தை மாதத்தில் மகர ராசியில் சூரியன் பிரவேசிக்கின்றார். ஜோதிட ரீதியாக சூரியன் பிதுர்காரகன் என்றும், சந்திரன் மாதுர்காரகன் என்றும் அழைக்கப்படுகின்றது.
அமாவாசை என்பது மாதுர்காரகனும், பிதுர்காரகனும் ஒன்றாக இருக்கும் காலம் ஆகும். பிதுர்காரகனான சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் மாதமான, தை மாதத்தில் பிறக்கும் அமாவாசை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.
மேலும், ஆடி அமாவாசையன்று மூதாதையர்களை வரவேற்கும் நாம் தை அமாவாசையன்று விடைகொடுத்து அனுப்புகிறோம். பெரும்பாலும் சனிக்கிழமையில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதன்படி இந்த வருடம் தை 7ஆம் தேதி அதாவது ஜனவரி 21ஆம் தேதி, சனிக்கிழமை தை அமாவாசை தினமாகும்.
ஒருவன் தன் பெற்றோரையும், குலதெய்வத்தையும், முன்னோர்களையும் வணங்காவிட்டால், மற்ற தெய்வங்களை வணங்கி பலனில்லை.
அப்படிப்பட்ட சிறப்புகள் வாய்ந்த நம் முன்னோர்களை ஆடி, புரட்டாசி, தை ஆகிய அமாவாசை தினங்களில் மிக சிறப்பாக தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.
இந்த அமாவாசை தினத்தில் எறும்பு, பசு, காகம், நாய், பூனை மற்றும் அந்தணர்களுக்கு உணவளித்து அவர்களின் வயிற்றை நிறைத்தால் கடவுளின் ஆசியும், முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.
தை அமாவாசை தினத்தில் என்ன செய்ய வேண்டும்?
தை அமாவாசை தினத்தில் நீர் நிலைகளான கடல், ஆறு உள்ளிட்ட இடங்களில் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகள் படைத்தும், திதி, தர்ப்பணம் கொடுத்தும் வழிபடுவது வழக்கம்.
அப்படி நீர் நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள், வீட்டிலேயே தர்ப்பணம் கொடுத்து, அதனை அருகில் உள்ள நீர் நிலைகளில் கொண்டு சென்று விடலாம்.
தானம் அளித்தல் :
இந்த தை அமாவாசை தினத்தில் கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், உப்பு, உடைகள், பார்லி ஆகியவற்றை நாம் தானம் அளிப்பது மிகவும் நல்லது. இதனால் நம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.
பலன்கள் :
தை அமாவாசை வழிபாடு செய்வதன் மூலம் பித்ருக்கள் நற்கதியை அடைவதும், திருப்தி அடைவதும் மட்டுமில்லாமல், நம் வாழ்வில் நற்பலன்களும் பெருகும். மேலும் கடன் பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம்.