ஆலயங்களில் ஸ்படிக லிங்க வழிபாடு

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆலயங்களில் ஸ்படிக லிங்க வழிபாடு பற்றிய பதிவுகள் :

சிதம்பரத்தில் ஸ்படிக லிங்கம் சந்திர மவுலீஸ்வரராக வழிபடப்படுகிறது. தினமும் விடியற்காலையில் இதற்கு பூஜைகள் செய்யப்படுகின்றன. 

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் ஸ்படிக லிங்க வழிபாடு இருக்கிறது.

காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலிலும் ஸ்படிக லிங்க வழிபாடு உள்ளது. உற்சவ மூர்த்தி இங்கே கண்ணாடிக் கருவறையில் ருத்திராட்சப் பந்தலின் கீழ் வீற்றிருக்கிறார். இவருக்கு முன்னால் மற்றொரு சிறிய சன்னதி இருக்கிறது. இங்கு தான் ஸ்படிக லிங்கம் நந்தியோடு சேர்த்து பூஜிக்கப்படுகிறது.

அதே போல ராமேஸ்வரம் கோயிலிலும் ஸ்படிக லிங்கம் உள்ளது. இது விபீஷணனால் இங்கே கொண்டு வரப்பட்டதாக கூறுகிறார்கள். ராமரும் சீதையும் பூஜித்த லிங்கமாக இது கருதப்படுகிறது.

இராமேஸ்வரத்தில் இராமநாதர் சன்னதியில் அதிகாலை 4 மணிக்கு ஸ்படிகலிங்க தரிசனம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இங்கு ஒரு விசேஷம் என்னவென்றால், அதிகாலையில் அதாவது காலை 4 மணி முதல் 5 மணி வரை, இக்கோயிலில் உள்ள ஜோதிர்லிங்கத்தின் முன் ஸ்படிக லிங்கம் வைக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது.

இவை தவிர திருவெண்காடு எனப்படும் ஸ்வேதாரண்யத்திலும், நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலிலும் ஸ்படிக லிங்கம் வழிபடப்படுகிறது. 

இத்தனை சிறப்பு வாய்ந்த ஸ்படிக லிங்கத்தை பயன் பெற எப்படி வழிபட வேண்டும்?

இதன் தனிச் சிறப்பு என்னவென்றால் இது ஒரு வினாடிக்கு, 32,768 தடவை நேர்மறையாக அதிரக்கூடிய தன்மை உடையது. அதனால் தான் ஒரு ஸ்படிக லிங்க கருங்கற்களால் செய்யப்பட்ட ஆயிரம் லிங்கங்களுக்குச் சமம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

ஸ்படிக லிங்கத்துக்கு விபூதியால் அபிஷேகம் செய்தால் கர்ம வினைகள் நீங்கும். முன்பு சொன்னது போல இதன் நேர்மறையான அதிர்வுகள் நவகிரகங்களின் கெட்ட பலனை பெரிதும் அழிக்கும்.

ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து தூய மனதோடு சிவனின் பஞ்சாட்சர மந்திரத்தை 108 தடவை ஜபிக்க எல்லா பாவங்களிலிருந்தும் விமோசனம் கிடைக்கும்.

பொதுவாகவே மந்திர சித்தி, அதாவது சொல்லும் மந்திரங்களுக்கு முழுமையான பலன் கிட்ட வேண்டுமானால் அம்மந்திரத்தை ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து பய பக்தியுடன் ஜபித்தால் பலன் பல மடங்கு கிட்டும்.

ஸ்படிகம் என்பது நம் மனதை அப்படியே பிரதிபலிக்கும் தன்மை உடையது. அதனால் அதை வணங்கும்போது தூய்மையான மனதோடு வணங்குதல் அவசியம். ஸ்படிக லிங்கத்தைப் போலவே ஸ்படிக மணி மாலையும் மிகவும் புனிதமானது. விசேஷமானது.

ஸ்படிகம் நம் மனதில் தன்னம்பிக்கையையும், எதையும் எதிர் கொள்ளும் நெஞ்சுரத்தையும் வழங்கும் தன்மை உடையது. அதனால் நம் தோற்றத்திலும் ஒரு பொலிவு உண்டாகும்.

ஸ்படிக லிங்கத்தின் மற்றொரு பெரும் சிறப்பு, இது தாந்திரீகர்களால் பெரிதும் போற்றப்படுகிறது என்பதாகும். மற்றவர்கள் மீது ஏவப்பட்ட ஏவல், பின்னி சூனியங்கள் முதலியவற்றை எடுப்பவர்கள் அவை தங்களைத் திருப்பித் தாக்காமல் இருக்க ஸ்படிகலிங்க வழிபாடு செய்வார்கள்.

ஸ்படிக லிங்க வழிபாட்டை வீட்டில் நித்திய பூஜையாகவும் செய்து வரலாம். அவ்வாறு பூஜை செய்பவர்கள் லிங்கத்திற்கு பசும்பால், பழச்சாறு, பன்னீர் மற்றும் மஞ்சள் கலந்த நீராலும் அபிஷேகம் செய்து, பூக்கள் கொண்டு பூஜை செய்து, தூப, தீபம் ஆரார்த்தனைகள் செய்து வழிபட்டால் சகல பாவங்களும் விலகி விடுவதாக சொல்லப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top