அஷ்ட லட்சுமிகளாக அருள் பாலிக்கும் மஹாலட்சுமி

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அஷ்ட லட்சுமிகளாக அருள் பாலிக்கும் மஹாலட்சுமி பற்றிய பதிவுகள் :

மஹாலட்சுமியின் எட்டு விதமான தோற்றத் திருவுருவங்களையும் மெய்யன்போடும் முழுமையான பக்தியோடும் வழிபடும் அனைவருக்கும் மஹாலட்சுமியின் அருள் பெற்று இன்பமும் மகிழ்ச்சியும் நிறைந்த அஷ்ட போக வாழ்க்கையைப் பெறுவார்கள். 

ஆதிலட்சுமி

மஹாவிஷ்ணுவின் இடப்பாகத்திலிருந்து தோன்றியவள் ஆதிலட்சுமி. உலகத்தின் சகல உயிர்களின் இயக்கத்துக்கான சக்தியை அளிப்பவள். எந்த காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் ஆதிலட்சுமியை வணங்கித் தொடங்கினால் அந்தக் காரியம் நிச்சயம் முழு வெற்றியை அளிக்கும். தாமரை, வெண்கொடி, மஞ்சள், அருளல் தாங்கும் நாற்கரங்கள் கொண்டவள் அன்னை ஆதிலட்சுமி ஆவாள்.

கஜலட்சுமி

கஜ என்றால் யானையாகும். செல்வம், புகழ், ஆளுமை முதலிய குணங்களுக்கு ஆதாரமானவள் கஜலட்சுமி என்று சொல்லப்படும் ராஜலட்சுமியாகும். மனித மூளையில் இடம் கொண்டு அறிவுக்கும், வளர்ச்சிக்கும் காரணமாகி பெருமை சேர்ப்பவள், ராஜபோக வாழ்க்கைக்கு ஆதாரமான தங்க நிற மேனியுடன் வலது கை ஆட்காட்டி விரலை உயர்த்தி கம்பீரமாய் செங்கோலுடன் காட்சியளிப்பவள்.

சந்தான லட்சுமி :

குழந்தைப்பேறு அருளும் திருமகள், சிறந்த மணவாழ்க்கை போன்ற சந்தானங்களை அருள்பவள். மனித உடலின் வலது தொடையில் நிலைக் கொண்டு உயிர்களிடத்தில் நேசம் மலர காரணமாக இருப்பவள். கத்தி, கேடயம், அஞ்சேல் தரித்த ஆறு கரம் கொண்டவள். மடியில் குழந்தையொன்று அமர்ந்திருக்க அருள்புரிவாள்.

தானிய லட்சுமி :

வாழ்க்கைக்கு உணவுதான் முக்கியம். உணவுக்கு ஆதாரமாக இருப்பது தானியம். அந்த தானியம் வாழ்க்கையில் குறைவர கிடைத்துக் கொண்டே இருக்க தானிய லட்சுமியை வழிபட வேண்டும். தானிய லட்சுமிக்கு அன்ன லட்சுமி என்ற பெயரும் உண்டு. நாட்டில் நிலவும் பஞ்சம் நீங்கவும் பசுமை வளம் செழித்து உயிர்கள் நிம்மதியாய் வாழவும் வழி செய்பவள் தானிய லட்சுமி. 

மனித உடலில் வலது தோளில் எழுந்தருளி ஜீவ உணர்வுகளைத் தோற்றுவித்து, பசியையும் போக்க வழிசெய்பவள் ஆவாள். பசுந்துகில் தரித்து, நெற்கதிர், கரும்பு, வாழை, தாமரைகள், கதை, அஞ்சேல் தரித்த எட்டு கரம் கொண்டு அருள்கிறாள்.

தைரிய லட்சுமி :

ஒரு மனிதன் எந்த நிலையில் இருந்தாலும் மன உறுதியையும், துணிச்சலையும் வீரத்தையும் பெற வீரலட்சுமியை தினமும் தவறாது வழிபட வேண்டும். எடுத்த காரியம் வெற்றி பெற வேண்டும் என்றால் தைரிய லட்சுமியின் அருள் வேண்டும். மனிதனின் முதுகுத் தண்டு வடத்தில் நிலைக்கொண்டு ஜீவ அமைப்பிற்கு காரணமாகி செயல்களில் வெற்றியை ஏற்படுத்துபவள்.

வலது திருக்கரங்களில் அபயம், சூலம், அம்பு, சக்கரம் முதலியவற்றையும், இடது திருக்கரங்களில் வரதம், கபாலம், வில், சங்கம் முதலியவற்றையும் கொண்டு விளங்குகிறாள்.

தனலட்சுமி

மனிதனின் வலது உள்ளங்கையில் எழுந்தருளி வரவாகத் திகழ்கிறாள். இடது உள்ளங்கையில் எழுந்தருளி செலவாகத் திகழ்கிறாள். மொத்தத்தில் மனிதனை மகிழ்ச்சிப்படுத்தி உயிரினங்களுக்கு செழிப்பினைத் தருபவள். தங்கநிறத்தில் ஒளிர்பவள். சக்கரம், சங்கு, கலசம், வில்லம்பு, தாமரை, அஞ்சேல் தரித்து ஆறுகரம் கொண்டு காட்சி தருபவள்.

விஜயலட்சுமி :

கோவிலில் மேற்கு முகமாக அன்னப் பறவையின் மீது வீற்றிருக்கிறாள் விஜயலட்சுமி. அனைத்து வெற்றிகளையும் மங்களத்தோடு அளிக்கும் சர்வ மங்கள என்னும் நாமம் பெற்ற நாராயணி ஆவாள்.

வித்யாலட்சுமி

கல்விச் செல்வத்தை வழங்குவதால் வித்யாலட்சுமி என்று பெயர் பெற்றவள். சரஸ்வதியை வித்யாலட்சுமி ரூபமாகப் பாவித்து வழிபடுகின்றனர். கலை, அறிவு, ஞானம் இவற்றை அருள்பவள். தரைத் தளத்தில் பக்தர்கள் வல்வினை போக்கி வாழ வைக்க வடக்கு நோக்கிக் குதிரை வாகனத்துடன் கூடிய தாமரைப் பீடத்தில் வீற்றிருக்கிறாள். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top