சுவர்ணபுரீஸ்வரர் ஆலயம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சுவர்ணபுரீஸ்வரர் ஆலயம் பற்றிய பதிவுகள் :

நாகப்பட்டினம் மாவட்டம், செம்பனார் கோவில் கடைவீதியில் அழகுற அமைந்துள்ளது சுவர்ணபுரீஸ்வரர் ஆலயம். 

இந்தக் கோவில் கீழ் திசை நோக்கி அமைந்திருக்கிறது. உள்ளே நுழைந்ததும் கொடி மரம் காணப்படுகிறது. அதன் இடதுபுறம் திரும்பி நடந்து, எதிரே தென்படும் படிகளைக் கடந்தால் மகாமண்டபத்தை அடையலாம்.

மகாமண்டபத்தில் இறைவனின் சன்னிதிக்கு முன், நந்தியும் பலிபீடமும் உள்ளன. மகாமண்டபத்தில் இருந்து அர்த்த மண்டபத்திற்கு செல்லும் நுழைவு வாசலின் இடதுபுறம் சூரிய மகா கணபதி, சூர்ய லிங்கம், வலது புறம் சந்திரலிங்கம், வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான் திருமேனிகள் உள்ளன.

மகாமண்டபத்தின் வடபுறம் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். மகாமண்டபத்தைக் கடந்தபின் உள்ள அர்த்தமண்டபத்தை அடுத்து கருவறை தென்படுகிறது. அதன் உள்ளே மூலவர் லிங்கத் திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ‘சுவர்ணபுரீஸ்வரர்.’ இறைவி பெயர் ‘சுகந்த குந்தாளம்பிகை.’ அம்பாளுக்கு ‘மருவார் குழலியம்மை’ என்ற பெயரும் உண்டு.

கருவறை கோட்டத்தின் தெற்கே கோஷ்ட கணபதி, மேற்கே தட்சிணா மூர்த்தி, கிழக்கே அர்த்தநாரீஸ்வரர், வடக்கே பிரம்மா, சிவதுர்க்கை ஆகியோரது திருமேனிகள் உள்ளன. சண்டீஸ்வரர் சன்னிதி வடக்குப் பிரகாரத்தில் உள்ளது.

தெற்குப் பிரகாரத்தில் இறைவி சுகந்த குந்தாளம்பிகை தனிச் சன்னிதியில் மேற்கு திசை நோக்கி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறாள். மேற்கு பிரகாரத்தில் பிரகாச பிள்ளையார், நால்வர், சீனிவாசப் பெருமாள், காசி விஸ்வநாதர், பாலசுப்ரமணியம், கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி, நாகர் ஆகியோரது திருமேனிகளும் இருக்கின்றன.

கிழக்கு பிரகாரத்தில் வீரபத்திரர், நவக்கிரக நாயகர்கள் அருள் பாலிக்கின்றனர். சம்பந்தர், அப்பர் ஆகியோரால் பாடல் பெற்ற திருத்தலம் இது. இந்த ஆலயத்தில் இரண்டு தல விருட்சங்கள் உள்ளன. அவை.. வில்வம் மரம், வன்னி மரம் ஆகும்.

இந்த ஆலயத்தில் பிரதோஷம் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. அதேபோல் நவராத்திரி, சிவராத்திரி, ஆண்டுப் பிறப்பு, மகம், திருவாதிரை போன்ற நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு ஆராதனைகளும் அபிஷேகங்களும் செய்யப்படுகின்றன. ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையில் இங்கு நடைபெறும் குத்து விளக்குப் பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொள்வர்.

ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதே போல் கார்த்திகை மாதம் நடைபெறும் சங்காபிஷேகமும் இந்த ஆலயத்தில் மிகவும் பிரசித்தம். ஆனித் திருமஞ்சனம் அன்று நடராஜர் – சிவகாமி அம்மன் வீதி உலா வருவார்கள்.

தங்க நகைகளை புதிதாக வாங்கும் பெண்கள், இங்குள்ள இறைவிக்கு அதனை அணிவித்து அழகு பார்த்துவிட்டு, அதன் பிறகே தாங்கள் அணிந்து கொள்ளும் பழக்கத்தை வெகுவாக கடைப்பிடிக்கிறார்கள். இதனால், தங்களுக்கு மேலும் ஆபரணங்கள் சேரும் என்று பெண்கள் நம்புகின்றனர்.

இந்த ஆலயத்தில் சப்தமாதர்கள் மிகவும் பிரசித்தம். தெற்கு பிரகாரத்தில் அருள்பாலிக்கும் இந்த சப்த மாதர்களிடம், சுற்று வட்டாரப் பெண்களுக்குப் பாசம் அதிகம். மணமாகாத பெண்கள், இந்த சப்த மாதர்களைப் பூஜித்து 7 ரவிக்கை துண்டுகளை வைத்துப் படைத்து, அதை ஏழைப் பெண்களுக்கு தானமாகக் கொடுக்கின்றனர். இப்படி செய்தால், அவர்களுக்கு விரைவில் திருமணம் பெறும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து ஆக்கூர் செல்லும் வழித்தடத்தில், மயிலாடுதுறையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது செம்பனார் கோவில்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top