பக்தர்களின் குறை தீர்க்கும் மாதேஸ்வரன் மலை கோவில்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பக்தர்களின் குறை தீர்க்கும் மாதேஸ்வரன் மலை கோவில் பற்றிய பதிவுகள் :

‘உயர்ந்த மலை. அதிலே அடர்ந்த காடுகள். மலைப்பகுதி கண்களுக்கு இதமானது. பசுமை நிறைந்த காடும், மலையும் நம் மனதை உற்சாகப்படுத்துகின்றன. மலைவாசம் நம் மனச்சுமைகளை இறக்கி வைக்க அருமையான இடம். குளுமையான அந்த மலையிலே, அருமையான தெய்வம் அங்கே ஒரு கோயிலில் குடிகொண்டிருந்தால், நம் ஐம்புலன்களையும் அடக்கி ஆழ்ந்த தியானத்தை மேற்கொள்வதற்கு ஆனந்தமான ஒரு ஆற்றலைப் பெறுவதற்கு ஏற்றதாகவும் அந்தச் சூழல் அமைந்து விடுகிறது. 

மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான காடும், மலையும் கர்நாடக மாநிலத்தில் வந்து சேர்கின்றன. இந்த அழகிய மலைச்சாரலில் ‘மாதேஸ்வரன்’ என்ற பரமேஸ்வரன் குடி கொண்டிருக்கும் மலை ‘மாதேஸ்வரன் மலை’ என்று அழைக்கப்படுகிறது. அங்குள்ள 14ம் நூற்றாண்டுகாலகல்வெட்டுகள் மாதேஸ்வரன் என்ற ஒரு சிறுவன், பரமேஸ்வரனின் அருளால் அந்த ஈஸ்வரனுக்குப் பணிவிடை செய்யும் பொருட்டு வானத்திலிருந்து பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றன.

வானத்திலிருந்து தோன்றிய அந்த சிறுவன் ‘சித்தநஞ்ச தேசிகர்’ என்ற ஒரு சித்புருஷர் தனது ‘சுத்தூர்’மாட சிம்மாசமான மடத்தில் பணியாற்ற தனது சீடனாக ஏற்றுக் கொண்டார். அந்த சீடனுக்கு ‘சிவசக்தியின்’ அருட்கடாட்சத்தைப் பலவகையிலும் கற்றுக் கொடுத்து, அந்த ஈசனின் அருளால் அவனுக்கு வாரி வழங்கி அந்த சிறுவனை ஒரு சிவபக்தனாக வளர்த்தார். அந்தச் சிறுவனிடம் அவ்வப்போது அதிசயத்தக்க சில மாற்றங்கள் தோன்றிக்கொண்டே இருந்தன. அவன் சில அற்புதங்களை அவ்வப்போது அந்த மடத்திலே ஈசனின் அருளால் நிகழ்த்திக் காட்டினான். ஒரு சமயம் பரமேஸ்வரனுக்குப் பூஜை செய்ய மலர்களைப் பறித்துவர அந்தச் சிறுவனையும், அவனுடன் மற்ற சீடர்களையும் அந்த வனப்பகுதிக்குள் அனுப்பினார், சித்தநந்ததேசிகர். குருவின் கட்டளைப்படி இதர சீடர்கள் பூப்பறித்து வந்து நின்றனர். ஆனால், அந்த சிறுவனைக் காணவில்லை. அவன் எங்கே என்று மற்ற சீடர்களைக் கேட்டார், குரு.

அவன் தங்களை விட்டுப் பிரிந்து தனியாக சென்று விட்டான் என்று பதில் வந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் அந்தச் சிறுவன் காட்டுப்புலி ஒன்றின்மீது அமர்ந்து கொண்டு, பூக்களுக்குப் பதில் தேள், பூரான், பாம்பு, அரணை போன்ற விஷப் பூச்சிகளைப் பூக்கூடையில் நிரப்பிக் கொண்டு வந்தான். புலிமீது அமர்ந்திருக்கும் அவனைக் கண்டு குரு பயந்து போய் செய்வதறியாது திகைத்து நின்றார். சிரித்துக் கொண்டே அந்தச் சிறுவன் புலியின் மீதிருந்து இறங்கி, புலியின் தாடையைத் தடவினான். அடுத்த நொடி புலி மாயமாய் மறைந்து விட்டது. பூக்கூடையில் இருந்த விஷப் பூச்சிகளை குருவிடம் காட்டி விட்டு அருகிலிருந்த குளத்து நீரில் போட்டு எடுத்தான். அவையெல்லாம் மணமிக்க மலர்களாக மாறின. அந்த மலர்களைக் கொண்டு வந்து குருவின் முன் கொட்டினான். இந்த செயல்களைக் கண்ட குரு மிகுந்த ஆச்சரியப்பட்டு போனார். இது இந்த சிறுவனின் செயல் அல்ல. சிவபெருமானின் அருட்கடாட்சத்தால்தான் இவனுக்கு இந்த யோக சக்தி ஏற்பட்டுள்ளது.

