இந்திர விழா என்ற பெயரில் நல்ல மழை பொழியவும், நாடு செழிக்கவும் இந்திரனை ஆயர்கள் வழிபட்டு வந்தனர். ஆயர்கள் பக்தியோடும் பயத்தோடும் இந்திரனை வழிபட்டனர். ஆகவே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அறிவுரைப்படி ஆயர்களுக்கும் அவர்தம் ஆநிரைகளுக்கும் வளங்கள் தரும் கோவர்த்தன மலைக்கு ஆயர்கள் மரியாதை செய்தனர்.
இதனால் கோபமுற்ற இந்திரன் புயலாலும், மழையாலும் ஆயர்களை துன்புறுத்தினான். கோவர்த்தன மலையை குடையாய் பிடித்து இந்திரனிடமிருந்து ஆயர்களையும் அவர் தம் ஆநிரைகளையும் ஸ்ரீ கிருஷ்ணர் காத்தருளினார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கோவர்த்தன மலையை குடையாய் பிடித்து இந்திரனிடமிருந்து ஆயர்களையும் அவர் தம் ஆநிரைகளையும் காத்த நாளே சூரிய நாராயண பூஜையாகும்.
இந்திரன் தன் தவறை உணர்ந்து கண்ணனிடம் தன்னையும் மக்கள் வழிபட வேண்டும் என்று வேண்டிக்கொண்டதால் தை 1-ம் நாள் முன்தினம் இந்திர வழிபாடை (போகி பண்டிகை) ஆயர்கள் கொண்டாடினர்.
தை 1-ம் நாள் சூரியபகவானை சூரியநாராயணராக பாவித்து வழிபட்டனர். அதன் மறுநாள் தங்களின் ஆநிரைகளுக்கு விழா (மாட்டுப்பொங்கல்) எடுத்து தங்களின் உணவுகளை அவைகளுக்கு படைத்தும், காளைகளுடன் விளையாடியும் (ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு) விழாவை கொண்டாடினர்.
இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் கொண்டாட்டமாக மாறியது. பொங்கல் பண்டிகையைப் பொறுத்தவரையில் எக்காலத்திலும் விவசாயம் சம்பந்தபட்டதாகவே இருந்துள்ளது என்பது யாரும் மறுக்க உண்மையாக இருந்து வருகிறது.
இந்திர விழா என்ற பெயரில் இலக்கிய காலத்திலேயே இருந்துள்ளது. மணிமேகலையின் ஆரம்பமான விழாவரை குறிப்பில் இந்திர விழா என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த விழா, காவிரி பூம்பட்டினத்தில் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.
இப்போது, பொங்கல், தைப்பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என்ற மூன்று நாட்கள் மட்டுமே கொண்டாடப்படுகிறது. ஆனால், அந்தக் காலத்தில் 28 நாள்கள் நடந்துள்ளதற்கான சான்றுகள் இருக்கிறது.
முதன்முதலாக இந்திர விழா நடத்திய போது அதை நாட்டு மக்களுக்கு முரசறைந்து பொது அறிவிப்பாக அறிவித்தனர். இப்போது பொங்கல் ஊரையும், நாட்டையும் சுத்தம் செய்வது போல அப்போதும் நடந்துள்ளது. நகர வீதிகளில் பழைய மணலை மாற்றி புது மணல் பரப்பினர். காவல் தெய்வங்கள் முதல் சிவன் கோயில்கள் வரை சிறப்புப் பூஜை நடைப்பெற்றது.
இவ்விழா நாளில் பகைமை, பசி, நோய் நீங்க இறைவன் பிரார்த்தனை செய்யப்பட்டது. மழைக்குரிய தெய்வம் இந்திரன், அவனை வழிபட்டால், மாதம் மும்மாரி பெய்து பயிர் செழிக்கும் என மக்கள் நம்பிக்கை.
பிற்காலத்தில், சூரிய பகவான் சந்தோஷத்தை நிர்ணயிப்பவர் என்ற நம்பிக்கை வந்து, தங்கள் கண் முன் காட்சி தரும் அந்த கடவுளுக்கு பொங்கல் படைத்து வழிபட்டனர்.
பூமியில் இருக்கும் நீர் ஆவியாக்கி மேலே கொண்டு சென்று, ஒன்றுக்குப் பத்தாக மழை பெய்விப்பார், என்ற ரீதியில் இந்த நன்றியறிதல் தெரிவிக்கப்பட்டது. தாங்கள் அறுவடை செய்த புது நெல்லை தை முதல்நாளில் சூரியனுக்கு சமர்ப்பித்தனர். அந்த காலத்தில் கொண்டாடப்பட்ட இந்திர விழா என்ற பெயர் தற்போது பொங்கல் என மாறியது.