மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி அன்று சாதாரண மக்களும் அறிந்துணர்வதற்காக பரமபதத்தைக் காட்டுவார்கள்.
பரமபதத்தில் நாம் தாயத்தை உருட்டுகின்றோம், திரும்பத் திரும்ப மேலும் கீழும் வந்து பல சுழற்சிகள் ஆகி நாம் மேலே போகின்றோம். நம் வாழ்க்கையில் நடக்கும் இத்தகைய பேருண்மைகளை நமக்கு நினைவுபடுத்தும் நாள் தான் ஏகாதசி.
பரலோகம் எனப்படும் இறைவன்
நாராயணனின் பரமபதத்தை அடைய வேண்டும் என்றால் விருப்பு வெறுப்பு என்ற நிலை இல்லாதபடி ஒளியின் உடலாக நாம் பெற்று அந்த மெய் ஒளியின் எண்ணத்துடன் செல்வது தான் ஏகாதசி என்பது.
அன்றைய நாளில் சொர்க்கவாசல் ( பரமபதவாசல் என்பதே சொர்க்கவாசாலாக மருவியது ) என்று கோவில்களை எல்லாம் திறந்து வைப்பார்கள். நமக்கு இதைக் கதையாகச் சொல்லி ஏதோ பேருக்கு சொர்க்க வாசல் வழியாகச் சென்று சாமியைக் கும்பிட்டோம்… போனோம்… வந்தோம்… இராத்திரியெலாம் விழித்திருந்தோம்… இரவு பரமபதம் விளையாடினோம் என்ற எண்ணம் தான் இருக்கும்.
பரமபதத்தின் இரகசியம்
நம் வாழ்க்கையில் எல்லாம் நல்லதைச் செய்வோம். அதே சமயம் நம்மை அறியாதபடி வேதனை என்ற நிலைகள் வரப்படும் போது அந்த விஷமான நிலைகள் “கொத்தப்பட்டு…!” நம் உடலுக்குள் நோய்களாகி விடுகின்றது.
நோயாகி விட்டால் இந்த மனிதச் சரீரத்தை இழந்து மீண்டும் இழி நிலையான சரீரத்தைப் பெற்று விடுகின்றோம்.
1. அதிலிருந்து மீண்டு மீண்டும் மனிதனாக வளர்ச்சியாகி பல கோடி சரீரங்களைப் பெற்று…
2. மீண்டும் இழந்து மீண்டும் வளர்ச்சி பெற்று…
3. இப்படியே இழந்து இழந்து… இன்று நாம் இந்தச் சுற்றிலேயே தான் இருக்கின்றோமே தவிர
4. மெய் வழியின் தன்மையை அடையும் தன்மை (பரமபதத்தை) இல்லாது நாம் இருக்கின்றோம்.
5. அந்த மெய் வழி செல்வதற்கு என்ன வழி…?
என்ற நிலையைத்தான் அன்று மெய் ஞானிகள் பரமபதத்தின் மூலம் உணர்த்தினார்கள்.
பரமபதம் அடைவது என்றால் என்ன?
1. பரிணாம வளர்ச்சியில் கீழான உயிரினங்களிலிருந்து அடுக்கடுக்காகச் சென்று
2. மனித நிலைகள் பெற்று மனித நிலைகளிலிருந்து
3. உயிரை ஒளியாக மாற்றி உச்சியிலே செல்லும் போது தான் ( அர்ச்சிராதி மார்க்கம் எனும் ஔிமயமான வழி )
4. அதாவது இந்த உடலை விட்டு (வெளியிலே) விண்ணிலே சென்று அனைத்து எண்ணிலாத் தெய்வங்கள், அமரர்கள், முனிவர்கள், தேவதைகளை உள்ளடக்கிய அனைத்து அண்டப் பிரமாண்டத்தைக் கடந்து பேரொளியாக நிற்க கூடிய நிலையைப் பரமபதமாகக் (நல அந்தமிலாப் பேரின்ப சோதித் திருநாடு ) காட்டி
5. அதற்குகந்த நாளாக நாம் ஏகாதசியைக் காட்டினார்கள் ஞானிகள்.
ஓடி ஓடி மாறி மாறி பலபிறப்பு பிறந்து பிறந்து வாழ்வில் கஷ்டங்களும் சுகங்களும் அனுபவித்துப் பிறவி வீணாகாமல் இறைவனிடம் சரணாகதி மூலம் பக்திசெய்து இருவினையாகிற பாவம் - புண்ணியம் கழிந்துக் கட்டக் கடைசியிலே பரலோகத்திலே ஆட்சிசெலுத்தும் பரதெய்வமான நாராயணன் திருவடியடைதலே பிறவிப்பயன் - முக்தி எனப்படும் மோட்சநிலை, அதை நாம் பெற்று மீண்டும் இந்த பிறவிநோய்க்கு இடமான உலகத்தில் திரும்பாமல் அங்கேயே நிலைபெற்றுவிட வேண்டும்.
இதைத் தான் நாம் இந்த விளையாட்டின் மூலம் பெறப்படும் படிப்பினை. அவனிடம் சரணாகதி அடைந்தால் தான் எல்லாம் நன்மைக்கே என்று தெரிந்து கொள்ளலாம்.