னவே, இவன் சிவபெருமானின் அவதாரமாகத்தான் இருக்க வேண்டுமென்று கருதி அவனை உயர்ந்த இடத்தில் வைக்க விரும்பினார். அந்த மலைப்பகுதியில் தங்களுடைய ஆண் பிள்ளைகளுக்கு அந்த கிராம மக்கள் பெரும்பாலும் மாதன்என்ற பெயரைத்தான் வைப்பார்கள். ஆகவே அந்த குரு இந்த சிறுவனுக்கு மாதன் என்ற பெயரோடு ஈஸ்வரன் என்ற திருப்பெயரையும் சேர்த்து மாதேஸ்வரன் என அழைத்தார். பிறகு அவனை குடகு மலையிலுள்ள பிரபுலிங்க மலை என்ற இடத்திலிருக்கும் திரு ஆதி கணேஸ்வரர் என்ற தனது குருவிடம், மேலும் நல்ல கல்வி கற்று மேம்பட, அனுப்பி வைத்தார். அப்படியே சென்ற மாதேஸ்வரன், அந்த குருவிடமிருந்து வேதம், யாகம், யோகம், தவம் ஆகியவற்றில் சிறப்புத் தேர்ச்சி பெற்றான். கூடவே தன் சித்துவேலைகளையும் செய்து காட்டினான். விஷப்பூச்சிகளை வைத்து சில அதிசயத்தக்க லீலைகளை செய்து காட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவான்.

பல்லியைப் பாம்பாக்குவான், பாம்பைப் பூரானாக்குவான், ஓடிக் கொண்டிருக்கும் தேள் சட்டென்று அரணையாகி விடும். அதேபோல அரணை பல்லியாகி விடும்! இப்படியெல்லாம் சித்து வேலைகள் செய்து அந்த கிராம மக்களை அசத்துவான். மக்கள் சிலசமயம் இவனிடம் வந்து அருள்வாக்குக் கேட்பார்கள். மாதேஸ்வரன் சொன்னதெல்லாம் அப்படியே நடக்கும். ஒருவர் ஒரு பசுமாட்டைக் கொண்டு வந்து மாதேஸ்வரன் முன்பு காட்டி ‘‘இது மலட்டுப் பசுவாக அமைந்து விட்டது பாலே சுரப்பதில்லை’என்று குறைபட்டுக் கொண்டார். அவன் அந்தப் பசுவைத் தொட்டான். அப்போதே அந்தப் பசு பால் சொரிய ஆரம்பித்து விட்டது. வியந்து நின்றான் பசுவின் சொந்தக்காரன். ஒரு சமயம் ஒருவர் தீராத நோயொன்று தன்னைப் பாடாய்ப்படுத்துகிறது என்றார். வெறுங்கையில் விபூதியை வரவழைத்த மாதேஸ்வரன் அந்த விபூதியை அந்த நோயாளி உடல் முழுவதும் பூசினான். அவன் நோய் தீர்ந்து குணமடைந்தான்.

இப்படியெல்லாம் செய்து அந்த மலைவாழ் மக்களிடமும், மற்ற ஊர் மக்களிடமும் பேரும், புகழும் பெற்றான். நன்கு முதிர்ச்சியடைந்த மாதேஸ்வரனை மீண்டும் மாதேஸ்வரன் மலையில் இருந்த பழைய குருவிடமே அனுப்பி வைத்தார் ஆதிகணேச குரு. மீண்டும் மாதேஸ்வரன் மலைக்கே வந்த மாதேஸ்வரனின் பாதம் பட்டதும் அங்கே இருந்த சிறுசிறு குன்றுகளெல்லாம் சம நிலங்களாயின. காய்ந்து போயிருந்த பூச்செடிகள் எல்லாம் துளிர்விட்டன. மரங்கள் பசுமை போர்த்துக்கொண்டன. அங்கே தெய்வீக மணம் கமழ்ந்தது. குளுமையான அந்தப் பச்சைப்புல் தரையில் அப்படியே அமர்ந்து ஈஸ்வர தியானத்தில் ஆழ்ந்தான் மாதேஸ்வரன். இப்படி தினமும் ஆழ்நிலை தியானத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்தன. ஒருகட்டத்தில் அவன் அப்படியே ஒரு கல் லிங்க வடிவமாகவே உருமாறி விட்டான். மாதேஸ்வரன் மறைந்துபோய் மாதேஸ்வர லிங்கமானான் அவன்! மனிதனே இறைவனாகும் பேரற்புதம் அங்கே நிகழ்ந்தது.

