கல்விக்கு உரிய சரஸ்வதி தேவி, செல்வத்துக்கு உரிய லட்சுமி தேவி, வீரத்துக்கு அடையாளமான பார்வதி தேவியை போற்றி வணங்கும் பண்டிகையாக நாடு முழுவதும் உற்சாகமாகவும் பக்தி பெருக்குடனும் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
நவம் என்பது 9-ஐ குறிக்கிறது. அந்த வகையில் அன்னை சக்தி தேவியை 9 நாட்களும் விரதமிருந்து மக்கள் வழிபடுகின்றனர்.
நவராத்திரி நாட்களில் மகேஸ்வரி, கௌமாரி, வராகி, மஹாலெட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி என சக்தியின் 9 வடிவங்களை பக்தர்கள் வழிபட்டு வணங்கி மகிழ்கிறார்கள்.
9 நாட்களோடு நவராத்திரி பண்டிகை முடிந்தாலும் இதனை தொடர்ந்து 10-ஆம் நாள் கொண்டாடப்படும் விஜயதசமி எனப்படும் தசராவும் முக்கியமான நாளாகும்.
அம்பிகை துர்க்கையாக வடிவமெடுத்து மகிஷாசுரன் என்னும் அரக்கனோடு போரிட்டு அவனை தோல்வியுற செய்து வெற்றிவாகை சூடிய நாளே விஜயதசமியாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த அரக்கனோடு போரிட்ட 9 நாட்கள் நவராத்திரியாகவும், துர்க்கை வெற்றி வாகை சூடிய நாள் விஜயதசமியாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
மகிஷாசூரனை 9 நாட்கள் போரிட்டு 10-ஆம் நாள் வீழ்த்திய துர்க்கையை அதன் பிறகு மகிஷாசூரமர்தினி எனும் பெயரால் அழைத்தனர். தேவர்கள் உட்பட அனைவரையும் கொடுமைப்படுத்திய மகிஷனை வீழ்த்திய 10-ஆம் நாள் வெற்றிக்கான விழாவாக விஜயதசமி என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது.
விஜயதசமியன்று மழலை குழந்தைகளை முதல் முதலாக பள்ளியில் சேர்க்கும் பழக்கம் இருந்து வருகிறது. அதே போல பாட்டு வகுப்பு, இசை கருவி பயிற்சி வகுப்பு, நடன வகுப்பு என புதிதாக ஒன்றை கற்று கொள்வதற்கு விஜயதசமி நாளை தேர்வு செய்கின்றனர்.
விஜயதசமி நாளில் தொடங்கும் எந்த செயலும் வெற்றியடையும் என்ற நம்பிக்கையின் காரணமாக அனைவரும் இந்த வழக்கத்தை பின்பற்றி வருகின்றனர்.