தென் காளஹஸ்தி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தென் காளஹஸ்தி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் பற்றிய பதிவுகள் :

அகத்திய மாமுனிவர் அனுப்பிய ஒன்பது தாமரை மலர்களில் எட்டாவது மலர் தங்கிய இடம் ராஜபதி. 

திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலையில் உள்ள குரும்பூரில் இருந்து ஏரல் செல்லும் பாதையில் ராஜபதி உள்ளது. அகத்தியரின் ஆணைப்படி உரோமச முனிவர் இத்தலத்திலும் சிவவழிபாடு செய்து பலன் பெற்றார். நவகைலாய திருக்கோயில்களில் ஒன்றான இத்திருத்தலத்தில் கைலாசநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இது நவகிரகங்களில் ஒன்றான கேதுவின் பரிகாரத்தலமாகும்.

தமிழகத்தில் வேறு எங்கும் காணப்படாத கண்ணப்ப நாயனாருக்கு என தனிச் சந்நதி உள்ளது.

இச்சிலையின் உயரம் 4½ அடி. மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் இங்கு நடந்து வருகின்றன. பொதுவாக சிவன் கோயில்களில் நவகிரக சந்நதி தான் இருக்கும். ஆனால் அதற்கு மாறாக இங்கு நவலிங்க சந்நதி அமைந்துள்ளது.

காளஹஸ்திக்கு இணையான தலம் என்பதால் இதை தென் காளஹஸ்தி எனக் கூறப்படுகிறது.

மதுரை சந்திர குல பாண்டிய மன்னரின் அரண்மனை இப்பகுதியில் இருந்ததால் இவ்வூர் ராஜபதி எனப்பட்டது. இந்த லிங்கம் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒரு கோயிலும் இருந்தது. 416 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயில் வெள்ளப்பெருக்கில் மூழ்கி அழிந்தது. தற்போது சிவனடியார்களின் முயற்சியால் புதிய கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் இருக்கும் இடத்தில் ஒழுங்கற்ற வடிவில் ஒரு இலிங்கம் மட்டுமே இருக்கிறது. அம்பாள், பரிவார தெய்வங்கள் யாரும் இல்லை. இங்குள்ள இலிங்கத்தின் நான்கு புறங்களிலும் 4 சக்கர வடிவங்கள் இருக்கிறது. 

இலிங்கத்திற்கு கீழே புதைந்து போன கோயில் இருப்பதாக சொல்கிறார்கள். இத்தலம் பற்றி தெரிந்த பக்தர்கள் மட்டும் இங்கு வருகின்றனர். பக்தர்கள் இந்த இலிங்கத்தை வழிபட்டு, அருகிலுள்ள மண்ணை பிரசாதமாக எடுத்துச் செல்கின்றனர். பக்தர்களும், அறநிலையத்துறையினரும் மனது வைத்தால் இத்தலத்தில் புதிய கோயில் எழுப்பி, நவகைலாயத் தலங்களை முழுமை செய்த புண்ணியத்தைப் பெறலாம்.

ஜாதகத்தில் கேது திசை நடப்பவர்களும், கேதுவின் ஆதிக்கத்தில் உள்ளவர்களும், கேது ஸ்தலமான, காளஹஸ்திக்கு நிகரான இராஜபதியில் வழிபடுவது சிறப்பு. திருவாதிரை, சிவராத்திரி, மாதப்பிறப்பு, பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி, கிருத்திகை, சஷ்டி, கார்த்திகை போன்ற நாட்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. சோமவாரமன்று 108 சங்காபிஷேகமும், ஐப்பசி பௌர்ணமி அன்று அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. அம்பாள் சந்நதியில் நவராத்திரி கொலுவும், மகாசிவராத்திரியன்று இரவு முழுவதும் பூஜை, உட்பிரகார உலாவும் கோலாகலமாக நடைபெறுகின்றன.

ஞானகாரகனான கேதுவின் அம்சமாக இத்தலத்தில் சிவன் அருளுவதால் இவரிடம் வேண்டிக்கொள்ள அறிவான குழந்தைகள் பிறக்கும் என்பது நம்பிக்கை, விவசாயம் செழிக்கவும், கால்நடைகள் ஆரோக்யத்துடன் வாழவும், திருமணத்தடை, கவலை, சர்ப்பதோஷம். குழந்தை பேறு, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள், தொழில் வளத்தில் முன்னேற்றம் கிடைக்கவும் இங்கு வழிபாடு செய்கின்றனர். சிவனுக்கு பலவர்ண ஆடை சாற்றி, கொள்ளு நைவேத்தியம் படைத்து வழிபடலாம். சுவாமி, அம்பாளுக்கு விளைபொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். கால்நடைகள் நோய் நொடியின்றி இருக்க நந்திகேசுவரருக்கு பிரதோஷத்தன்று திரவிய பொருட்கள் மற்றும் பழங்கள் காணிக்கையாக செலுத்துகின்றனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top