ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் சென்னிமலையில் உள்ளது சென்னை ஆண்டவர் கோயில் எனப்படும் அருள்மிகு சுப்ரமணியன் சுவாமி கோயில். பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1749 அடி உயரத்தில் அழகிய வனப்பகுதியில் அமைந்திருக்கிறது.
ஈரோட்டில் இருந்து 26 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த முருகன் கோயில் 1700 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியாக அமைந்திருப்பதால் கோயிலுக்கு வருவோரை மீண்டும் மீண்டும் வரத் தூண்டும் அளவிற்கு ரம்மியத்துடன் காணப்படுகிறது. மேலுள்ள கோயிலுக்கு செல்ல அடிவாரத்தில் இருந்து 1320 படிக்கட்டுகளும், வாகனத்தில் செல்ல நான்கு கிலோமீட்டர் தார் சாலை வசதியும் காணப்படுகிறது.
கிழக்கு நோக்கி உள்ள சென்னிமலை ஆண்டவர் சன்னதிக்கு முன்பாக விநாயகர் சன்னதியும், வலது பக்கத்தில் மார்க்கண்டேஸ்வரர் மற்றும் உமையவள்ளி அம்மனும் இடது பக்கத்தில் காசி விஸ்வநாதர் மற்றும் விசாலட்சி அம்மனும் பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். பின்புறமாக சென்றால் வள்ளி தெய்வானை சன்னதி இருந்த போதும், தேவியர் இருவரும் தனிப்பெரும் கோயிலில் இருந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பாக அமைந்திருக்கிறது.
அதற்கு பின்புறம் சென்றால் மழையின் உச்சியில் 18 சித்தர்களில் ஒருவராக பின்நாக்கு சித்தர் சன்னதியும் இதன் பின்புறம் சரவண மாமுனிவரின் குகையும் காணப்படுகிறது. அருணகிரிநாதருக்கு முருகன் படிக்காசு வழங்கிய தலம் இது என்றும், பல சிறப்புகளைக் கொண்ட சென்னிமலை ஆண்டவர் கோயிலில் கடந்த 1984 ஆம் ஆண்டு 1320 படிக்கட்டுகள் வழியாக இரட்டை மாட்டு வண்டி ஒன்று தங்கு தடை இன்றி சென்று அதிசயத்தை நடத்தி இருக்கிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள்கள் நேரில் கண்டு களித்துள்ளனர்.
கடந்த 1992ஆம் ஆண்டு கடைசியாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கடந்த எட்டு வருடங்களாக திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ஒன்றை கோடி ரூபாய் செலவில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் 85 லட்சம் செலவில் மார்க்கண்டேஸ்வரர் உமையவள்ளி சன்னதி, 80 லட்சம் செலவில் காசு விஸ்வநாதன், விசாலாட்சி சன்னதி, 35 லட்சம் செலவில் ஷோபனா மண்டபம், 65 லட்சம் செலவில் கோயில் பிரகாரத்தில் கல்கலம் மற்றும் வடிகால் அமைத்தல் உட்பட 21 பணிகள் 6 கோடி ரூபாய் செலவு செய்து முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சென்னிமலை முருகன் கோயிலில் ஒவ்வொரு வருடமும் தை மாதம் தைப்பூச தேர்த்திருவிழா, பங்குனி தேரோட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.