வேண்டிய வரம் அருளும் சின்னமனூர் வனதுர்க்கை

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வேண்டிய வரம் அருளும் சின்னமனூர் வனதுர்க்கை பற்றிய பதிவுகள் :

தேனி மாவட்டத்தில், சின்னமனூரில் இருந்து உத்தமபாளையம் செல்லும் சாலையை ஒட்டி, சுற்றிலும் வயல்கள் சூழ, கம்பீரமாக காட்சி தந்து, அருள்பாலிக்கிறாள் வனதுர்கை.

சுமார் 400 வருடங்களுக்கு முன்பு, நல்லுத்தேவன் பட்டி அருகே, இரு தரப்பு மக்களிடையே சண்டை சச்சரவுகள் இருந்து வந்தன. ஊரில் அமைதி நிலவ வேண்டி, ஊர்ப் பெரியவர்கள் சிலர் அம்மனை நோக்கி காட்டுப் பகுதியில் வேண்டினர். அதில் மகிழ்ந்த துர்கை, அவர்களுக்குள் இருந்த சண்டையை நீக்கி, சமாதானத்தை ஏற்படுத்தி அருளினாள். மேலும் வழக்கில் வெற்றி கிடைக்கச் செய்தாள். அன்று முதல், காவல்தெய்வமாகத் திகழ்கிறாள், வனதுர்கை!

அன்று, கண்டமனூர் ஜமீனின் ஆதிக்கத்தில் இருந்த நல்லுத்தேவன்பட்டி மக்கள், காவலுக்காக சின்னமனூருக்கு அனுப்பப்பட்டனர்.அங்கு தாங்கள் வழிபட்ட வனதுர்கைக்கு சின்னமனூரில் கோயில் எழுப்புவதற்காக, நல்லுத்தேவன்பட்டியிலிருந்து, பிடி மண் கொண்டு வந்து, கோயில் எழுப்பினார்களாம்!

இங்கே, திருமணம் ஆகாதவர்கள் ‘தாலி பாக்கியம்’ எனும் பீடத்தின் முன் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் விளக்கேற்றி வழிபட, திருமணத்தடை நீங்கும். அம்பாளின் முன்னே நின்று கொண்டு, ஏதேனும் காரியத்தை நினைத்துக் கொண்டு, கைகளை விலக்கி வைத்தபடி வணங்கும்போது, கைகள் ஒன்றிணைந்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை!

நீண்ட காலம் இழுபறியாக உள்ள நீதிமன்ற வழக்குகள், குடும்பப் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு விரைவில் தீர்வைத் தந்தருள்வாளாம். மேலும் கல்வியில் ஞானம் கிடைக்கச் செய்யும் கருணை கொண்டவள் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்!

ஆடி வெள்ளிக்கிழமைகளில் கூழ் சமர்ப்பித்தும், புரட்டாசி நவராத்திரியில் அன்னதானமிட்டும் வழிபட்டால், நினைத்தது நிறைவேறும்; 

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விசேஷ அபிஷேக ஆராதனையை தரிசித்தால், தொழில் வளம் பெருகும் என்பது ஐதீகம். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், இங்கு உள்ள காவல் தெய்வமான மாசானக் கருப்புசாமிக்கு கிடா வெட்டி, நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இங்கு அம்மன் வடக்குத் திசையை நோக்கி அருள்வது, தனிச்சிறப்பு.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top