செவ்வாய் கிழமை கோயிலுக்குச் சென்று துர்கையை நெய்தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் சிறப்பான பலன்களைத் தரும்.
வீட்டில் விரதம் இருப்பவர்கள் தேன், பசும்பால், சர்க்கரைப் பொங்கல், கல்கண்டு என நைவேத்தியம் படைத்து அம்பிகையை வணங்கலாம்.
உபவாசம் இருப்பவர்கள் பூஜையை முடித்ததும், துர்கைக்கு செய்யும் நைவேத்திய பிரசாதத்தில் சிறிது உண்ட பிறகு உணவு உண்ணலாம்.
செவ்வாய்க்கிழமை விரதம் தரும் பலன்கள் :
செவ்வாய்க்கிழமை விரதமிருப்பவர்கள் வளர்பிறை செவ்வாய்க்கிழமையில் விரதத்தைத் தொடங்க வேண்டும்.
தொடர்ந்து பதினோரு வாரங்கள் செவ்வாய்க்கிழமை ராகுகால விரதமிருந்தால் எல்லா கஷ்டங்களும் நீங்கும்.
கல்யாண யோகம் கை கூடி வரும். எதிர்மறையான எண்ணங்கள் விலகும்.
வாழ்க்கையே அவ்வளவுதான் என்ற விரக்தி நிலையிலிருப்பவர்கள் இந்த விரதமிருந்தால் மனக்குழப்பங்கள் நீங்கி நலம் பெறுவார்கள்.
ஆண்களும் இந்த விரதமிருக்கலாம். ராகுவால் உண்டாகும் தோஷங்கள் நீங்க, வீண் செலவுகள் ஏற்படாமலிருக்க, வீட்டில் சண்டை சச்சரவுகள் தீர இந்த விரதத்தை, மேற்கொள்ளலாம்.
அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும் ஆண்கள், இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால், நோய்களிலிருந்து விடுபடலாம்.
ஆண்களால் முடியாத பட்சத்தில் மட்டும், அவர்களுக்காக அவர்களின் தாயார் அல்லது மனைவி இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.
செவ்வாய்க்கிழமை ராகுகால விரதமிருந்தால் ஸ்ரீ துர்கை, செவ்வாய் பகவான், ராகு பகவான் ஆகியோரை ஒரே நேரத்தில் வணங்கிய பலன் கிடைக்கும்.
அதனால், அனைத்து மங்களங்களும் உண்டாவதுடன், மனத்துணிவு, உடல் வலிமை ஆகிய நன்மைகள் ஏற்படும்; சகல தோஷங்களிலிருந்தும் நிவாரணம் பெறலாம்.