விநாயகர் சதுர்த்தி பூஜை வழிபாடு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விநாயகர் சதுர்த்தி பூஜை வழிபாடு பற்றிய பதிவுகள் :

நாம் எந்த காரியம் தொடங்கும் முன்பு விநாயகரை வழிபடுவது வழக்கம். கணபதியை கையெடுத்து கும்பிட்டால் காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை. பிள்ளையார் சுழி போட்டுத்தான் செயல்களைத் தொடங்குவது வழக்கம். 

முழு முதற்கடவுளான விநாயகருக்கு ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வரும் 31ஆம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. 

விநாயகரின் திருவடிகள் இரண்டும் ஞானம், கிரியை எனும் சக்திகளை உணர்த்துபவை. சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்றையும் முக்கண்களாகப் பெற்றவர். துதிக்கை - படைத்தல், மோதகம் ஏந்திய திருக்கரம் - காத்தல், அங்குச கரம் - அழித்தல், பாசம் உள்ள கை - மறைத்தல், தந்தம் உள்ள கை அருளல்... இப்படி, அவரது ஐந்து கரங்களும் ஐந்தொழில்களைக் குறிப்பது மட்டுமின்றி, ஐங்கரங்களும் 'சிவாய நம' என ஐந்தெழுத்து மந்திரத்தை உணர்த்தும்.

விநாயகர் சதுர்த்தி கணபதியை வழிபட நல்ல நேரம் ஆகஸ்ட் 31ஆம் தேதி புதன்கிழமை காலை 11.05 மணி முதல் பிற்பகல் 01.38 மணி வரை உள்ளது.

விநாயகர் சதுர்த்திக்கு முதல் நாளிலேயே வீட்டு பூஜை அறை மற்றும் வீட்டினை தூய்மை படுத்த வேண்டும். விநாயகர் சதுர்த்தி நாளில் பூஜை அறையில் முதலில் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும். 

ஒரு சிறிய கலசத்தில் தூய நீரை நிரப்பி வைத்து, அதில் மஞ்சள் மற்றும் குங்கும பொட்டு அணிந்து குல தெய்வமாக வழிபடவும். இந்த நீரை ஒவ்வொரு நாளும் தீபம் ஏற்றும் போது அதில் உள்ள தண்ணீரை செடிக்கு ஊற்றி புதிதாக மாற்றலாம். தீப, தூபத்தைக் காட்டி நாம் பிள்ளையார் வழிபாட்டை தொடங்கலாம்.

எப்படி பூஜை செய்வது

ஒரு பலகையை எடுத்து அதை சுத்தம் செய்து, கோலமிட்டு, அதன் மீது புதிதாக வாங்கிய பிள்ளையார் சிலையை வைக்கவும். அவருக்கு மஞ்சள் அல்லது சந்தனத்தால் பொட்டு வைத்து, அதன் மீது குங்குமம் வைக்க வேண்டும். 

எருக்கம்பூ மாலை, மலர் மாலையை சூட்டவும், அருகில் அருகம் புல் பரப்பி வைக்கலாம். பிள்ளையார் சிலைக்கு முன் ஒரு பித்தளை தட்டு வைத்து, அதில் சிறிது அரிசியை போட்டு அதன் மீது ஒரு தூய வெற்றிலை வைக்கவும். பின்னர் மஞ்சள் தூளில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பிள்ளையார் பிடித்து, வெற்றிலை மீது வைக்க வேண்டும்.

பொதுவாக பழங்கள் அல்லது வைவேத்திய பொருட்கள் ஒற்றைப் படையில் வைப்பது நல்லது. 5, 7, 11 என வைக்கலாம்.பிள்ளையாருக்கு அப்பம், மோதகம், கொழுக்கட்டை, முருக்கு, பழங்கள் ஆகியவை மிகவும் பிடிக்கும் என்பதால், விநாயகர் சிலை அருகில் வைத்து பூஜை செய்யலாம். 

விநாயகர் சதுர்த்தியில், நாயகனான கணபதியை வழிபட்டு பூஜையை தொடங்கலாம். தேங்காய் உடைத்து கற்பூர தீப ஆராதனை சமர்பித்து பூஜை செய்யலாம். 'ஓம் கம் கணபதயே நமஹ;' என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருங்கள். பூஜை முடித்த பின்னர் பிரசாதங்களை அக்கம் பக்கத்தினருக்கு கொடுத்து நாமும் சாப்பிடலாம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top