அக்னி தேவன் வழிபட்ட அன்னியூர் அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அக்னி தேவன் வழிபட்ட அன்னியூர் அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில் பற்றிய பதிவுகள் :

உலகுக்கே வெப்பத்தை வழங்கும் அக்னி தேவனுக்கே இழந்த சக்தியை மீண்டும் கொடுத்த தலம் என்பதால் இங்கிருக்கும் இறைவன் அக்னிபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். 

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 125 வது தேவாரத்தலம் ஆகும். கும்பகோணம் – நாச்சியார்கோவில் – பூந்தோட்டம் சாலை வழியில் திருவீழிமிழலை சென்று அங்கிருந்து வடக்கே 3 கி.மி. பயணம் செய்தால் இத்தலத்தை அடையலாம்.

சிவபெருமானைப் புறக்கணித்துவிட்டு மற்ற அனைவரையும் அழைத்து, தட்சன் யாகம் நடத்தினான். யாகத்தில் கலந்து கொண்டவர்களில் அக்னி தேவனும் ஒருவன். சிவனை அவமதித்து நடத்தப்பட்ட யாகத்தில் கலந்து கொண்டதற்காக இவன் பத்ரகாளியாலும், வீரபத்திரராலும் தண்டிக்கப்பட்டு சாபம் பெற்றான். அக்னிக்கு சாபம் ஏற்பட்டதால் எந்த யாகத்திலும் கலந்து கொள்ள முடியவில்லை. யாகம் நடத்தப்படாததால், மழைவளம் குன்றியது. உயிர்கள் வாடத் தொடங்கின. இதனால் வருந்திய அக்னி தேவன், இத்தலம் வந்து இலிங்கம் அமைத்து, தீர்த்தம் உண்டாக்கி, வன்னி இலைகளால் இறைவனை அர்ச்சித்து, சாபம் நீங்க பெற்றான். வன்னி என்றால் அக்னி என்று பொருள். அக்னி தேவன் வழிபட்ட தலமாதலால் இத்தலம் “அன்னியூர்” ஆனது. இறைவன் “அக்னிபுரீஸ்வரர்” ஆனார். தீர்த்தம் அக்னி தீர்த்தம் ஆனது. பார்வதி தேவி காத்யாயன முனிவரின் மகளாகப்பிறந்து இறைவனை அடைய இத்தலத்தில் தவமிருந்தாள். இறைவன் இவளுக்கு காட்சி தந்து இத்தலத்தின் அருகிலுள்ள திருவீழிமிழலையில் திருமணம் செய்து கொண்டார். எனவே இது திருமணத்தடை நீக்கும் தலமாகும். இங்குள்ள பஞ்சமூர்த்திகளில் சோமாஸ்கந்த மூர்த்தி மிகவும் அழகானது.

சிறிய கோயில். சிறிய இராஜகோபுரம். உள்நுழைந்து வலமாக வரும்போது கருவறைச் சுவரில் அப்பர், அக்னி, கௌரி, சிவலிங்கம், காமதேனு பால் சொறிவது, ரிஷபாரூடர் சிற்பங்கள் வரிசையாக உள்ளன. பக்கத்தில் தக்ஷிணாமூர்த்தி உள்ளார். வினாயகர், பாலசுப்ரமணியர், கஜலட்சுமி சன்னிதிகளும், தலமரம் வன்னியும் உள்ளன. முன்மண்டபத்தில் நால்வர் சன்னிதி. வலப்பால் அம்பாள் தரிசனம். சிறிய திருமேனி. நேரே உள்சென்றால் மூலவர் தரிசனம். மூலவர் பின்புற விளக்கு வரிசையுடன் மிகவும் பிரகாசமாகக் காட்சியளிக்கிறார். இங்குள்ள ஸோமாஸ்கந்தர், நடராஜர் திருமேனிகள் மிக்க அழகுடையவை.

வைகாசி விசாகம், மாசி மகம் போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திருமணத்தில் தடை உள்ளவர்கள், இங்குள்ள இறைவனுக்கு அர்ச்சனை செய்து, திருவீழிமிழலை சென்று வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.  வீடு, வியாபாரத்தலங்களில் வாஸ்து குறைபாடு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு. இத்தலத்தை வாஸ்து பரிகார கோயில் என இப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள். கட்டிடம் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டால் 7 செங்கல் கொஹண்டு வந்து இங்கு வைத்து வழிபட்டு தொடங்கினால் தடையின்றி கட்டலாம் என்பது ஐதீகம். வேண்டுதல் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்தும், புத்தாடை அணிவித்தும், சிறப்பு பூஜைகள் செய்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய், ரத்த கொதிப்பு உள்ளவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவனுக்கு கோதுமையால் செய்த பொருட்களை நைவேத்தியம் செய்து வழிபட்டால் விரைவில் குணமாகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top