காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் என்னும் ஊரில் அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இத்தல மூலவர் நாகேஸ்வரர் என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறார். இவர் இக்கோயிலில் ராகுவின் அம்சமாக காட்சி தருகிறார்
இத்தலத்தில் காமாட்சி சிம்ம வாகனத்துடன் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள்.
சித்ரா பௌர்ணமியை ஒட்டி இக்கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாளில் சிவன், அடியாருக்கு காட்சி தரும் வைபவம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
அப்போது சுவாமிக்கு முன்புறம் அவரை பார்த்தபடி ஒரு சப்பரத்தில் நால்வர் மற்றும் சேக்கிழார் உலா செல்கின்றனர். சித்ரா பௌர்ணமியன்று சிவன், அம்பாள் திருமணம் நடைபெறுகிறது. இவ்விழாவில் மூலவரான நாகேஸ்வரர், நாக வாகனத்தில் உலா செல்வது மிகவும் சிறப்பம்சமாகும்.
இத்தலம் "வடநாகேஸ்வரம்" என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்தை மூலவர் சன்னதிக்கு பின்புறம் வைத்து வழிபடுகின்றனர். இவர் அருணாச்சலேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இவரையும் மற்றொரு மூலவராக பாவித்து வழிபாடு செய்கின்றனர்.
இக்கோயிலின் பிரகாரத்தில் சேக்கிழார் வலது கையில் சின்முத்திரை காட்டியும், இடது கையில் ஏடு வைத்தபடியும் மேற்கு நோக்கி சிவனை தரிசித்தபடி நின்ற கோலத்தில் தனிச்சன்னதியில் காட்சி தருகிறார்.
இத்தல விநாயகர் அனுக்ஞை விநாயகர் என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறார். இங்குள்ள கோபுரம் 5 நிலைகளைக் கொண்டு காட்சியளிக்கிறது.
இக்கோயிலின் பிரகாரத்தில் பரவை நாச்சியாருடன் சுந்தரர் அருள்பாலிக்கிறார்.
நாகத்தின் வடிவில் சத்யநாராயணர், நாகேந்திரர் மற்றும் நாகநாதேஸ்வரர் ஆகியோர் இத்தலத்தில் காட்சி தருகின்றனர். இந்த மூன்று நாகங்களுக்கு மத்தியிலும் லிங்க வடிவம் இருக்கிறது.
காசி விஸ்வநாதர், லட்சுமி, சரஸ்வதி, வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணியர், கற்பக விநாயகர், சனீஸ்வரர் ஆகியோரும் இக்கோயிலில் தனிச்சன்னதியில் காட்சி தருகின்றனர்.
சித்திரையில் பிரம்மோற்சவம், வைகாசியில் சேக்கிழார் குருபூஜை, புரட்டாசியில் நிறைமணி காட்சி, தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் தெப்பத்திருவிழா, ஆடிப்பூரம், மாசிமகம் ஆகியவை இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
நாக தோஷம் நீங்க இத்தல இறைவனை பிரார்த்தனை செய்கின்றனர். இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.