சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபலமான ஆன்மிக தலங்களில் ஒன்று காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவில். புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே இக்கோவிலில் வந்து தரிசிக்க முடியும் என்ற சொல் வழக்கும் இக்கோவிலுக்கு உண்டு. மூன்று சிவ லிங்கங்கள், மூன்று தாயாரை ஒரே இடத்தில் தரிசிப்பதும் மிக அபூர்வமான காட்சியாகும்.
ஒரே லிங்கத்தில் ஆயிரம் லிங்கங்கள் அமைந்த சகஸ்ரலிங்கமும் அமைந்துள்ளது இக்கோவிலின் மற்றொரு தனிச்சிறப்பாகும். இக்கோவிலில் பிரதோஷம், சிவராத்திரி போன்ற நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் வருகிறார்கள். பன்னிரண்டு ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய முக்கிய பரிகார தலமாகவும் இக்கோவில் அமைந்துள்ளது.
தேவார பாடல் பெற்ற சிவ தலங்களில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் அமைந்துள்ள அருள்மிகு சொர்ண காரீஸ்வரர் ஆலயமும் ஒன்று. இந்த கோவிலில் வேறு எங்குமே காண முடியாத தனிச் சிறப்பாக மூன்று சிவ லிங்கங்கள் மூலவராக, அதுவும் தனித்தனி பிரகாரங்களில் கோவில் கொண்டிருப்பதை காண முடியும்.
காஞ்சிபுரத்தில் உள்ள ஓணகாந்தன்தளி தலத்தில் மூன் சிவன் சன்னதிகளை தரிசிக்க முடியும். ஆனால் காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் ஆலயத்தில் சிவனுக்கு மட்டுமல்ல, தாயாருக்கும் மூன்று சன்னதிகள் அமைந்துள்ளன. அதே போல் இந்த ஆலயத்தில் மூன்று பள்ளியறைகள் உள்ளது வேறு எங்குமே இல்லாத தனித்துவமான சிறப்பம்சமாகும்.
இறைவன் :
சொர்ணகாளீஸ்வரர், சோமேசர், சுந்தரேஸ்வரர்.
இறைவி :
சொர்ணவல்லி, சவுந்தரநாயகி, மீனாட்சி
தலவிருட்சம் :
கொக்கு மந்தாரை
தீர்த்தம் :
கஜபுஷ்கரணி (யானைமடு), சிவகங்கைக்காளி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், கெளவுரி தீர்த்தம், ருத்ர தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சுதர்சன தீர்த்தம்.
தல வரலாறு :
இத்தலத்தின் புராணப் பெயர் திருக்காப்பேர். காளி தேவி இந்த தலத்திற்கு வந்து, சொர்ணகாளீஸ்வரரை வழிபட்டு, இங்குள்ள சப்த கன்னியர்களுடன் சேர்ந்து சண்டாசுரன் என்ற அசுரடன் போர் புரிந்து, அவனை வதம் செய்து, வெற்றிகண்டுள்ளார்.
காளி வழிபட்டு, போரிட்டு, வெற்றி பெற்ற தலம் என்பதனால் இந்த தலம் காளி கோவில் என்று மாறி, பிறகு காலப் போக்கில் காளையார்கோவில் என மாறி உள்ளது. காளீஸ்வரர் கோவில் என்பது காலப் போக்கில் மாறி காளையார்கோவில் என்று மாறியதாகவும் சொல்லப்படுகிறது.
பாண்டி நாட்டு சிவ தலங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவில் உள்ள பகுதி வரலாற்று சிறப்புமிக்க பகுதியாக விளங்குகிறது. ஆரம்பத்தில் பாண்டிய மன்னர்களால் ஆட்சி செய்து, பராமரிக்கப்பட்டு வந்த இக்கோவில், பிறகு சிவகங்கை மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்துள்ளது.
சிவகங்கையை ஆண்ட மருது சகோதரர்கள் உள்ளிட்ட பல மன்னர்களின் கோட்டையாக இருந்துள்ளது. இக்கோவில் பாண்டிய மன்னர்களால் 5 நிலைகளை கொண்ட 90 அடி உயர ராஜ கோபுரத்துடன் 18 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. பிறகு மருது சகோதரர்கள் ஆட்சி காலத்தில் 9 நிலைகளைக் கொண்ட 155 அரை அடி உயர ராஜகோபுரத்துடன் விரிவாக்கம் செய்து கட்டப்பட்டுள்ளது.
கோவில் அமைப்பு :
சிவகங்கை தேவஸ்தானத்தினரால் இக்கோவில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட கோவிலாக காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மூன்று பிரகாரங்களில் மூன்று மூலவர்களின் சன்னதிகள் தனித்தனியே அமைந்துள்ளது.
மூலவருக்கு அருகில் மூன்று தாயாருக்கும் தனித்தனி பிரகாரங்களில், தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்த பிரகாரங்கள் என மூன்று பள்ளியறைகளும் அமைந்துள்ளன. மூன்று மூலவர்களில் சொர்ணகாளீஸ்வரர் மட்டுமே தேவாரத்தில் பாடப்பட்டுள்ளார்.
பிரார்த்தனை :
சொர்ணகாளீஸ்வரர் கோவிலில் வந்து வழிபட்டால் செல்வ வளம் சிறக்கும் என சொல்லப்படுகிறது. தீர கடன் பிரச்சனைகள், திருமண தடை, குழந்தைப் பேரில் ஏற்படும் தடை ஆகியன இத்தல இறைவனை வழிபட்டால் நிவாரணம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருவிழாக்கள் :
சொர்ணகாளீஸ்வரருக்கு தை மாதம் பூசம் நட்சத்திரத்தன்று தேர் திருவிழா நடத்தப்படுகிறது. சோமேஸ்வரருக்கு வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. சொர்ணவல்லி தாயாருக்கு ஆடிப்பூரத்தன்று தெப்ப உற்சவம் நடத்தப்படுகிறது.