நடராஜரின் தோற்றமும் அவற்றின் விளக்கமும்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நடராஜரின் தோற்றமும் அவற்றின் விளக்கமும் பற்றிய பதிவுகள் :

ஒற்றைக் காலில் நின்றாடும் போதும் நடராஜரின் தலை சமநிலையில் நேராக நிற்கிறது. ஆடுவது தாண்டவமானாலும் சிற்சபை வாசனின் முகமோ சாந்த ஸ்வரூபம். இரண்டு காதுகளிலும் வளைந்த காதணிகள். வலது காதில் பாம்பு வடிவ வளையம். இடது காதில் கனிவாய் குழையும் தோடு வளையம். 

இந்த கோலத்திலும் உமையும் தன்னில் பாதி என்பதை இது உணர்த்துகிறது. முக்கண்ணனின் நெற்றியில், புருவங்களுக்கு மத்தியில், நெருப்பாய் எரியும் மூன்றாவது கண். முக்காலத்தையும் கடந்த ஞானத்தை குறிக்கிறது.

அவற்றில், சேஷநாகம் - கால சுழற்சியையும், கபாலம் - இவன் ருத்ரன் என்பதையும், கங்கை - அவன் வற்றா அருளையும், ஐந்தாம் நாள் பிறைச்சந்திரன் - அழிப்பது மட்டுமல்ல, ஆக்கத்திற்கும் இவனே கர்த்தா என்பதையும் குறிக்கின்றன.

பின் இடது கரத்தில் அக்னி, சிவன் - சம்ஹார மூர்த்தி என்பதை காட்டுகிறது. நமசிவாய என்னும் பஞ்சாக்ஷர மந்திரத்தின் (ஐந்தெழுத்து மந்திரம்) முதல் எழுத்தான ந - வைக் குறிக்கிறது இந்தக் கரம்.

ஊன்றி நிற்கும் அவனது வலது கால்களோ, ம என்ற எழுத்தை குறிக்கிறது. மேலும் வலது கால், திரோதண சக்தியை காட்டுகிறது. இந்த சக்தியால் தான் மனிதர் உயர் ஞானத்தை தேடலினால் அனுபவ அறிவாக பெறுகிறார்.

வலது காலின் கீழே இருப்பது அபஸ்மாரன் எனும் அசுரன் - ஆணவத்தினால் மனித மனம் கொள்ளும் இருளைக் குறிக்கிறான். அவனோ நடராஜன் தூக்கிய இடது காலைப் பார்த்து இருக்கிறான். தஞ்சம் வேண்டி தூக்கிய இடது கால், ஆணவம் மற்றும் மாயை ஆகியவற்றின் பிடியில் இருந்து விடுபட்டு ஆண்டவனின் அனுக்கிரத்தினை அடைந்திட வழி வகை செய்யும்.

முன் இடது கரமோ, பஞ்சாக்ஷர மந்திரத்தின் அடுத்த எழுத்தான வ - வை குறிக்கிறது. இந்தக் கரம் யானையின் துதிக்கைபோல் இருக்க, தூக்கிய இடது காலைப் பாரும் - அங்குதான் மாயை அகற்றி அருள் தரும் அனுக்கிரக சக்தி இருக்கிறதென கைகாட்டி சொல்கிறது.

பின் வலது கரம், பஞ்சாக்ஷர மந்திரத்தின் அடுத்த எழுத்தான சி - யை குறிக்கிறது. அந்தக் கையில்தான் உடுக்கை என்னும் ஒலி எழுப்பும் இசைக் கருவி. இந்த உடுக்கையின் ஒலியில் இருந்துதான் பிரணவ நாதம் தோன்றியது என்பார்கள்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top