தட்சிணாமூர்த்தி வடிவில் அருள்பாலிக்கும் அம்பிகை

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தட்சிணாமூர்த்தி வடிவில் அருள்பாலிக்கும் அம்பிகை பற்றிய பதிவுகள் :

அம்பிகை, தட்சிணாமூர்த்தி வடிவில் அமர்ந்து அருள்பாலிக்கும் இடங்கள் இரண்டு உள்ளன.

ஆலமர் செல்வன் என்பது சங்ககாலத் தொடர். சிவப்பரம்பொருள் ஆலமர் செல்வனாக தட்சிணாமூர்த்தியாக சின்முத்திரை காட்டி சனகாதி முனிவர்களுக்கு மோனஉபதேசம் செய்ததை நாம் அறிவோம்.

அன்னை, தட்சிணாமூர்த்தி வடிவில் தமிழ்நாடு தில்லை [சிதம்பரம்] நகரில் தில்லைக்காளி ஆலயத்தில் அருளுகிறார். அவருக்குக்  கடம்பவன தக்ஷிண ரூபிணி என்பது திருநாமம் .வழிபாட்டில் இருக்கும் ஆலமர் செல்வி [ பெண்வடிவ   தட்சிணாமூர்த்தி] திரு உருவம் இஃது ஒன்றேயாகும். 

எல்லோரா குடைவரைக் கோயிலில், ஆதிபராசக்தியான ஆதிசக்தி ஆலமரத்தின் கீழ் இருக்கும் ஆலமர் செல்வியாகக் காட்சியளிக்கிறார். சிம்மவாஹினியாக ஆலமரத்தின்கீழ் அருளுகிறார். இங்கு வழிபாடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடம்பவன தக்ஷண ரூபிணி: 

தக்ஷிணாமூர்த்தி ரூபிணீ  தென்முகக் கடவுளின் வடிவினள். யோக மூர்த்தியான தட்சிணாமூர்த்தி, தன் யோகத்தில் அம்பிகையைத் தியானிக்கிறார். அவள் ஈசனின் உள்ளே இருப்பதால் தட்சிணாமூர்த்தியும் தேவியே. தெற்கு நோக்கி அமர்ந்ததால் இவரை, தட்சிணாமூர்த்தி என்றனர். சிவன் கோவில்களில் தெற்குச் சுற்றில் இவர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். இவரை அறமுரைத்த பட்டன் என்றும் ஆலமர் செல்வன் என்றும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

இறைவனுக்கும் இறைவிக்கும் மூன்று விதமான வடிவங்கள் உண்டு. இருவரும் தனித்தனியே இருத்தல் ஒருவகை. நடராஜரும், சிவகாமியும் தனித்தனி வடிவத்தில் திகழ்கின்றனர். இருவரும் இணைந்திருக்கும் வடிவம் அர்த்தநாரீசுவர வடிவமாகும். ஒருவருக்குள் ஒருவர் அடங்கியிருக்கும் மூர்த்தம் மூன்றாவது வகை. அவ்வகையில் காமாட்சி வடிவத்தில் இறைவன் அடக்கம் என்றும், தட்சிணாமூர்த்தி வடிவத்தில் அம்பிகை அடக்கம் என்றும் கூறுவர்.

சனகாதி முனிவர்களால் நன்கு வழிபடப்படுபவள். தட்சிணாமூர்த்தியிடம் சனகாதியர் உபதேசம் பெற்றனர். சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நான்கு முனிவர்கள் அனைத்தையும் கற்றறிந்தும் உண்மைப்பொருள் விளங்காமல் இருந்தனர். உண்மைப்பொருளை அறிய ஈசனை நாடினர். ஈசன் சின்முத்திரை காட்டி, அவர்களுக்கு மௌனத்தினாலேயே மெய்ப்பொருளைத் தெளிவாக்கினான். சனகர் முதலான முனிவர்கள் என்ற பொருளில் அந்த நான்கு முனிவர்களையும், சனகாதியர் என்று குறிப்பிடுவர்.

சிவஜ்ஞான ப்ரதாயிநீ: 

சிவஞானத்தை அளிப்பவள். தட்சிணாமூர்த்தி வடிவினளாகிய அம்பிகை சனகாதியர்க்கு உண்மையான சிவஞானத்தை அளித்தாள். தன்னை அண்டியவர்களுக்கு அவள் சிவஞானத்தை அளிப்பாள். சிவனைப் பற்றிய அறிவை அம்பிகையும், தேவியைப் பற்றிய அறிவைச் சிவபெருமானும் குருவடிவிலிருந்து அருளுகின்றனர். அவர்கள் அங்ஙனம் செய்யாவிடில் அவர்களைப் பற்றி அறிவது இயலாத செயலாகும். எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்தருளி உண்ணடிசில்! என்று அம்பிகை சீர்காழி குளக்கரையில் திருஞானசம்பந்தருக்கு சிவஞானத்தைக் கொடுத்தாள். அதாவது, அம்பிகை தன் திருமுலைப்பாலில், எண்ணிப் பார்ப்பதற்கும் அரிதான சிவஞானத்தைக் குழைத்துக் கொடுத்தாள். மேலும், சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் என்றும் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.  அத்தகைய சிவஞானத்தை அம்பிகை அருளுகிறாள்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top