கேதார கௌரி விரதம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கேதார கௌரி விரதம் பற்றிய பதிவுகள் :

கேதார கௌரி விரதம் என்பது சிவபெருமானுக்குரிய விரதங்களுள் ஒன்றாகும். இவ்விரதம் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாத வளர்பிறையான தசமி (விஜயதசமி) முதல் ஐப்பசி அமாவாசை வரை மொத்தம் 21 நாட்கள் கடைபிடிக்கப்படுகின்றது.

விரத முறை :

ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சுக்லபட்ச தசமியில் இவ்விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். 21 இழைகள் கொண்டதும், 21 முடிச்சுக்கள் கொண்டதுமான நூலினால் உருவாக்கப்பட்ட மந்திரக் கயிற்றை செய்துகொண்டு அன்று முதல் சிவபெருமானை மண்ணால் செய்யப்பட்ட விம்பத்திலும், கும்பத்திலும் பூஜித்து இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

தூய்மையான இடத்தில் மண்ணால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை அமைத்து கும்பம் வைத்து வில்வம், பூக்கள் முதலியனவற்றால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு நாளும் கேதாரேஸ்வரனுக்கு 21 எண்ணிக்கை கொண்ட அப்பம், வடை, பழம், பாக்கு, வெற்றிலை, பாயசம், சர்க்கரை பொங்கல், புளிசாதம் முதலிய நைவேத்தியங்களை வைத்து தூப தீபம் காட்டியும், பூஜை செய்தும் கேதாரேஸ்வரரை வழிபடுதல் வேண்டும்.

21 நாட்களும் பூஜையில் வைக்கப்பட்ட 21 முடிச்சுக்கள் கொண்ட நூலினை அமாவாசை திதியில் இடது கையில் கட்டிக்கொள்ள வேண்டும். இவ்விரதத்தை ஆண், பெண் இருபாலாரும் அனுஷ்டிக்கின்றனர்.
இந்த நாளில் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரரை வணங்குவது சிறப்பானது.

இந்த விரதத்தை 21 நாட்கள் கடைபிடிக்க முடியாதவர்கள் இறுதி நாளான ஐப்பசி அமாவாசை நாளில் மட்டும் அனுஷ்டிக்கலாம்.

கணவருக்கு தீர்க்க ஆயுள் கிடைக்க வேண்டியும், குடும்ப சுபிட்சம் வேண்டியும், கன்னிப்பெண்கள் நல்ல கணவர் அமைய வேண்டியும், குழந்தைப்பேறு வேண்டியும், ஆண்கள் மங்கலகரமான வாழ்க்கை அமைய வேண்டியும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

இன்று ஐப்பசி மஹா கந்தசஷ்டி உற்சவம் ஆரம்பம் :

'அழகென்ற சொல்லுக்கு முருகன்"...

'குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்"...

எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும். அத்தனை சிறப்பு வாய்ந்த தமிழ் கடவுளான முருகப்பெருமானை நினைத்து மேற்கொள்ளும் முக்கிய விரதங்களுள் ஒன்று கந்தசஷ்டி விரதம்.

மஹா கந்த சஷ்டி திருவிழா ஐப்பசி அமாவாசையை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அசுரர்களை அழிக்க சிவனின் நெற்றி பொறியில் இருந்து பிறந்த குமரன், சூரபத்மனை எதிர்த்து போரிட்டு வெற்றி பெற்றதன் அடையாளமாக இவ்விழா நடத்தப்படுகிறது.

அந்த வகையில் இந்த வருடம் (25.10.2022) செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி (30.10.2022) ஞாயிற்றுக்கிழமை சூரசம்ஹாரம், மறுநாள் 31ம் தேதி முருகன் திருக்கல்யாணமுடன் நிறைவு பெறுகிறது.

நம்மிடம் உள்ள தீயகுணங்களான ஆணவம், மாயை, கன்மம், காமம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகியவற்றை விடுத்து நற்குணங்களைப் பெறும் நோக்கில் இவ்விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top