிவம் என்று நினைத்து குழப்புகின்றனர்.

கங்காளநாதர், பிட்சாடனர், அந்தகாசுர சம்ஹார மூர்த்தி ஆகிய மூன்று வடிவங்களைப் பற்றியும் பக்தர்களிடையே குழப்பம் நிலவுகிறது. உண்மையில் இம்மூன்று வடிவங்களும் வேறு வேறு தான். 

கங்காளநாதர், பிட்சாடனர், அந்தகாசுர சம்ஹார மூர்த்தி ஆகிய மூன்று வடிவங்களின் தோற்றத்தில் சில வித்தியாசங்கள் இருக்கின்றன.

பிட்சாடனர்

வல மேல் கையில் உடுக்கை; வலது கீழ் கையில், மானுக்கு புல்; இடது மேல் கையில் சூலம்; இடது கீழ் கையில் கபாலம்; ஆடையின்றி இருப்பார்.

கங்காளர்

வல மேல் கை கீழே வரை வந்திருக்கும். அதில் மானுக்கு புல் இருக்கும்; இடது மேல் கையில் சூலம் அல்லது தண்டு; அதில் விஷ்ணுவின் சடலம் தொங்கிக் கொண்டிருக்கும்; வலது கீழ் கையில் உடுக்கைக்குரிய கோலும், இடது கீழ் கையில் உடுக்கையும் இருக்கும். ஆடை உடுத்தியிருப்பார்.

அந்தகாசுர சம்ஹார மூர்த்தி: 

அருகில் அம்மை இருப்பாள்; காலின் கீழ் அந்தகாசுரன் இருப்பான். வலது கையில் சூலம் ஏந்தியிருப்பார். (சில விக்கிரகங்களில் காலின் கீழ் இருப்பதற்கு பதிலாக, சூலத்தில் அந்தகன் சடலமாக தொங்குவது போல வடிவமைக்கப்பட்டிருக்கும்) இருபின்புறக் கைகளிலும் மான் மழு இருக்கும். 

பிரம்ம தேசத்தில் அருள்பாலிக்கும்
அற்புத கலையம்சம் கொண்ட இந்த கங்காளநாதர் சன்னதியில் நிற்க நிற்க சன்னதியின் வெம்மையும் அவரின் ஆகர்ஷ்ணமும் நம்மை ஈர்த்து நம்முள் கங்காளத்தின் ஒலி இயல்பாவே கேட்கத்துவங்குகிறது. 

உடலும் உயிரும் ஒரு புள்ளியில் சேர சில கணங்களில் நாம் அந்த சிவ கணங்களில் ஒன்றென மெய்மறந்து போகிறோம் என்பதே இந்த கங்காளநாதர் தரிசனத்தில் கண்டு கொள்ள வேண்டிய உண்மை.

பிரம்ம தேசத்தில் அற்புத கலையம்சம் கொண்ட இந்த கங்காளநாதரின் தரிசனம் கண்டு வந்து பல நாட்கள் ஆன பிறகும் அப்படியே கண்ணுள் நிற்கும் அவரின் திருவுருவ காட்சியை எப்படி சொல்லி விளங்க வைப்பது என புரியவில்லை

பார்த்த மாத்திரத்தில் நம்மை உள்ளே ஆழ அமிழ்த்தும் அற்புத கலையம்சம் கொண்ட 
இந்த கங்காளநாதரை வாழ்வில் ஒருமுறையாவது கண்டு மீள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள.

அம்பாசமுத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் பிரம்ம தேசம் உள்ளது.

இந்த கங்காளநாதரை அமாவசையன்று காலை 9-12 மணிக்குள் தரிசனம் செய்வதால்
பித்ரு தோஷம் முதல் அனைத்து வகை தோஷங்களும் நீங்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top