ஸ்ரீராஜமாதங்கி நவராத்திரி

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஸ்ரீராஜமாதங்கி நவராத்திரி பற்றிய பதிவுகள் :

சரஸ்வதி தேவியின் தாந்த்ரீக ரூபமே ஸ்ரீ ராஜ மாதங்கி தேவி. தாந்த்ரீக முறையில் வழிபடப்படும், தச மஹா வித்யைகளுள் மாதங்கி தேவி ஒன்பதாவது வித்யாரூபமாகப் போற்றப்படுகிறாள். தேவியரின் தோற்றம் குறித்து பொதுவாக வழங்கப்படும் புராணக்கதை பின்வருமாறு.

தாக்ஷாயணியாக அம்பிகை திருஅவதாரம் புரிந்த சமயத்தில், தேவி, தன் தந்தை தக்ஷன், சிவனாரை மதிக்காமல் துவங்கிய யாகத்திற்கு சென்று அவனுக்குப் புத்தி புகட்ட விரும்பினாள். சிவனார் அதைத் தடுத்ததும் அம்பிகையின் கோபம் பன்மடங்காகப் பெருகியது. 

அந்த உணர்ச்சி நிலையே பத்து மஹாவித்யைகளாகப் பிரிந்து, எல்லாத் திசைகளிலும் சிவனாரைச் சுற்றி நின்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, வடமேற்குத் திசையில் நிலைகொண்ட மஹாவித்யையே ஸ்ரீமாதங்கி.

மற்றொரு புராணக்கதையின்படி, மதங்க முனிவரின் தவத்திற்கு மெச்சி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி அளித்த வரத்தின் பலனாக, அவருக்கு மகளாக வந்துதித்தவளே ஸ்ரீ மாதங்கி. மதங்க முனிவரின் மகளாக வந்துதித்த காரணத்தாலேயே 'மாதங்கி' என்ற திருநாமம் அம்பிகைக்கு ஏற்பட்டது. 

கிராமப்புறங்களில், 'பேச்சி', 'பேச்சாயி' 'பேச்சியம்மன்' என்ற திருநாமங்களோடு வழிபடப்படும் தெய்வம், பேச்சுக்கு அதிபதியான இந்த அம்பிகையைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ஸ்ரீ தேவிபாகவதத்தின் படி, தசமஹாவித்யைகளும் ஸ்ரீ லலிதா தேவியின் பரிவார தேவதைகளாகப் போற்றப்படுகிறார்கள்.

எல்லைகளற்ற கடல்போல் விரிந்த ஞானத்திற்கும், உள்முகமான அறிவாற்றலுக்கும் மாதங்கி தேவியே அதிதேவதை. மனதில் தோன்றுவதை சாமர்த்தியமாக வெளிப்படுத்தும் நல்லாற்றலும், எதையும் கிரகிக்கும் திறனும், கிரகிப்பதை பிறர் விரும்பும் வண்ணம் வெளிப்படுத்தும் திறனும், ஸ்ரீமாதங்கியின் அருளாலேயே சித்திக்கும். 

மேலும், ஒருவர் பேசும் வாக்கியத்தின் மத்திமப் பகுதியே அவர் மனதில் நினைத்திருப்பதை வெளிப்படுத்துவதாக அமையும். இந்த மத்திமப் பாகத்துக்கும் மாதங்கி தேவியே அதிதேவதை. நுண்ணறிவுக்கும் அதை வெளிப்படுத்தும் திறனுக்கும் மனதை அறிவின் மூலம் கட்டுப்படுத்தி அம்பிகையிடம் லயிக்கச் செய்யும் ஆற்றலுக்கும் அம்பிகையின் அருள் அவசியம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top