விரதங்கள் என்பது ஆன்மிக நம்பிக்கை மட்டுமின்றி அறிவியலும், ஆரோக்கியமும் அடங்கியுள்ள ஒன்று. அதற்காகத்தான் அக்காலம் முதல் விரதங்களை கடைபிடித்து வருகின்றனர்.
எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும். அத்தனை சிறப்பு வாய்ந்த தமிழ்க்கடவுளான முருகப்பெருமானை நினைத்து மேற்கொள்ளும் முக்கிய விரதங்களுள் ஒன்று சஷ்டி விரதம்.
விரதம் இருக்கும் முறை :
இந்த தேய்பிறை சஷ்டியில் முருகன் கோவிலுக்கு சென்று அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களில் உங்களால் முடிந்த பொருட்களை வாங்கி கொடுக்கலாம். குறிப்பாக இளநீர் மற்றும் தேன் போன்றவற்றை வாங்கி கொடுப்பதன் மூலம் சுபிட்சம் பெருகும்.
வீட்டிலேயே சஷ்டி விரதத்தை கடைபிடிப்பவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, முருகனுக்கு உகந்த வாசம் மிகுந்த மலர்களை சாற்றி, ஆறு விளக்குகளை கிழக்கு நோக்கி இருக்குமாறு ஏற்றி, பூஜை செய்து விரதத்தை தொடங்கலாம்.
இவ்வாறு ஆறுமுகனுக்கு ஆறு விளக்குகளை ஏற்றி வழிபடுவது மிகவும் சிறப்பு.
பின்னர் முருகனுக்கு உகந்த ஏதாவது ஒரு நெய்வேத்திய பொருளை படைக்கலாம். அதாவது சுண்டல் அல்லது சர்க்கரைப் பொங்கல் போன்று செய்யலாம்.
இது எதுவும் செய்ய முடியாவிட்டால் நாவல் பழத்தை வைத்து வழிபடலாம். முருகனுக்கு நாவல் பழமானது மிகவும் இஷ்டமான ஒரு பழம் ஆகும்.
இவ்விரதத்தை முழு நேரமும் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழம் போன்றவற்றை சாப்பிடலாம்.
மீண்டும் மாலையில் இதேபோல் பூஜை செய்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம். வீட்டிலேயே இருப்பவர்கள் விரதம் முடியும் வரை முருகனுக்கு விளக்கு ஏற்றி வைப்பது மிகவும் நல்லது.
வீட்டிலேயே முருகனின் பாமாலைகளைப் பாடலாம். குறிப்பாக கந்தசஷ்டி, திருப்புகழ் உள்ளிட்ட முருகனின் சிறப்புகளை உணர்த்தும் பாடலை படிக்கலாம்.
மேலும் குழந்தை வரம் வேண்டுபவர்கள் விரதத்தின்போது திருப்புகழை பாராயணம் செய்யலாம்.
பலன்கள் :
குழந்தைப்பேறு கிட்டும், திருமணத்தடை அகலும், செல்வ வளம் பெருகும்.