பிருங்கி முனிவர் கள்ளி மலர்களால் பூஜித்த திருக்கள்ளில் ஈசன்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பிருங்கி முனிவர் கள்ளி மலர்களால் பூஜித்த திருக்கள்ளில் ஈசன் பற்றிய பதிவுகள் :

தொண்டை மண்டலத்தில் கள்ளி மரங்கள் நிறைந்த வனத்தில் ஓரிடத்தில் பிருங்கி முனிவர் சிவரூபத்தை கண்டு கள்ளி மலர்களால் அர்ச்சித்து வணங்கினார்.  

பரமேஸ்வரன் பிருங்கி முனிவருக்கு சக்தி தன்னுள் ஒரு அங்கம் என உபதேசித்து, ஈஸ்வரியை தன்னுள் ஏற்றி உமையொரு பாகனாக அர்த்தநாரியாக காட்சி தந்தார். உமை ஒரு பாகனைக் கண்டதும் முனிவர் இருவரையும் பணிந்து வணங்கினார். பிருங்கி முனிவருக்கு அறிவுரை வழங்கிட இறைவன் வந்த திருத்தலமே திருக்கள்ளில் என்று போற்றப்படும் சிவ தலம்.

கள்ளிக்காடாக இருந்ததாலும் பிருங்கி முனிவர் கள்ளி மலர்களால் பூஜித்ததாலும் இப்பெயர் பெற்ற இத்தலம் திருவள்ளூர் மாவட்டத்தில் திருக்கண்டலம் என்ற ஊரில் அமைந்துள்ளது.
மேலும், கயிலையில் கபாலியின் திரமணத்தைக் காண எல்லோரும் கூடியதால் பூமியின் பாரம் மாறுபட அகத்தியரை தெற்கே அனுப்பிய சிவன். 

அகத்தியரக்கு கனவில் தோன்றி இத்தலத்தைச் சொன்னதாகவும் இங்கே அகத்தியர் வழிபடும்போது தனது திருமணக் கோலம் மட்டுமல்லாது முருகப் பெருமானுடன் சோமாஸ்கந்தராக தரிசனம் தந்ததாகவும் சொல்லப்படுகிறது. 

அகத்தியரின் கோரிக்கைப் படி, பணியும், பக்தர்கள் எல்லோருக்கும் அருள்புரிய இசைந்த இறைவன் லிங்க மூர்த்தியாக இங்கு எழுந்தருளி இருக்கிறார். காளத்திநாதரை காணச் சென்று கொண்டிருந்த திருஞானசம்பந்தர் வழியில் ஆற்றில் குளிக்கும் போது கரையில் வைத்திருந்த திருநீறு மற்றும் பூஜை பொருட்கள் காணாமல் போய்விட்டதாம். சம்பந்தர் அவற்றைத் தேடி வர, இவ்வாலத்தில் அவற்றைக் கண்டாராம். 

அப்போது கேட்ட அசரீரி, சம்பந்தரை இங்கு வரவழைக்கவே பூஜை பொருட்களை சிவன் மறைத்து வைத்ததாகச் சொன்னதாம். சம்பந்தர் சிவனை கள்ளனாக வைத்த தேவாரப்பதிகம் பாடி பக்தி செலுத்தியதால் தேவாரத்தில் இடம் பெற்ற 18வது தொண்டை மண்டல தலமானது திருக்கள்ளில்.

சஸ்தலை ஆற்றின் கரையில் அமைந்த இத்தலத்தில் அடியவர்களுக்கு ஆனந்தம் அளித்தருளிய ஈசன் சிவானந்தீஸ்வரர் ஆகவும், அம்பிகை ஆனந்தவல்லி ஆகவும் எழுந்தருளி உள்ளனர். உற்சவ மூர்த்தி சோமாஸ்கந்தர். தனிச் சன்னதியில் சக்தி தட்சிணாமூர்த்தி அமுதக் கலசமும் ஏடும் கொண்டு அம்பாளை அணைத்தபடி பிருங்கி முனிவருடன் காட்சி தருகிறார். 

பிரம்மா முருகன், சுந்தர விநாயகர், நடராஜர், காளத்தீஸ்வரர், ஆஞ்சநேயர், நாகர், நவகிரகங்கள், பைரவர் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர். 2000 ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை கொண்ட இவ்வாலத்தைப் பற்றிய செய்திகள் 12 முதல் 15ம் நூற்றாண்டைச் சேரந்த சோழ பாண்டிய, விஜயநகர மன்னர்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

கிராமச் சூழலில் தூய்மையாக அமைந்த இவ்வாலயம் அமைதியாக இறைவனை தரிசித்து அருள் பெற சிறந்த இடமாகும். ஆலயத்தின் குளமான நந்தி தீர்த்தத்தில் நீராடுவதும் சிறப்பானது.

தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் கள்ளி மலர்களால், அர்ச்சனை செய்து வணங்கினால் பிரந்திருக்கும் தம்பதியர் இணைவார்கள் என்பது நம்பிக்கை, அதேபோல திருட்டு கொடுத்தவர்கள் பைரவருக்கு மிளகாய் பொடியால் அபிஷேகம் செய்து, பொருட்கள் திரும்பக் கிடைத்த பின்னர் பாலாபிஷேகம் செய்கின்றனர்.

பெரியபாளையம் அருகில் உள்ள கன்னிகைப்பேர் (கன்னிப்புதூர் என்றும் சொல்வார்கள்) என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து 4 கி.மீ. தூரத்தில் உள்ள திருக்கண்டலம் என்னும் திருக்கள்ளில் செல்லலாம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top