பதினான்காம் நூற்றாண்டுக்குப் பின்னால் இந்த மாதேஸ்வரனுடைய பக்தர்களும், பக்தர்களின் வம்சாவழியினரும் ஒன்று சேர்ந்து ஒரு கோயில் எழுப்பி வழிபட்டு வந்தனர். அந்தக் கோயில் காலப்போக்கில் வளர்ச்சி பெற்று மூன்று அற்புத ஆலயங்களாக இன்று அமைந்துள்ளது. மூலக் கருவறைக்குள்ளே மாதேஸ்வர சிவலிங்கம் ஐந்து தலைப்பாம்பு படமெடுத்திருக்க தெய்வீக ஒளியுடன் மிக அற்புதமாக தங்கக்காப்புடன் பளீரென்று மின்னுகிறது. மைசூர் மன்னராக இருந்த ஸ்ரீஜெயசாம்ராஜ உடையார் பகதூர் ஸ்வாமிகள் ஸ்ரீமாதேஸ்வரன் மீது கொண்ட அளவற்ற பக்தியால் இந்த மலையில் பக்தர்கள் வந்து தங்குவதற்கு இருப்பிட வசதிகள் செய்து கொடுத்தார். பல ஏக்கர் புன்செய் நிலங்களையும் விலைமதிப்பில்லாத அளவுக்குத் தங்கம், வெள்ளி, வைர நகைகளையும் நிவந்தனமாகக் கொடுத்துள்ளார்.

இவருக்குப் பிறகு ஜீஞ்சே கவுடா என்ற குருபர் இனத்து மலைவாழ் பக்தர் இக்கோயிலை மேலும் சீரமைத்து அற்புதமாக்கினார். அணுமலை, கனுமலை, ஜெனுமலை, பச்சைமலை, பவளமலை, லிங்கமலை, பொன்னாச்சி மலை ஆகிய ஏழு மலைகள் இணைந்ததே மாதேஸ்வரன் மலை. இங்கு வாழும் சோளிகர், ஜேனுகுருபர், காடுகுருபர், குருபகவுடர் இனத்தவர்களுக்கு ஸ்ரீமாதேஸ்வரனே குலதெய்வம். இவர்களில் தம்மடிகள் என்பவர்கள் லிங்கத்தைக் கழுத்தில் மாலையாக அணிந்துகொண்டிருப்பார்கள். கண்ணப்ப நாயனாரின் வாரிசுகள் இந்தக் கோயிலில் அர்ச்சகர்கள். இவர்கள் எல்லாம் இக்கோயிலைச் சுற்றிய கிராமங்களிலேயே வசிக்கிறார்கள். சிவராத்திரி, நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலும், அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும் இங்கு சிறப்பு பூஜை நடைபெறும்.

குடும்பப் பிரச்னைகள் நீங்கவும், தீராத நோய்களிலிருந்து விடுபடவும், குறிப்பாக விஷப்பூச்சிக் கடியிலிருந்து நிவாரணம் பெறவும், பசுமாடு முதலான கால்நடைகள் பிணி தீரவும், அவை நிறைய பால் வழங்கவும், இந்த மாதேஸ்வரனை பிரார்த்தித்துக் கொள்கிறார்கள். இங்கேயுள்ள அந்தர கங்கை குளத்தில் நீராடினால் காசி, கேதார்நாத், ராமேஸ்வரம் போன்ற தலங்களில் நீராடிய பலன் கிடைக்கும். குடும்பக் குறைகள் தீர, ரிஷபம் அல்லது புலி வாகனத்தில் மாதேஸ்வரனை அமர்த்தி கோயிலை வலம் வந்து வேண்டுதல் செய்கிறார்கள். குறிப்பாகத் தங்கத்தேர் ஊர்வலம் சகல நன்மையையும் அளிக்கக்கூடியதாக நம்பப்படுகிறது. இக்கோயில் கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டம், கொள்ளேகால் தாலுக்காவில் மலைமீது 300 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

பெங்களூரிலிருந்து 210 கி.மீ.; மைசூரிலிருந்து 140 கி.மீ.; கொள்ளேகாலிலிருந்து 70 கி.மீ. தூரத்தில் உள்ளது. தமிழ்நாட்டிலிருந்து சேலம், மேட்டூர் அணை, கொளத்தூர் வழியாக 4 மணிநேர பயணத்தூரத்தில் இந்த கோயிலை அடையலாம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top