வைகுண்ட ஏகாதசி நாளில் நாள் முழுவதும் நாராயண நாமம் கூறி விரதம் இருந்து வழிபட்டால் மோட்சத்திற்கு வழி கிடைக்கும்.
ஏகாதசி என்றால் பதினொன்று என்று பொருள். ஞானேந்திரியம் ஐந்து; கர்மேந்திரியம் ஐந்து; மனம் ஒன்று என்னும் பதினொன்றும் பகவானிடம் ஈடுபடுவதே ஏகாதசி விரதம். மாதங்களில் நான் மார்கழி என்கிறார் மகாவிஷ்ணு.
அத்தகைய சிறப்பு வாய்ந்த மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி ஆகும். அதுவே மோட்ச ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. அந்தநாளில் பகவானை மட்டுமே நினைத்து, அவன் புகழ் பாடி விரதமிருந்தால், மனக் கவலைகள் விலகி மகிழ்ச்சியான வாழ்க்கை ஏற்படும்.
ஏகாதசிக்கு முதல் நாள் தசமி அன்று திருமாலை வணங்கி விரதம் தொடங்கி அன்று பகலில் ஒரு வேளை மட்டும் சாப்பிடலாம். ஏகாதசியன்று அதிகாலையில் கண் விழித்து, குளித்து, மஹாவிஷ்ணுவை வணங்கி மந்திரம் சொல்ல வேண்டும். பெருமாள் ஆலயங்களில் நடைபெறும் வழிபாட்டு வைபவங்களை தரிசிப்பது சிறப்பு. அன்று இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களைப் படிப்பதும், பகவான் நாமங்களைச் சொல்வதுமாக இருக்க வேண்டும்.
ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி அன்று அதிகாலையில் குளித்து விட்டு, கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கிய பிறகு, உப்பு- புளிப்பு இல்லாத உணவை பரிமாறி சுண்டைக்காய், நெல்லிக்கனி, அகத்திக்கீரை சேர்த்து, பற்களில் படாமல் கோவிந்தா கோவிந்தா' என்று மூன்று முறை கூறி சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். ஏழைகளுக்கும் உணவு வழங்க வேண்டும். துவாதசி அன்று பகலில் தூங்கக் கூடாது. குழந்தைகள், வயதானவர்கள் நோயாளிகளுக்கு உணவு விஷயத்தில் விலக்கு என்கிறது சாஸ்திரம்.
ஏகாதசி திதி நாட்களில் தாய், தந்தைக்கு நினைவு நாள் (சிரார்த்தம்) வந்தால் அன்று நடத்தாமல் மறு நாள் துவாதசி அன்று நடத்த வேண்டும். ஏகாதசி அன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்யக்கூடாது. ஏகாதசி அன்று துளசி இலைகளை பறிக்கக் கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விட வேண்டும்.
வைகுண்ட ஏகாதசியன்று இரவு கண்விழித்து பரமபதம் விளையாடுவது ஒரு முக்கியமான சம்பிரதாயமாகக் கருதப்படுகிறது. பாவம் செய்தவர்கள் வாழ்வில் கீழே இறங்குவர் என்பதையும், புண்ணியம் செய்தால் சொர்க்கமாகிய திருமாலின் வைகுண்டத்தை எளிதாக அடையலாம் என்பதையும் இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஏகாதசி நாளில் உண்ணாமலும் உறங்காமலும் விரதம் இருக்கவேண்டும் என்பதே முக்கியம். ஆனால், ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் பட்டினி இருக்க வேண்டும். குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை. ஏழு முறை துளசி இலை சாப்பிட வேண்டும். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிட வேண்டும்.
ஏகாதசி அன்று இரவில் விஷ்ணு கோயில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு இறைவனை வழிபட வேண்டும். முக்கியமாக அன்றைய தினம் மட்டுமே திறக்கப்படும் சொர்க்க வாசலைக் கடந்து பெருமாளோடு பரமபதத்தினை அடைவது சிறப்பானது. கோவிலில் கொடுக்கும் பிரசாதத்தை கூட வாங்கி சாப்பிடக்கூடாது.
ஏகாதசி விரதம் முடிந்த மறுநாள், துவாதசியன்று காலையில் நீராடி திருமண் இட்டு, துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். இன்று எடுத்துக்கொள்ளும் விரதம் 'பாரணை' எனப்படுகிறது. பாரணை என்றால் விரதத்தினை முடிக்கும் முறை எனலாம். இந்த நாளில் காலையிலேயே 21வித காய்கறிகள் இடம் பெற்ற உணவைச் சமைத்து உண்ண வேண்டும்.
வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று அதிகாலையில் நீராடி நெற்றியில் நாமம் அல்லது திருநீறு பூசி, துளசியும், தீர்த்தமும் அருந்த வேண்டும். காலை 3 மணிக்கு பக்திப் பாடல்களை பாட வேண்டும். 3.30 மணிக்கு சமையலைத் துவங்கி பல்வேறு வகை கறிகளுடன் சூரிய உதயத்திற்குள் சமையல் முடித்து விட வேண்டும். அகத்திக்கீரை பொரியல், நெல்லிக்காய் துவையல், வறுத்த சுண்டைக்காய் ஆகியவை முக்கியமானவை. இதை குடும்பத்தாருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும். ஆனால், துவாதசியன்று இரவில் சாப்பிடக்கூடாது.
பரங்கிக்காய், அகத்திக்கீரை, நெல்லிக்காய் ஆகியவைகளை வைகுண்ட ஏகாதசி நாளில் ஏன் சேர்க்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ஏகாதசி நாளில் நாம் இறைவனை நினைத்து பட்டினி கிடப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது. அகத்திக் கீரையில் பாற்கடல் அமுதமும், நெல்லி, சுண்டைக்காயில் லட்சுமியின் அருளும் இருப்பதாக ஐதீகம். அதனால் துவாதசி நாளில் சுவாமிக்கு நைவேத்யம் செய்து, ஒரு ஏழைக்கு தானம் செய்த பிறகு நாம் சாப்பிட வேண்டும்.
காலையிலேயே சாப்பாட்டை முடித்து விட்டு பகல் முழுவதும் உறங்காமல் நாராயண மந்திரத்தை கூறியபடி இருக்க வேண்டும். துவாதசி நாளில் சூரியன் அஸ்தமனம் முடிந்த பின்னரே உறங்க வேண்டும். இதன் மூலம் உடல் பலமும், ஆன்ம பலமும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
பெருமைமிக்க இந்த வைகுண்ட ஏகாதசி விரதத்தினை முப்பத்து முக்கோடி தேவர்களும் ஏற்பதாக ஐதீகம். இதனாலேயே இந்நாளுக்கு வைகுண்ட முக்கோடி ஏகாதசி எனவும் பெயருண்டு. வைகுண்ட ஏகாதசி நாளில் பெரியோர்களின் வழிகாட்டலின்படி விரதமிருந்து வணங்கினால் அந்த சொர்க்கவாசலை திறந்து மோட்சத்தை அளிப்பார் இறைவன் என்பது ஐதீகம்.