கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டியில் பிரசித்திபெற்ற மரத்தடி மாரியம்மன் கோவில் உள்ளது. 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோவிலில் வடக்கு திசை நோக்கி மாரியம்மன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்தக் கோவிலின் தலவிருட்சம் ஆலமரம் ஆகும்.
வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமை மற்றும் பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் மரத்தடி மாரியம்மனுக்கு பால், தயிர், தேன், பன்னீர், திருமஞ்சனம், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் மாலை நேரங்களில் அபிஷேகம் நடைபெறும். அதன்பிறகு தீபாராதனை காண்பிக்கப்படும்.
தீராத நோயால் அவதிப்படுபவர்கள் மரத்தடி மாரியம்மனை மனமுருகி வழிபட்டால் அவர்களது நோய் தீருவதாக கூறப்படுகிறது.
மேலும், குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் குழந்தை போன்ற சிறு உருவபொம்மையை செய்து வைத்து அம்மனை வழிபட்டு வந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
மேலும், தங்களது நீண்ட நாள் வேண்டுதல் நிறைவேறியவுடன் அம்மனுக்கு காணிக்கை செலுத்தும் விதமாக பக்தர்கள் பொங்கல் வைத்து மரத்தடி மாரியம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.