திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மற்றுமொரு சிவன் தலம் பர்வத மலை. இம்மலை மிகவும் தொன்மையானது. கைலாயத்திற்குச் சமமானது என்ற பெயர் பெற்றது. இங்கு அருள்மிகு மல்லிகார் ஜுனரும் அன்னை பிரம்மராம்பிகையும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிகிறார்கள்.
சிவபெருமான் கைலாயத்திலிருந்து அண்ணாமலைக்கு வந்தபோது அவர் தம் முதல் காலடியை பர்வதமலையில் வைத்தாராம். அதனைத் தாங்க முடியாமல் இந்த மலை அழுந்தியதால் தனது இரண்டாவது அடியை திருவண்ணாமலையில் வைத்ததாகச் செவிவழிச் செய்திகள் உள்ளன.
மலை அடிவாரத்தில் மிகவும் பழமையான பச்சையம்மன் கோவில்… இந்தக் கோவிலின் வெளிப்புறத்தில் சப்த முனிகள் கம்பீரமாக எழுந்தருளியிருக்கிறார்கள். இத்திருக்கோவிலில் பச்சையம்மன் என்ற திருப்பெயரில் அன்னை பார்வதி பக்தர்களுக்கு அருளாசி வழங்கு கிறாள். இவளை வணங்கி மலையேறினால் வீரபத்திரர், துர்க்கையம்மன், ரேணுகாதேவி, சப்தகன்னியர் போன்றோரை தரிசிக்கலாம்.
விசுவாமித்திரர் குன்று என்ற பாறையிலிருந்து மேல்நோக்கிப் பார்த்தால், மலை உச்சியில் உள்ள கோவில் நன்கு தெரியும். மலையில் உள்ள சுனையிலிருந்து பெருகி வரும் நீர்வீழ்ச்சியின் அழகையும் காணலாம். இந்த மலைப் பாதையின் இருபுறமும் இரும்பு கடப்பாறைகள் பாறைக்குள் ஊன்றப்பட்டுள்ளன. அவற்றைப் பிடித்துக் கொண்டுதான் மேலே செல்ல வேண்டும். மிகவும் சிரமப்பட்டு ஆபத்தான பாதையில் நடந்து வந்த களைப்பெல்லாம் நீங்கிட மலைமேல் கோவில் கொண்டுள்ள இறைவனும் இறைவியும் அருள்புரிகிறார்கள்.
மலைமேல் உள்ள கோவிலில் தனிச் சந்நிதியில் சிவலிங்கமாக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ள மல்லிகார்ஜுனரை காரியாண்டிக் கடவுள் என்றும் அழைப்பர். இவரை பக்தர்களே அபிஷேகித்து, மலர்கள் சூட்டிப் பூஜை செய்யலாம். பக்தர்களுக்கு இடையில் எந்தப் பூசகர்களும் இல்லை. பூக்களைச் சூட்டி மகிழும் பக்தர்கள், சிவலிங் கத்தைத் தொட்டு வணங்கலாம். அதனால் சிவலிங்கத்தை மறைக்கும் அளவிற்குப் பூக்குவியலுக்குள் இறைவன் உறைந்துள்ளார். கருவறை மிகவும் சிறியதாக இருப்பதால் பக்தர்கள் நெருக்கியடித்துக் கொண்டு தரிசிக்கிறார்கள்.
மல்லிகார்ஜுனருக்கு இடப்புறம் அன்னை பிரம்மராம்பிகா தனிச் சந்நிதியில் எழுந் தருளியுள்ளாள். சிவன் சந்நிதிக்கு வலப்புறம் உள்ள சிறிய சந்நிதியில் விநாயகப் பெருமா னும் வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணிய ரும் அருள்புரிவதைத் தரிசிக்கலாம். “திரிசூலகிரி’, “நவிரமலை’, “பர்வதமலை’ என்று சொல்லப்படும் இந்த மலை, ஏழை களின் கைலாயம் என்று பெயர் பெற்றதற்கு ஏற்ப, மேகக் கூட்டங்கள் அவ்வப்போது கோவிலின்மீது நின்று மெதுவாக நகரும் காட்சி மிகவும் ரம்மியமாக இருக்கும். “மேலும் இந்த பர்வதமலைக்கு சஞ்சீவிகிரி, மல்லிகார்ஜுன மலை, கந்தமலை, தென் கயிலாயம் என்றும் பல பெயர்கள் உண்டு.
இம்மலைப் பகுதியில் அற்புதமான மூலிகைகள் பல உள்ளன. சித்தர் பெருமக்கள் வாழ்ந்த குகைகளும் உள்ளன. அந்தக் குகை களில் தற்போதும் சித்தர் பெருமக்கள் தவம் செய்து கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கோவிலுக்கென்று தனியாக அர்ச்சகர்கள் கிடையாது. ஆனால் அம்பாள் சந்நிதியில் சாது ஒருவர் அமர்ந்து கொண்டு பக்தர்களுக்குப் பிரசாதம் மட்டும் தருகிறார். கதவுகள் இல்லாத கோவில் இது.
பர்வதமலை கடல் மட்டத் திலிருந்து சுமார் நான்காயிரத்து ஐந்நூறு அடி உயரம் கொண்டது. திருவண்ணாமலையைவிட இந்த மலை உயரம். திருவண்ணாமலையை கிரிவலம் வரும் தூரம் 14 கிலோமீட்டர். ஆனால், பர்வதமலை கிரிவலப் பாதையின் தூரம் 26 கிலோமீட்டர்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரிலிருந்து செங்கம் செல்லும் வழியில் தென்பாதி மங்கலம் என்னும் கிராமம் உள்ளது. அங்கிருந்து மலை ஏறத் துவங்கினால் பத்து கிலோமீட்டர் தூரம். தென்பாதி மங்கலத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரம் சென்றால் கடலாடி கிராமம் வருகிறது. அங்கிருந்து மலை உச்சிக்கு எட்டு கிலோமீட்டர் தூரம்.
இங்கு எழுந்தருளியிருக்கும் ஈசனை தேவேந்திரன் பௌர்ணமி நாட்களில் வந்து வழிபடுவதாக நம்பிக்கை. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சிறப்புப் பூஜை நடைபெறும் இந்தக் கோவிலில் யாகங்களும் விடிய விடிய நடைபெறுவது தனிச்சிறப்பு ஆகும். சித்ரா பௌர்ணமி, ஆடிப் பதினெட்டு, ஆடிப் பூரம், புரட்டாசி மாதப் பிறப்பு, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், மார்கழி மாதப் பிறப்பு, சிவராத்திரி, பிரதோஷ நாட்கள், பங்குனி உத்திரம் முதலிய சிறப்பு நாட்களில் இக்கோவில் விழாக்கோலம் காணும்.
இரவில் இங்கு தங்கிச் செல்லவும் வசதி உண்டு. அன்னதானமும் செய்யப்படுகிறது. ஒருமுறை மலை ஏறி இறைவனையும் அம்பாளையும் தரிசித்து வந்தால், மறுபடியும் பக்தர்கள் மனம் இறைவனை நாடிச் செல்லும் என்பது மறுக்க முடியாத உண்மை.